📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 13, 2026 07:36 PM

சிறப்பாக வடிவமைக்கப்படும் தங்குவிடுதிக்காக இரு இடங்கள் விற்பனை

சிறப்பாக வடிவமைக்கப்படும் தங்குவிடுதிக்காக இரு இடங்கள் விற்பனை

மண்டாய் மற்றும் அப்பர் ஜூரோங் சாலையில் உள்ள பகுதிகள், சிறப்பாக வடிவமைக்கப்படும் தங்குவிடுதிகளைக் கட்டுவதற்காக 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் விற்பனை செய்யப்படவுள்ளன.

30 ஆண்டு குத்தகை அடிப்படையில் விற்பனை செய்யப்படவுள்ள அந்த இடங்கள், வெளிநாட்டு ஊழியர்களின் தங்குமிடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், போதுமான விடுதிப் படுக்கைகளை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதி என மனிதவள அமைச்சும் தேசிய வளர்ச்சி அமைச்சும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் இடம் மண்டாயில் உள்ள லோரோங் லாடா ஹிட்டம் 1ல் 10.7 ஹெக்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. அந்த இடத்தில் 15,000 விடுதிப் படுக்கைகளை கட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த இடத்திற்கான விற்பனையை 2027ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டிற்குள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மற்றோர் இடமான 529 அப்பர் ஜூரோங் சாலையில் 2 ஹெக்டர் பரப்பளவைக் கொண்டது. பொது நிறுவனங்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு, அந்தப் பகுதி 8,100 படுக்கைகளை வழங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

‘ஜூரோங் அப்பார்ட்மெண்ட்ஸ்’ என்ற விடுதி முன்பு இயங்கி வந்த அந்த இடம், 2027ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் விற்பனைக்கு விடப்பட உள்ளது.

புதிய விடுதி கட்டப்படுவதற்கு முன், இந்த இடத்தில் உள்ள தற்போதைய கட்டடங்கள் அகற்றப்படும்.

2025 இறுதியில் இருந்து சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விடுதிகளுக்காக நான்கு இடங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவை மொத்தம் 25,200 படுக்கைகளைக் கொண்டுள்ளதாகவும் கூட்டறிக்கை தெரிவித்தது.

ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள டெருசான் எட்ஜ், கிராஞ்சி குளோஸ், பயனியரில் உள்ள லோக் யாங் வே மற்றும் காலி பத்து ஆகியன அந்த நான்கு இடங்கள்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

மொத்தத்தில், தொடங்கப்படவுள்ள இரண்டு உட்பட, இந்த ஆறு தங்குவிடுதிகளும் 2030களின் தொடக்கத்தில் ஏறத்தாழ 48,300 படுக்கைகளை கூடுதலாக வழங்கும் என்கிறது கூட்டறிக்கை.

இவ்வாண்டு ஜூன் மாத நிலவரப்படி, வெளிநாட்டு ஊழியர்களுக்காகக் கிட்டத்தட்ட 467,000 படுக்கைகளை வழங்கக்கூடிய 1,600 தங்குவிடுதிகள் இருந்தன.