📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 04, 2026 03:04 AM

சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்: 85 ஆண்டுகால சமூக சேவை

சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்: 85 ஆண்டுகால சமூக சேவை

கடையநல்லூரிலிருந்து சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்த இந்திய முஸ்லிம் சமூகத்தினருக்கும் சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் சமூகத்தினருக்கும் கடந்த 85 ஆண்டுகளாகச் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் பல்வேறு வகைகளில் உதவிவந்துள்ளது.

அவ்வமைப்பு சமூகத்திற்குப் பல ஆண்டுகள் சேவையாற்றியதன் நிறைவை டௌன்டவுன் ஈஸ்ட் டி’மார்கி அரங்கில் செப்டம்பர் 12ஆம் தேதி கொண்டாடியது. அமைப்பின் வரலாறு, சமூகச் சாதனையாளர்கள், நிகழ்கால, எதிர்காலத் திட்டங்கள் ஆகியவற்றை இக்கட்டுரை விவரிக்கிறது.

கடந்துவந்த பாதை

சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் பயணம் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கியது. அக்காலகட்டத்தில் தென்னிந்தியாவின் கடையநல்லூரிலிருந்து தமிழ் முஸ்லிம் சமூகத்தினர் புதிய வாய்ப்புகளைத் தேடி சிங்கப்பூருக்கு வந்தடைந்தனர்.

அவர்களில் பலர் காலனித்துவ வர்த்தக மாற்றங்களால் பாதிக்கப்பட்ட திறமையான நெசவாளர்கள். அவர்கள் தஞ்சோங் பகார் பகுதியில் குடியேறி, கூலித் தொழிலாளர்களாகவும் மசாலாப் பொருள் வணிகர்களாகவும் பணியாற்றினர்.

முறையான ஆதரவு அமைப்புகள் இல்லாததால் அவர்கள் உறவுமுறை சார்ந்த சுய உதவிக் குழு ஒன்றை உருவாக்கினர். அதுவே பிற்காலத்தில் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் உருவெடுப்பதற்கான அடித்தளத்தை அமைத்தது.

1941ஆம் ஆண்டு இவ்வமைப்பு ‘கடையநல்லூர் முஸ்லிம் லீக்’ என்ற பெயருடன் அதிகாரத்துவச் சங்கமாக மாறியது. அக்கட்டத்தில் தஞ்சோங் பகார், திராஸ் ஸ்திரீட், கீ செங் ஸ்திரீட் ஆகிய வட்டாரங்களில் 400க்கும் மேற்பட்ட கடையநல்லூர் முஸ்லிம் குடும்பங்கள் வசித்துவந்ததாக நம்பப்படுகிறது.

வேகமாக மாறிவந்த சமூகத்தில் தங்களுக்கான இடத்தைத் தேடும் தங்கள் சமூகத்தினருக்கு உதவுவதே அமைப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது.

அதைத் தொடர்ந்து, தமிழ் முஸ்லிம் பிள்ளைகளுக்கு முறையான கல்வி கற்பிக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்துடன் 1946ல் உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளியைச் (இந்நாள் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்) சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் நிறுவியது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

அம்முயற்சியை முன்னின்று வழிநடத்தியவர் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் முதல் பொதுச் செயலாளர் அ.நா.மைதீன்.

அப்பள்ளி பின்பு 1960ல் தென்கிழக்காசியாவின் முதல் உயர்நிலைப் பள்ளியாக உருவெடுத்தது.

கடையநல்லூர் முஸ்லிம் லீக், கல்விக்கும் தேசத்திற்கும் ஆற்றிய சேவையைப் பாராட்டும் வண்ணம் 1952ல் அப்பள்ளிக்கு அருகிலிருந்த தெருவிற்குக் ‘கடையநல்லூர் ஸ்திரீட்’ எனப் பெயர் மாற்றப்பட்டது.

சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் சமூகத்தினர் அதிகம் ஒன்றுகூடி வழிபடும் தளமாக ஜாமிஆ சூலியா பள்ளிவாசல் அமைந்தது.

1977ஆம் ஆண்டு அவ்வமைப்பு ‘சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்’ எனப் பெயர் மாற்றம் கண்டது.

பயணம் செய்யும் பாதை

நூற்றாண்டை நோக்கித் துடிப்புடன் நகரும் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் தற்போது அதன் உறுப்பினர்களுக்கும் ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம் சமூகத்திற்கும் சேவையாற்றும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

‘சலாம், நீங்கள் நலமா?’

தாங்கள் சந்தித்த இன்னல்களை அடுத்த தலைமுறையினர் எதிர்கொள்ளக்கூடாது என்ற தொலைநோக்குச் சிந்தனையோடு அரும்பாடுபட்ட மூத்தோரைப் பேணும் இலக்குடன் அத்திட்டம் உருவாக்கப்பட்டது.

வாரந்தோறும் நடைபெறும் சந்திப்புகளில் இதுவரை மொத்தம் 120 மூத்த உறுப்பினர்களுடன் பேசியிருப்பதாக அமைப்பு தெரிவித்தது.

இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய அங்கமாக மூத்த உறுப்பினர்களின் சேவைகளைச் சிறப்பிக்கும் விதமாக அவர்களின் இளமைக்கால நிழற்படங்களும் அவர்களின் சேவைகளைக் குறித்த தகவல்களும் அமைப்பின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்படுகின்றன.

இம்முயற்சியை அமைப்பின் மூத்த உறுப்பினர் அபுல் ஹசன் வழிநடத்துகிறார். அவருக்கு ஆதரவாகச் செயற்குழுவின் மற்ற உறுப்பினர்கள் செயல்படுகின்றனர்.

பகுதி நேர மதரசா வகுப்புகள்

கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் குழந்தைகள், இளையர்கள், பெரியவர்கள் என அனைத்து வயதினருக்கும் பகுதிநேர மதரசா வகுப்புகளை வழங்குவதில் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.

அமைப்பின் பாடத்திட்டங்களை முயிஸ், பெர்காஸ் அமைப்புகளின் சான்றிதழ் பெற்ற சமய ஆசிரியர்கள் நடத்துகின்றனர்; இது சமயத் தெளிவைக் கொடுப்பதோடு சமுதாயத்திற்குத் தேவையானவற்றை மாணவர்கள் கற்றுக்கொள்வதையும் உறுதி செய்கிறது.

வலுவான இஸ்லாமிய அடித்தளத்தை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இவ்வகுப்புகள், பல்வேறு கற்றல் தேவைகளை நிறைவேற்றும் விதமாக அன்பு, பண்பாடு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட சூழலில் கற்பிக்கப்படுகின்றன.

அமைப்பின் வளாகத்திலும் சிங்கப்பூரின் வடக்கு, மத்தியப் பகுதிகளில் அமைந்துள்ள இரண்டு பள்ளிவாசல்களிலும் இவ்வகுப்புகள் நடைபெறுகின்றன.

தொடக்கக்கால மாணவர்கள் முதல் தேர்ந்த மாணவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற வகையில், வாரநாள்களிலும் வார இறுதிநாள்களிலும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

சமூக நலத்திட்டங்கள்

மக்களுக்கு நிலையான நலத்திட்டங்களை உருவாக்க மெண்டாக்கியின் சமூகத் தலைவர்கள் மன்றத்துடன் இணைந்து சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் பணியாற்றுகிறது.

தன்னம்பிக்கை, மன உறுதி, சமூக வளர்ச்சி போன்றவற்றை வலுப்படுத்தும் நோக்கில் பெண்களுக்கான நலத்திட்டங்கள், மின்னிலக்கத் தொழில்நுட்பத் திறன்களையும் நடைமுறை வாழ்க்கைத் திறன்களையும் கற்பிக்கும் பயிலரங்குகள் போன்றவை இத்திட்டங்களில் அடங்குகின்றன.

2019ஆம் ஆண்டிலிருந்து, சமூகத் தலைவர்கள் மன்றத்தின்கீழ் பெண்களுக்காக அடிப்படை ஆங்கிலப் பயிற்சிகள் உட்பட ஏராளமான வகுப்புகளைச் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் ஏற்பாடு செய்துவந்துள்ளது.

குடும்ப தினம்

சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் குடும்ப தினக் கொண்டாட்டம் அதன் நிகழ்ச்சிகளில் முக்கிய ஒன்றாக விளங்குகிறது.

ஆண்டுதோறும் நடைபெறும் கொண்டாட்டத்தில் ஏறக்குறைய 1,000 பேர் உற்சாகமாகக் கலந்துகொள்கின்றனர். சிறுவர்கள், மூத்தோர் என அனைவரும் ஒன்றுகூடி பழைய சம்பவங்களை நினைவுகூரவும் புதிய நினைவுகளை உருவாக்கவும் அக்கொண்டாட்டங்கள் உதவுகின்றன.

தமிழ்மொழி விழா

மாணவர்கள், இளையர்கள், பெரியவர்கள் என அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், பயிலரங்குகள், சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள் வாயிலாக மொழி, பண்பாட்டின் மீதான மதிப்பை அமைப்பின் திட்டங்கள் வளர்க்கின்றன.

மேற்கல்விக்கு உதவி தேவைப்படும் மாணவர்களுக்குப் புதிதாக ‘அசென்ட்’ என்ற உதவிநிதியைச் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் அறிமுகப்படுத்தியுள்ளது.

மாணவர்களுக்கு உதவி கிட்டாத சூழலில் அவர்களுக்குக் கைகொடுக்கும் நோக்கத்துடன் இறுதிக்கட்ட உதவிநிதியாக அது விளங்குகிறது.

அந்நிதியின்கீழ் தற்போது $250,000 நன்கொடை திரட்டப்பட்டுள்ளது. அக்கல்விநிதியை முஸ்லிம்கள் அல்லாத மாணவர்களும் கோரலாம் என்று அமைப்பின் தலைவர் ராஜா முகம்மது கூறினார்.

உதவிநிதியைப் பெறும் மாணவர்கள் அமைப்பிற்குப் பல்வேறு வகைகளில் ஈராண்டுகளுக்குப் பங்களிக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலப் பாதை

அடுத்த சில ஆண்டுகளில் சமூகத்திற்கு மேலும் துடிப்புடன் பங்காற்ற சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளது.

இளையர் ஒருங்கிணைப்பு

நூற்றாண்டை நோக்கிய பயணத்தில் இளையர்களின் பங்களிப்பு, அமைப்பிற்கு முக்கியமானதாக விளங்குகிறது என்று திரு ராஜா முகம்மது சுட்டினார்.

“இன்று இளையர்களிடையே சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் சமூகத்துடனான பந்தமும் பிணைப்பும் முந்தைய தலைமுறையினரை ஒப்பிடுகையில் சற்றுக் குறைவாகவே உள்ளது.

“அந்நிலையை மாற்றும் நோக்கத்துடன் புதிய முயற்சிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன,” என்று அவர் கூறினார்.

அமைப்பில் இணைய விரும்பும் இளையர்களின் திறன் மதிப்பிடப்பட்டு அவர்களுக்கு உரிய பொறுப்புகளும் திட்டங்களும் வழங்கப்படுமென அவர் உறுதியளித்தார்.

அவ்வாறு இணையும் இளையர்களுக்குச் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் வரலாறும் பண்பாடும் சொல்லித்தரப்படும். பின்னர் அவர்கள் அமைப்பில் ஒன்றிணைக்கப்படுவர்.

உத்திபூர்வத் திட்டப் பிரிவு

சமூகத்திற்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை முன்னரே கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளைத் திட்டமிடும் குழுவாக அப்பிரிவு இயங்கும்.

அமைப்பின் செயல்பாடுகளும் இயக்கமும் அப்பிரிவின் வழிகாட்டுதலின்படி நடைபெறுமென்று திரு ராஜா முகம்மது பகிர்ந்துகொண்டார்.

சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் ‘லேப்’

தற்கால, எதிர்காலச் சமூகச் சவால்களை ஆராய்ந்து அவற்றுக்கான ஆக்ககரமான தீர்வுகளைக் கண்டறிவதை அமைப்பின் ‘லேப்’ முயற்சி முன்னிலைப்படுத்துகிறது.

செயற்கை நுண்ணறிவின் ஆற்றலைப் பயன்படுத்தி அத்தீர்வுகள் முன்னெடுக்கப்படும் என்று திரு ராஜா முகம்மது சொன்னார்.

சமூக, அரசாங்க அமைப்புகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உதவவும் அம்முயற்சி உதவுமென நம்பப்படுகிறது.

பெண்களின் தலைமைத்துவ வளர்ச்சி

சமூகத் தலைமைத்துவக் கலந்துரையாடல்களிலும் முடிவெடுக்கும் பொறுப்புகளிலும் பெண்களைக் கொண்டுவரும் நோக்கில், நடுத்தர, உயர் மேலாண்மைப் பதவிகளை வகிக்கும் பெண்களுக்குச் சிறப்புத் திட்டங்களை வடிவமைக்கச் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லீம் லீக் திட்டமிட்டுள்ளது.

சமூகத்தின் விளையாட்டுச் சாதனையாளர்கள்

தேசிய அளவில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்துப் பெருமை சேர்த்த இந்திய முஸ்லிம் விளையாட்டாளர்கள் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் 85ஆம் ஆண்டு நிறைவு விழாவில் அங்கீகரிக்கப்பட்டனர்.

முகம்மது அலி அப்துல் ரஹிமான்

1973ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற தென்கிழக்காசியத் தீபகற்ப விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஹாக்கி போட்டியின் இறுதிச்சுற்றில் பந்தெடுக்க உதவும் பணியைச் செய்தது திரு முகம்மது அலி அப்துல் ரஹிமானின் வாழ்வை மாற்றியது.

“அந்த ஆட்டத்தில் சிங்கப்பூர் மலேசியாவை வீழ்த்தி வெற்றிக் கிண்ணத்தைத் தட்டிச் சென்றது எனக்கு ஹாக்கி விளையாட்டின்மீது வேட்கையை ஏற்படுத்தியது,” என்று அவர் கூறினார்.

அங்குத் தொடங்கிய வேட்கை அவரை 1979லிருந்து 1995 வரை தேசிய ஹாக்கி விளையாட்டாளராக மாற்றியது. அத்துடன், அவர் தேசிய அணியின் துணைத் தலைவராகவும் செயல்பட்டார்.

அக்கட்டத்தில் அவர் தென்கிழக்காசிய விளையாட்டுகள், ஆசிய விளையாட்டுகள், ஆசியக் கிண்ணம், உலகக் கிண்ணத் தகுதிச்சுற்றுகள் எனப் பல்வேறு அனைத்துலகப் போட்டிகளில் பங்குபெற்று சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்தார்.

பின்னர் அவர் இளம் விளையாட்டாளர்களுக்கு வழிகாட்டும் பயிற்றுவிப்பாளராக உருவெடுத்தார்.

விளையாட்டுகளில் சாதிக்கத் துடிக்கும் சமூக விளையாட்டாளர்களுக்கு ஒழுக்கமும் உழைப்பும் மிகவும் முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்.

முகம்மது அஜாத் ஃபுவாத்

“சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் போன்ற அமைப்புகள் இளம் விளையாட்டு வீரர்களை அங்கீகரித்து, எங்களின் கதைகளைப் பகிர்வதற்கான ஒரு தளத்தை வழங்குவது எங்களுக்குக் கூடுதல் ஊக்கமளிக்கிறது.

“விளையாட்டு வீரர்களாகவும் சிங்கப்பூரில் கபடியை வளர்ப்பதிலும் நாங்கள் அடைய முயலும் இலக்குகளுக்கு ஆதரவளிக்க பரந்த சமுதாயம் இருக்கிறது என்பதை இது எங்களுக்கு நினைவூட்டுகிறது,” என்றார் அவர்.

அத்தகைய அங்கீகாரங்கள் கபடி விளையாட்டையும் சமூகத்திடையே கொண்டுசேர்ப்பதாக அவர் கருதுகிறார். அதன்வழி இன்னும் அதிகமான இளையர்கள் கபடி விளையாட்டில் ஈடுபட முன்வருவர் என்று நம்பிக்கை தெரிவித்தார் அஜாத் ஃபூவாத்.