149 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஆஸ்திரேலியா படைத்த விநோத சாதனை.. 11 பேருமே 30க்கு மேல்!
149 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஆஸ்திரேலியா படைத்த விநோத சாதனை.. 11 பேருமே 30க்கு மேல்!
டர்பன்: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கடந்த 149 ஆண்டுகளில் முதல்முறையாக, 11 வீரர்களை கொண்ட ஒரு அணியில் அனைத்து வீரர்களுமே 30 வயதை கடந்தவர்களாக இருந்த சாதனை நிகழ்வு அரங்கேறி உள்ளது. ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டர்பன் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த ஆட்டத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலிய ஆடும் லெவனில் இடம்பெற்ற 11 வீரர்களுமே 30 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 30 வயதுக்கு கீழ் ஒரு வீரர் கூட அணியில் இடம்பெறவில்லை.
இந்த அணியின் சராசரி வயது 34.59 ஆகும். ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் களமிறங்கிய 7-வது மிக வயதான அணியாகவும், கடந்த 100 ஆண்டுகளில் களமிறங்கிய மிக வயதான ஆஸ்திரேலிய அணியாகவும் இது பதிவாகியுள்ளது. இந்த ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியோனுக்கு 38 வயதாகிறது. அணியின் மிக இளைய வீரரான மேட் ரென்ஷாவுக்கே 30 வயது ஆகிறது.
ஸ்டீவ் ஸ்மித் 37, மிட்செல் ஸ்டார்க் 36, அலெக்ஸ் கேரி 35, ஜோஷ் ஹேசில்வுட் 35 மற்றும் நாதன் லியோன் என 35 வயதைக் கடந்த 5 அனுபவ வீரர்கள் இந்த அணியில் உள்ளனர். 34 வயதான நிக் மேடின்சன் தொடக்க வீரராக 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அணிக்குள் வந்ததும், ஃபார்ம் இழந்த 27 வயதான கேமரூன் கிரீன் சேர்க்கப்படாததும் இந்த வரலாற்று மாற்றத்திற்குக் காரணமாக அமைந்தது.
இந்த டெஸ்ட் தொடரில் அனுபவத்திற்கு ஆஸ்திரேலிய அணி முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும், அணியில் 20 - 25 வயதை ஒட்டிய ஒரு இளம் வீரர் கூட இல்லாதது கிரிக்கெட் விமர்சகர்களிடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்குவதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போதிய கவனம் செலுத்தவில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.