சிங்கப்பூரில் 70 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்கிறது ‘யுபிசாஃப்ட்’
‘அசாசின்ஸ் க்ரீட்’ உள்ளிட்ட புகழ்பெற்ற கணினி விளையாட்டுத் தொடர்களைத் தயாரிக்கும் பிரான்சின் ‘யுபிசாஃப்ட்’ நிறுவனம் சிங்கப்பூரில் 70 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக புதன்கிழமை (அக்டோபர் 14) அறிவித்தது.
இழப்பைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக பின்லாந்தில் உள்ள ஸ்டூடியோவையும் அது மூடுகிறது. இதனால் அங்குள்ள 52 ஊழியர்கள் பாதிக்கப்படக்கூடும்.
சிங்கப்பூர் கிளை நிறுவனத்தின் தயாரிப்புத் தேவைகளுக்கு ஏற்ப இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்தது. எனினும், உலகளாவிய செயல்பாடுகளில் சிங்கப்பூர் ஸ்டூடியோ தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கும் என்று அது குறிப்பிட்டது.
இக்கிளை, ஜூலை மாதத்தில் வெளியிட்ட ‘அசாசின்ஸ் க்ரீட் பிளாக் ஃபிளாக் ரிசின்ஸ்ட்’ விளையாட்டு 3.5 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
2025-26 நிதியாண்டில் 1.5 பில்லியன் யூரோ (ஏறக்குறைய S$2.2 பில்லியன்) நிகர இழப்பைச் சந்தித்ததைத் தொடர்ந்து, செலவுகளைக் குறைத்து மீண்டும் லாபப் பாதைக்குத் திரும்ப நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அடுத்த இரண்டாண்டுகளில் குறைந்தது 200 மில்லியன் யூரோ செலவினங்களைக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிங்கப்பூர் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் உள்ளிட்ட ஆதரவுகளை வழங்க தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ், இ2ஐ, திறன், ஊழியரணி மேம்பாட்டு முகமை ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றி வருவதாக நிறுவனம் தெரிவித்தது.