📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 10, 2026 08:04 PM

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

பண்டார் ஸ்ரீ பகவான்: சிங்கப்பூருக்கும் புருணைக்கும் இடையிலான 50 ஆண்டுகாலத் தற்காப்பு உறவைக் கொண்டாடும் வகையில், புருணையின் முவாரா கடற்படைத் தளத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 10) கூட்டுப் படை அணிவகுப்பு நடைபெற்றது.

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், புருணை மன்னர் ஹசனால் போல்கியா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற அந்த அவணிவகுப்பில், சிங்கப்பூர் ஆயுதப்படை, புருணை ஆயுதப்படைகளைச் சேர்ந்த 256 வீரர்கள் பங்கெடுத்தனர்.

இரு நாடுகளின் தரைப்படை, கடற்படை, விமானப் படைகளின் தற்காப்புத் தளவாடங்களும் அணிவகுத்தன. இரு நாட்டு ஹெலிகாப்டர்களின் வான்வழிக் காட்சியும் கடற்படைக் கப்பல்களின் அணிவகுப்பும் இடம்பெற்றன.

அணிவகுப்பைத் தொடர்ந்து, இரு நாடுகளின் 50 ஆண்டுகால தற்காப்பு மைல்கற்களை விளக்கும் நினைவுப் புகைப்படக் கூடத்தைப் பிரதமர் வோங்கும் புருணை மன்னரும் திறந்து வைத்துப் பார்வையிட்டனர்.

பின்னர், தெம்புரோங்கில் பயிற்சி பெற்று வரும் சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்களைப் பிரதமர் வோங் நேரில் சந்தித்து உரையாடினார்.

“புருணையுடனான சிங்கப்பூரின் சிறப்பு வாய்ந்த நட்புறவைச் சிங்கப்பூர் பெரிதும் மதிப்பதுடன், எதிர்காலத்திலும் இந்த உறவை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது,” என்று பிரதமர் வோங் தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் உள்ளிட்ட இருநாடுகளின் உயர்மட்ட ராணுவ அதிகாரிகளும் நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்தப் பொன்விழாக் கொண்டாட்டங்களின் நிறைவு விருந்து வரும் நவம்பர் 21ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது. உணவு, எரிசக்திப் பாதுகாப்பு, வணிகப் பங்களிப்பு போன்ற பிற துறைகளிலும் இரு நாடுகளும் கூட்டுறவைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகின்றன.