சிங்கப்பூர் மோசடி: $7.5 மி. இழப்பு, 254 சந்தேக நபர்கள்
சிங்கப்பூரில் நடந்த 652 மோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள சந்தேகத்தின்பேரில் 254 நபர்கள் காவல்துறை விசாரணையில் உதவிவருகின்றனர்.
அவர்களில் 151 ஆண்களும் 103 பெண்களும் அடங்குவர். அவர்கள் நேரடியாக மோசடி செய்தது அல்லது பணப் பரிமாற்றத்துக்கு உதவியது ஆகிய குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகின்றனர்.
அந்த நபர்கள் சார்ந்த மோசடிகளில் பாதிக்கப்பட்டோர் $7.5 மில்லியன் வரை இழந்ததாகக் காவல்துறை வியாழக்கிழமை (செப்டம்பர் 10) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
மின் வர்த்தகம், தூண்டுக் களவு, வேலை வாய்ப்பு, அரசாங்க அதிகாரிபோல் ஆள்மாறாட்டம், போலி முதலீடுகள், அதிர்ஷ்டக் குலுக்கு போன்ற பலவகை மோசடிகளில் சம்பந்தப்பட்டதாகச் சந்தேக நபர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.
விசாரிக்கப்படுவோர் 15 முதல் 79 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரையில் இணையத் தளபத்தியமும் காவல்துறையின் ஏழு நிலப் பிரிவுகளும் இரண்டு வாரங்களாக நடத்திய சோதனைகளுக்குப் பிறகு இந்த விசாரணை நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஏமாற்றுதல், கள்ளப் பணப்பரிவர்த்தனை செய்தல், உரிமம் இன்றி கட்டணச் சேவை வழங்குதல் போன்ற பலவகை குற்றங்கள் குறித்து அந்த 254 நபர்களும் விசாரிக்கப்படுகின்றனர்.
ஏமாற்றும் குற்றம் புரிந்தோருக்கு 10 ஆண்டுகள் சிறையும் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும். கள்ளப் பணப்பரிவர்த்தனை செய்தோருக்கு 10 ஆண்டுகள் சிறையும் $500,000 அபராதமும் அல்லது இரண்டு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.
உரிமம் இன்றி கட்டணச் சேவைகள் வழங்கும் நிறுவனத்தை நடத்துவோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை, $125,000 அபராதம் அல்லது இரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
மோசடிக்காரர்கள், மோசடிக் கும்பல் உறுப்பினர்கள், மோசடிக் கும்பல்களுக்கு ஆள் சேர்ப்போர் ஆகியோருக்கு ஆறு முதல் 24 பிரம்படிகள் தண்டனையின் அங்கமாகக் கட்டாயமாக விதிக்கப்படும்.
மோசடிக்கு பிரநிதியாக கள்ளப் பணத்தை மாற்ற உதவுவோருக்கும் கைப்பேசி சிம் அட்டைகளை வழங்குவோருக்கும் சிங்பாஸ் மறைச்சொல் அடையாளத்தை பகிர்வோருக்கும் 12 பிரம்படிகள் வரை தண்டனையாக விதிக்கப்படலாம்.
மோசடிகள் குறித்து மேல்விவரங்கள் அறிய விரும்புவோர் www.scamshield.gov.sg அல்லது மோசடிகளுக்கான 1799 என்ற உதவி எண்களை (ScamShield Helpline) அழைக்கலாம்.
மோசடிகள் பற்றிய தகவல்கள் வழங்க விரும்புவோர் 1800-255-0000 என்ற காவல்துறை நேரடி எண்களைத் தொடர்புகொள்ளலாம் அல்லது www.police.gov.sg/i-witness என்ற இணையப் பக்கத்தில் விவரங்களை அளிக்கலாம்.
அனைத்துத் தகவல்களும் ரகசியமாக வைக்கப்படும் என்று காவல்துறை கூறியது.