சிங்கப்பூரில் கறி பஃப் வாங்குவதற்காக சீனாவிலிருந்து வந்ததாகக் கூறிய நபரால் பலர் வியப்பு
சிங்கப்பூரில் கறி பஃப் வாங்குவதற்காகவே சீனாவிலிருந்து விமானத்தில் வந்ததாக ஒரு நபர் கூறியதால் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கறிபஃப் அடங்கிய பெட்டி ஒன்றை வாங்குவதற்காக தனக்குப் பணம் கொடுத்து சிங்கப்பூருக்கு வாடிக்கையாளர் ஒருவர் அனுப்பி வைத்ததாக அந்த நபர் கூறினார்.
‘மேய்த்வான்’ என்ற சீனாவின் மிகப்பெரிய உணவு விநியோகிப்பு நிறுவனத்தின் சீருடை அணிந்திருந்த அவரது காணொளி சீன சமூக ஊடகத் தளமான ‘ஷியாவோஹோங்ஷூ’வில் பதிவேற்றப்பட்டிருந்தது.
மஞ்சள் நிறச் சட்டையும் தலைக்கவசமும் அணிந்து, சிங்கப்பூரின் பாயா லேபார் குவார்ட்டர் மாலில் உள்ள ‘ஹோங் லிம் கறி பஃப்’ கடையில் ஒரு பெட்டி கறி பஃப்களை அவர் வாங்குவதுபோல காணொளியில் காட்டப்பட்டிருந்தது.
காணொளியைப் பதிவு செய்த நபரிடம் பேசிய அவர், வாடிக்கையாளர் ஒருவர் தன்னை சிங்கப்பூருக்கு அனுப்புவதற்காக சுமார் 2,400 யுவான் (S$450) செலவழித்ததாகக் கூறினார்.
உருளைக்கிழங்கு, சார்டின் கறி பஃப் அடங்கயி ஒரு பெட்டியின் விலை $13.50.
இதற்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது என்பதையோ வாடிக்கையாளர் யார் என்பதையோ அந்த நபர் தெரிவிக்கவில்லை.
செப்டம்பர் 6ஆம் தேதி தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த ஹோங் லிம் கரி பஃப் நிறுவனத்தின் நிறுவனர் விக்டோரியா லோ, 37, இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 31 அன்று நடந்ததாகக் கூறினார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
மேண்டரின் மொழி பேசத் தெரியாத தனது பகுதி நேர ஊழியர், அந்த நபர் கடைக்கு வந்தபோது உதவிக்காக தன்னை அழைத்ததாக அவர் தெரிவித்தார்.
அந்த நபர் சீனாவில் பயன்படுத்தப்படும் ‘வீசாட் பே’ அல்லது ‘அலிபே’ மூலம் பணம் செலுத்த முடியுமா என்று கேட்டார். ஆனால் அந்தக் கட்டண முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கடையில் இருந்த ஊழியர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அனைத்துலக விநியோகிப்பு சேவைகள் எதையும் தமது நிறுவனம் வழங்கவில்லை என்று சீனாவின் உணவு விநியோகிப்பு நிறுவனமான மேய்த்வான் தெளிவுபடுத்தியுள்ளது.
சீன மொழி நாளிதழான ‘லியான்ஹ சாவ்பாவ்’ செப்டம்பர் 5ஆம் தேதி வெளியிட்ட செய்தியில், எல்லைத் தாண்டிய உணவு விநியோகிப்பு அல்லது பொருள்களை வாங்கித் தரும் சேவைகளை தாங்கள் தொடங்கவில்லை என்று மேய்த்வான் கூறியுள்ளது.
மேய்த்வான் செயலியில் உள்ள உரையாடல் தளம் வழியாக லியான்ஹ சாவ்பாவ் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டிருந்தது.
அதற்குப் பதிலளித்த அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை ஊழியர் ஒருவர், விநியோகிப்பு ஊழியரை சிங்கப்பூருக்கு விமானத்தில் அனுப்பி வைத்ததாகக் கூறப்படுவதை மறுத்தார்.
அனைத்துலக சேவைகளை தற்போது வழங்கவில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.