📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 17, 2026 02:03 PM

சிங்கப்பூரில் சீன மருத்துவ அங்கீகாரம்

சிங்கப்பூரில் சீன மருத்துவ அங்கீகாரம்

பாரம்பரிய சீன மருத்துவச் சேவை வழங்குநர்களுக்கான தன்னார்வ அங்கீகாரத் திட்டம் ஒன்றை சிங்கப்பூர் அறிமுகப்படுத்துகிறது.

அத்துடன், பொது மருத்துவர்களுடன் இணைந்து பணியாற்றும் அங்கீகரிக்கப்பட்ட சீன மருத்துவ நிபுணர்கள் ஊடுகதிர்களுக்குப் பரிந்துரைக்க அனுமதி அளிக்கப்படலாமா என்பது குறித்தும் ஆராயப்படும்.

பாரம்பரிய சீன மருத்துவத்தை முதன்மை மருத்துவத் துறைக்குள் விரிவுபடுத்தவும் ஒருங்கிணைந்த மருத்துவ முறையை ஆராயவும் மேற்கொள்ளப்படும் விரிவான முயற்சிகளின் ஒரு பகுதியாக அந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சீன மருத்துவத்துக்கான உள்ளூர் பட்டப்படிப்பு, முதுகலை வகுப்புகளைத் தொடங்குதல், சீன மருத்துவச் சிகிச்சைகளை முதன்மை மருத்துவப் பராமரிப்புக்குள் கொண்டு வருவதற்கான சோதனைக் கட்ட ஆய்வுகள், ‘ஹெல்தியர் எஸ்ஜி’ என்ற தடுப்புப் பராமரிப்புத் திட்டத்தில் சீன மருத்துவம் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை ஆராய்தல் போன்ற பல்வேறு முயற்சிகளுடன் இணைந்து இவை முன்னெடுக்கப்படுகின்றன.

சனிக்கிழமை (அக்டோபர் 17) தொடங்கப்பட்ட பாரம்பரிய சீன மருத்துவ அங்கீகாரத் திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக ஐந்து நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படவுள்ளது.

சிராங்கூனில் உள்ள குவொங் வாய் ஷியூ டிசிஎம் நிலையம், என்டியூ சீன மருத்துவ நிலையம், சிங்கப்பூர் சுங் ஹுவா மருத்துவ நிறுவனத்தின் தலைமையகம், சிங்கப்பூர் தோங் சாய் மருத்துவ நிறுவனத்தின் தலைமையகம், நொவீனாவில் உள்ள தாம்சன் சீன மருத்துவ நிலையம் ஆகியவையே அவை.

“மருத்துவப் பயிற்சி உரிமத்தையும் தாண்டிய ஓர் அங்கீகாரத்தை அமைப்பதே எங்கள் நோக்கமாகும்,” என்று அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற்ற 23வது உலகச் சீன மருத்துவ மாநாட்டின் தொடக்க விழாவில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.

வலுவான நிர்வாகம், சீரான தரநிலைகள், பொதுமக்களின் நம்பிக்கையை உறுதிசெய்வதில் தங்களுக்குள்ள அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கான கடப்பாட்டை அந்த அங்கீகாரம் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

“இதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட சீன மருத்துவ நிபுணர்களும் நிறுவனங்களும் சுகாதார அமைச்சுடன் இணைந்து, எதிர்காலப் பராமரிப்பு முறைகளை வடிவமைக்கவும் நாட்டின் பொதுச் சுகாதாரப் பராமரிப்புத் திட்டங்களில் பங்காற்றவும் வாய்ப்புகள் உருவாகும்,” என்றும் திரு ஓங் கூறினார்.