சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் ’சஸ்பெண்ட்’
சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் ’சஸ்பெண்ட்’ - சென்னை காவல்துறை அதிரடி
மதுபோதையில் இருந்த காவலர் சிறுவனை பாலியல்ரீதியாக துன்புறுத்தியது, விசாரணையில் தெரிய வந்த நிலையில், அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Published : May 29, 2026 at 3:13 PM IST
சென்னை: சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலரை சஸ்பெண்ட் செய்து சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
நாகர்கோவிலை சேர்ந்த 16 வயது சிறுவன் தனது பெற்றோர் மற்றும் அக்கா ஆகியோருடன் வசித்து வருகிறார். நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் படித்து வரும் சிறுவன், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு செல்ல வேண்டி, கடந்த 25ஆம் தேதி குடும்பத்துடன் சென்னைக்கு வந்துள்ளார்.
பின்னர் சிறுவன் கோடம்பாக்கம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் குடும்பத்துடன் தங்கி இருந்த நிலையில், மறுநாளான மே 26 அன்று குடும்பத்துடன் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு சென்று விட்டு, மீண்டும் உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து சிறுவன் இரு நாட்கள் தங்கி வேண்டும் என கேட்டதன்பேரில், பெற்றோர் அவரை உறவினர் வீட்டில் விட்டு, சொந்த ஊரான நாகர்கோவிலிலுக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று சிறுவன் உறவினர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, அவரது உறவினரான மாமா தனது நண்பரை வீட்டிற்கு வரவழைத்து, இருவரும் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். அப்போது உறவினருக்கு போதை தலைக்கேறிய நிலையில், அவர் உறங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதுபோதையில் இருந்த அவரது நண்பர், சிறுவனை எழுப்பி, மீதம் இருந்த மதுவை அவரது வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றி குடிக்க வைத்துள்ளார்.
மேலும் பாலியல்ரீதியாக துன்புறுத்தியதால் ஆத்திரமடைந்த சிறுவன், செய்வதறியாது அருகில் இருந்த டிவி ரிமோட்டை எடுத்து அந்த நபரை தாக்கி விட்டு, கூச்சலிட்டவாறே கதவை வெளியே பூட்டி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பின்னர் சிறுவன் அசோக் நகர் காவல் நிலையத்திற்கு சென்று, புகார் அளித்ததை தொடர்ந்து, போலீசார் சிறுவனை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று, அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை பிடித்து, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சிறுவனுக்கு மதுவை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தவர் காவலர் வேலப்பன் (35) என்பது தெரிய வந்தது. மேலும், அசோக் நகர் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் காவலர் வேலப்பன், கடந்த 2013 ஆம் ஆண்டு ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் பணிக்கு சேர்ந்ததும், தற்போது வடபழனி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.
தொடர் விசாரணையில், பாதிக்கப்பட்ட சிறுவனின் உறவினர், காவலர் வேலப்பன் நண்பர் என்பதால் அவரை வீட்டிற்கு அழைத்து இருவரும் மது அருந்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அப்போது போதை தலைக்கேறி காவலர் வேலப்பன், சிறுவனிடம் தவறான முறையில் நடந்து கொண்டது தெரிய வந்தது.
இதனையடுத்து அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலர் வேலப்பன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். மேலும் காவலர் வேலப்பன் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு, அவரை பணியிட நீக்கம் செய்து சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது.