சிங்கப்பூர் மாணவர்கள் வாசிப்பில் உச்சம்: பிஐஎஸ்எ ஆய்வு
எதிர்காலத்தையும் பலவித சவால்களையும் மாணவர்கள் திறம்படக் கையாளக் கல்வித் திட்டங்கள் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன என்பதை அறிய நடந்த அனைத்துலக ஆய்வில், சிங்கப்பூரின் 15 வயது மாணவர்கள் உச்சநிலையை எட்டியுள்ளனர்.
வாசிப்புப் பழக்கத்தில் முதலிடத்தையும், கணிதம், அறிவியல் ஆகிய இரண்டில் இரண்டாம் இடத்தையும் அனைத்துலக மாணவர் மதிப்பீட்டுத் திட்டம் 2025 (பிஐஎஸ்எ) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் சிங்கப்பூர் மாணவர்கள் பெற்றுள்ளனர்.
அந்த மதிப்பீடு இங்குள்ள 157 பள்ளிகளில் பயிலும் 6,551 மாணவர்களிடம் 2025ல் செய்யப்பட்டது.
கணினிகளில் வடிவமைக்கப்பட்ட பற்பல நிகழ்காலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் சிங்கப்பூர் இரண்டாம் நிலையில் வந்தது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட அப் பிரிவில் மிகவும் சிக்கலான வகையில் கேள்விகள் வழங்கப்பட்டன. அக்கேள்விகளைப் பிரித்து, வகுத்து, உண்மையான உலகப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைத் தேடி கணினியின் செயல்முறைகளைக் கொண்டு 15 வயது மாணவர்கள் பதில்களை (அல்கோரிதம்) வழங்கும் விதமாக அப்பிரிவு அமைக்கப்பட்டிருந்தது.
அந்த ஆக அண்மைய சோதனைப் பிரிவில் வரலாறு காணாத அளவில் 91 நாடுகள் பங்கேற்றன. அது 2022ல் பங்கேற்ற 81 நாடுகளை விட அதிகமாகும். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பொருளியல் ஒத்துழைப்பு மேம்பாட்டு அமைப்பு (ஒஇசிடி) அந்த ஆய்வுச் சோதனைகளை நடத்திவருகிறது. அதன் முடிவுகள் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) வெளியிடப்பட்டன.
அறிவியலில் அதிக கவனம் செலுத்திய ஆய்வு, கணிதத்தையும் வாசிப்பையும் உபரிப் பகுதிகளாக வைத்திருந்தது. கணினியின் செயல்பாட்டைக்கொண்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் மாணவர்களின் ஆற்றலைக் கணித்திட முதன்முறையாக மின்னிலக்கக் கல்விப் பிரிவும் ‘பிஸா 2025’ ஆய்வில் சேர்க்கப்பட்டது.
சீனாவும் சிங்கப்பூரும் அறிவியல், கணிதம் ஆகிய துறைகளிலும் வாசிப்பிலும் உச்ச நிலையை எட்டின. கணிதத்திலும் அறிவியலிலும் சீனா முதலிடத்தைப் பெற்றது. வாசிப்பில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்தது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
எஸ்டோனியா, ஜப்பான், தென்கொரியா, மக்காவ், தைவான், பிரிட்டன் ஆகிய நாடுகளும் மூன்று கல்விப் பிரிவுகளுக்குமான முதல் 10 நிலைகளை அடைந்தன.
கணினித் திறன் வடிவமைப்புப் பிரிவில் தைவான் முதலிடத்தை அடைந்தது. அப்பிரிவில் கணினியைக் கொண்டு சிறப்பான தீர்வுகளை மாணவர்கள் வடிவமைத்தல், தரவுகளை ஆய்வுக்குட்படுத்துதல் போன்றவையும் அடங்கும்.
வாசிப்பு, கணிதம், அறிவியல் ஆகிய மூன்று பிரிவுகளிலும் ஒட்டுமொத்தமாகச் சிறப்பாக செயல்படும் மாணவர்கள் விகிதத்தில் 15 விழுக்காட்டுடன் முதலிடத்தில் வந்த சிங்கப்பூர் குறித்து கல்வி அமைச்சு கருத்துரைத்தது.
ஆய்வாளர்களான ஒஇசிடி அமைப்பின் சராசரி அளவான 3 விழுக்காட்டைவிட சிங்கப்பூர் கல்வித் திட்டம் ஐந்து மடங்கு ஏற்றம் அடைந்துள்ளது என்று அமைச்சு சுட்டிக்காட்டியது.