📅 Wednesday, 08 July 2026 IST | ஆனி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu May 29, 2026 02:00 PM

சரியான திசையில் சூலூர் சிறுமி கொலை வழக்கு விசாரணை; ஐகோர்ட்

சரியான திசையில் சூலூர் சிறுமி கொலை வழக்கு விசாரணை; ஐகோர்ட்

சென்னை: கோவை சூலூரில் 10 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கு விசாரணை சரியான திசையில் செல்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சூலூர் அருகே வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி, கடந்த மே 21ம் தேதி கடத்தி, பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்தக் கொடூரச் செயலை செய்த பக்கத்து வீட்டுக்காரரான நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்திக்,33, அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர் மோகன்ராஜ்,31, ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் ஜூன் 5ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கை விசாரிக்க, மூத்த போலீஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணை குழு அமைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தல் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,'கோவை சூலூர் சிறுமி வழக்கில் மரபணு சோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். கோவை சிறுமி புகைப்படத்துடன் பரவும் வீடியோக்களை நீக்க இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவை சிறுமி கொலை வழக்கில் விரைந்து நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' இவ்வாறு குறிப்பிடப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் நாம் போலீசாரை சந்தேகிக்க முடியாது, எனக் கூறி, இந்த மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தனர்.