📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 10, 2026 09:03 AM

சிஎஸ்கே அணியில் இருந்து பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி நீக்கப்பட்டதாக தகவல்.. என்ன நடந்தது?

சிஎஸ்கே அணியில் இருந்து பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி நீக்கப்பட்டதாக தகவல்.. என்ன நடந்தது?

சிஎஸ்கே அணியில் இருந்து பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி நீக்கப்பட்டதாக தகவல்.. என்ன நடந்தது?

சென்னை: 2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நீண்ட கால பேட்டிங் பயிற்சியாளராகச் செயல்பட்டு வந்த மைக் ஹஸ்ஸியை அந்த அணி நிர்வாகம் விடுவித்துள்ளதாக பிரபல கிரிக்கெட் விளையாட்டு தளமான கிரிக்பஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் அரங்கில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரராகவும், பின்னர் பயிற்சியாளராகவும் பல ஆண்டுகள் வலம் வந்தவர் ஆஸ்திரேலியாவின் மைக் ஹஸ்ஸி. கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்த இவர், தற்போது அந்த அணியிலிருந்து பரஸ்பரமாக விலகியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

2027 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே நிர்வாகம் தனது பயிற்சியாளர் குழுவை முழுமையாக மாற்றியமைத்து வருகிறது. ஏற்கனவே தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

அதேபோல் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த எரிக் சைமன்ஸ் விடுவிக்கப்பட்டு, மற்றொரு முன்னாள் வீரர் மோஹித் சர்மா பந்துவீச்சு பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டார். பீல்டிங் பயிற்சியாளர் ஜேம்ஸ் ஃபாஸ்டரின் பதவியும் உறுதியற்ற நிலையில் உள்ளது. இந்த வரிசையில் தற்போது மைக் ஹஸ்ஸியும் வெளியேற்றப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிஎஸ்கே அணியின் அடுத்த பேட்டிங் பயிற்சியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பழைய பயிற்சியாளர் குழுவை ஒட்டுமொத்தமாக மாற்றி அமைக்கும் நிலையில் சிஎஸ்கே அணியின் மூத்த வீரர் தோனியின் நிலை என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவருக்கு தற்போது 45 வயது ஆகும் நிலையில் அவர் ஓய்வு பெறப் போகிறாரா? அதனால் தான் இத்தனை ஆண்டு காலம் தோனியுடன் சேர்ந்து பயணித்த பயிற்சியாளர் குழு நீக்கப்பட்டு இருக்கிறதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இதற்கிடையே இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுள்ள ஸ்டீபன் பிளெமிங், அந்நாட்டின் பேட்டிங் பயிற்சியாளராக மைக் ஹஸ்ஸியை நியமிக்க விரும்புவதாகத் தெரிகிறது. ஏற்கனவே மைக் ஹஸ்ஸி கடந்த 2022 டி20 உலகக்கோப்பையின் போது இங்கிலாந்து அணியின் ஆலோசகராகச் செயல்பட்டு அந்த அணி கோப்பையை வெல்ல உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.