சிங்கப்பூர் இந்திய முஸ்லிம்கள்: பென்கூலன் பள்ளிவாசல் 200 ஆண்டுகள்
சிங்கப்பூரின் சமூக, கலாசார, பொருளியல் கட்டமைப்பில் இந்திய முஸ்லிம் சமூகம் ஆற்றியுள்ள பங்களிப்புகள் அளப்பரியவை, நிலையானவை என்று முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஸாக்கி முகம்மது கூறியுள்ளார்.
ஆர்ச்சர்ட் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 18) நடைபெற்ற பென்கூலன் பள்ளிவாசலின் 200ஆம் ஆண்டுநிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திரு ஸாக்கி உரையாற்றினார்.
“நமது நாட்டின் வரலாற்றுடன் இணைந்து பயணம் செய்யும் பென்கூலன் பள்ளிவாசல், குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய மனிதர்களை உருவாக்கிக் கொடுத்துள்ளது,” என்று அவர் கூறினார்.
இத்தகைய பங்களிப்புகள் இந்திய முஸ்லிம் வரலாற்றின் ஒரு பகுதி மட்டுமன்று என்றும் சிங்கப்பூரின் வரலாற்றிலும் நமது முஸ்லிம் சமூகத்தின் வளமான பல்லினப் பாரம்பரியத்திலும் இவை முக்கியமான அங்கம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பள்ளிவாசலின் இரு நூற்றாண்டுப் பயணத்தை ‘அமானா’ எனும் இஸ்லாமிய நெறியுடன் தொடர்புபடுத்திப் பேசிய அமைச்சர், முன்னோர் விட்டுச்சென்ற பாரம்பரியத்தைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்பதே இதன் நோக்கம் என்றார்.
இந்திய முஸ்லிம் அமைப்புகள், ‘எம்3 பிளஸ்’ கட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து இளையர்களுக்குப் புதிய வாய்ப்புகளையும் வழிகாட்டுதலையும் வழங்கும் தளமாகப் பள்ளிவாசல் செயல்பட வேண்டும் என்று திரு ஸாக்கி வலியுறுத்தினார்.
பள்ளிவாசலின் வரலாற்றை ஆவணப்படுத்தும் வகையில், ‘பென்கூலன் பள்ளிவாசல் 200 ஆண்டுகள் - நம்பிக்கை, சேவையின் இரு நூற்றாண்டுக் கொண்டாட்டம்’ எனும் தலைப்பிலான சிறப்பு வரலாற்றுப் புத்தகத்தை அமைச்சர் வெளியிட்டார். அரிய நிழற்படங்களும் வரலாற்றுப் பதிவுகளும் அடங்கிய இப்புத்தகம், 1825ஆம் ஆண்டு முதல் இன்றுவரை பள்ளிவாசல் கடந்துவந்த பாதையைப் பதிவு செய்துள்ளது.
சமூகத் தலைவர்கள், முக்கிய நன்கொடையாளர்கள், தொண்டர்கள், முயிஸ் தலைவர்கள் உட்பட கிட்டத்தட்ட 500 விருந்தினர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
“நமது முன்னோர் 200 ஆண்டுகளுக்கு முன்பு விதைத்த நல்விதைகளின் பலனை இன்று நாம் அறுவடை செய்கிறோம். அடுத்த 200 ஆண்டுகளுக்கு நமது இளையரை வெறும் பங்கேற்பாளர்களாக மட்டுமின்றி, இந்தப் பாரம்பரியத்தின் பொறுப்பாளர்களாக உருவாக்குவதே எங்களின் முதன்மை இலக்கு,” என்று பள்ளிவாசல் நிர்வாகக் குழு கௌரவத் தலைவர் ஹாஜி மு.யூ.முகம்மது ரஃபீக் குறிப்பிட்டார்.
பள்ளிவாசலைச் சுற்றியுள்ள கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்படும் சமயநல்லிணக்க நிகழ்ச்சிகள், நோன்புக் கஞ்சி விநியோகம், குடும்ப ஆலோசனை அமர்வுகள் போன்ற பல சமூகச் சேவைகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
இளைய தலைமுறையினரின் விருப்பங்களுக்கு ஏற்ப மதரசா வகுப்புகளில் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீனத் தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இளையர் நடவடிக்கைகள் குறித்துப் பேசிய சமய ஆசிரியையும் ஆலோசகருமான திருவாட்டி அல்மாஸ் நிஹார், 40, முன்னோரின் தியாகங்களால் இன்று பயன்பெறும் நாம், எதிர்காலத் தலைமுறையினரின் நலனுக்காக உழைக்க வேண்டியது தலையாய கடமை என்றார்.
அதன் ஒரு பகுதியாக, பள்ளிவாசலின் இளையர் திட்டங்களைப் பிற சமூகங்களைச் சேர்ந்த இளையருடனும் இணைந்து விரிவுபடுத்தத் திட்டமிடப்படுவதாக அவர் கூறினார்.
“சிங்கப்பூர், பல்லினச் சமூகம் என்பதால், பிற இனங்களைச் சேர்ந்த இளையரையும் உள்ளடக்கிய புதிய சமுதாயப் பிணைப்புத் திட்டங்களை வகுக்க எண்ணங்கள் உள்ளன,” என்றார் அவர்.
பள்ளிவாசலின் நிர்வாகக் குழுத் துணைத் தலைவர் முகம்மது அப்துல் ஜலீலின் பங்களிப்புகளை அமைச்சர் தமது உரையில் குறிப்பிட்டார்.
பென்கூலன் பள்ளிவாசலில் தமக்கான சமூகத்தையும் ஆழமான பிணைப்பையும் கண்டறிந்த திரு அப்துல் ஜலீல், தம்மை அரவணைத்த அந்தப் பள்ளிவாசலுக்குத் திரும்பக் கொடுக்கும் வகையில் தொடர்ந்து சேவையாற்றிவருவது பலருக்கும் சிறந்த முன்னுதாரணம் என்று திரு ஸாக்கி குறிப்பிட்டார்.
பள்ளிவாசலுக்கு வருகை தருவோர், தொழுகையோடு நின்றுவிடாமல் பள்ளிவாசலின் பல்வேறு சமுதாயப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்று திரு அப்துல் ஜலீல் கேட்டுக்கொண்டார்.
“இன்றைய காலகட்டத்தில் நவீனத் தொழில்நுட்ப வசதிகள் நிறைந்துள்ளன,” என்று கூறிய அவர், கிடைக்கும் ஓய்வுநேரத்தில் சமுதாய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் பல புதிய தகவல்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்றார்.
தற்கால வசதிகளைப் பயன்படுத்திச் சமுதாயத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் பொறுப்பு இன்றைய இளையரிடம் இருப்பதையும் அவர் வலியுறுத்திச் சொன்னார்.
நிகழ்ச்சியின்போது, பள்ளிவாசலுக்குப் பல ஆண்டுகளாகச் சேவையாற்றிய மூத்த தொண்டர்கள், நன்கொடையாளர்கள், மதரசா மாணவர்கள் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகளும் சிறப்பு நினைவு நாணயங்களும் வழங்கப்பட்டன.