தவெக அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து
தவெக அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து -சென்னையில் திமுக ஆர்ப்பாட்டம்...!
சென்னை: எல் நினோ மழையின் தீவிர அபாயங்களை அலட்சிப்படுத்தி வரும் தவெக அரசை கண்டித்தும் மாநகராட்சி பிரதிநிதிகளின் மக்கள் நலப்பணிகளை முடக்க நினைக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் கண்டித்தும் சென்னை தெற்கு, மேற்கு, கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சென்னை சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவு அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை வகித்தார். சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன், மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், துணை அமைப்பு செயலாளர் தாயகம் கவி, முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது: அண்ணா அறிவாலயத்துக்கு வந்த மு.க.ஸ்டாலின், பருவமழை தொடங்குவதைக் கேட்டு வருத்தப்பட்டு, ‘‘இன்னும் சில நாட்களில் மழை வரும், சென்னை என்ன ஆகுமோ? அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது’’ என்று கூறி 48 மணி நேரத்தில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்ய சொன்னார். இந்த அறிவிப்பு வந்த உடனேயே மாநகராட்சி அதிகாரிகளைக் கூட்டி ஒரு கூட்டத்தை நடத்தினார்கள். அந்தக் கூட்டத்திற்கு ஆறாவது அறிவை அடகு வைத்துவிட்டுப் பேசும் ஒருவர் தலைமை தாங்கியுள்ளார்.
அவருக்கு லாட்டரி சீட்டு அடிப்பதைத் தவிர ஒன்றும் தெரியாது. இங்கு ஆட்சி செய்யும் தற்குறிகளுக்கு மக்களை பற்றி ஒன்றும் தெரியாது. நாம் சாகும்வரை இங்கு இருப்போம்; ஆனால் மற்றவர்கள் இங்கு வந்து ஆட்சி நடத்தி விட்டு ஆந்திராவிற்கு ஓடும் கூட்டம் தான் தமிழ்நாட்டில் தற்போது ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறது. மழை வெள்ளம் வந்தபோது மக்களை பாதுகாத்த இயக்கம் திமுக. சென்னையில் உள்ள மக்கள் தற்பொழுது எதனையும் சொல்ல முடியாமல் வேதனையில் உள்ளனர்.
பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று பாடினார்கள். தற்போது பாட்டிலுக்கு ரூ.30 உயர்த்தி உள்ளனர். அரசு ஊழியர்களும் மக்களும் உண்மையை உணர்ந்துவிட்டார்கள். இதே நிலைமைக்கு சென்றால் தமிழ்நாடு திவால் ஆகிவிடும். ரூ.2000 மின்சார கட்டணம் வந்த இடத்தில், தற்பொழுது ரூ.20 ஆயிரம் மின்சார கட்டணம் வருகிறது. ஆந்திராவில் எங்கு பேரம் நடந்தது, எங்கு தங்கி இருந்தீர்கள், யார் முதலமைச்சரை சந்தித்தார்கள் என்ற விவரம் எங்களிடம் உள்ளது. ஏழரை நாட்டு சனி நம்மளை விட்டு சென்றுவிட்டது. ஏழரை நாட்டு சனியன்களுக்கு கொடுத்த இடத்தில் நாம் நின்றிருந்தால் நாம் வெற்றி பெற்று கோட்டைக்கு சென்று இருப்போம். இந்தச் சனியன்களை சுமந்ததால் தான் நம்மால் கோட்டைக்கு போகமுடியவில்லை. இப்போது மதுராந்தகத்தில் ஒரு தரப்பு மாற்றிப்போட்டதுபோல் நாடே மாறும். விரைவில் நமது ஆட்சி அமையும்.இவ்வாறு பேசினார்.
சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சென்னை மேயர் பிரியா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம், ஆர்.டி.சேகர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை குழு தலைவருமான திருச்சி சிவா கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மண்டல குழு தலைவர்கள், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.