சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய கார்
சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய கார்
சென்னை: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை இடி, மின்னலுடன் தொடர் கனமழை பெய்தது. இதில், கூடுவாஞ்சேரியில் இருந்து மாடம்பாக்கம், ஆதனூர் நோக்கி செல்லும் ரயில்வே மேம்பால சுரங்கப்பாதையில் அதிகளவு மழைநீர் தேங்கி நின்றது. அவ்வழியே நள்ளிரவில் வந்த கார் ஒன்று, சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் சிக்கிக்கொண்டு மூழ்கத் தொடங்கியது.
இதனால் காரை அங்கேயே விட்டுவிட்டு டிரைவர் சென்றுவிட்டார். நேற்று காலை கூடுவாஞ்சேரி ரயில்வே மேம்பால சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழைநீரை கம்ப்ரசர் டிராக்டர் மூலம் பைப்லைன் அமைத்து தண்ணீரை நகராட்சி ஊழியர்கள் வெளியேற்றினர். அப்போது சுரங்கப்பாதை மழைநீரில் பழுதாகி நின்ற காரும் வெளியே எடுக்கப்பட்டது. இதேபோல் கீரப்பாக்கம் ஊராட்சியில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் வெள்ளம் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.