சென்னையில் இலங்கை இளம்பெண் கார் ஏற்றிக் கொலை: பாரில் நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறால் விபரீதம்
யான்சி, பாலகுரு, கிஷோர் குமார்,ஜோஷ்வா
சென்னை: சென்னை கோயம்பேட்டில் மதுபான பாரில் நடனம் ஆடும்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில், இலங்கை இளம்பெண் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கோயம்பேட்டில் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்று உள்ளது. அதன் உள்புறம் உள்ள மது பாரில் நேற்று முன்தினம்இரவு 11 மணியளவில் இரு தரப்பினர் மது அருந்தினர். அப்போது, அவர்களுக்குள் நடனமாடுவதில் தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
அங்கிருந்த பவுன்சர்கள் இரு தரப்பினரையும் உடனடியாக வெளியேற்றினர். ஆனால் வெளியில் வந்தும் இருதரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர். அவர்களைப் பவுன்சர்கள் மீண்டும் விலக்கி எச்சரித்து அனுப்பினர். இந்த மோதலால் நள்ளிரவில் மதுபார் மூடப்பட்டது. மோதலில் ஈடுபட்டவர்களில் ஒரு தரப்பினர் 3 பைக்குகளில் அங்கிருந்து அடுத்தடுத்து புறப்பட்டனர். மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர்கள் தாங்கள் வந்த சொகுசு காரில் கிளம்பினர்.
கோயம்பேடு பாலத்துக்கு கீழே (கோயம்பேடு - திருமங்கலம் செல்லும் வழி) சென்று கொண்டிருந்த போது ஏற்கெனவே தகராறில் ஈடுபட்டு முன்னால் பைக்கில் சென்றவர்களில் ஒரு தரப்பினர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது காரில் வந்தவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, சொகுசு காரை அதிவேகமாக ஓட்டி எதிர்தரப்பினர் மீது மோதினர். இதில், இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற 18 வயது இளம்பெண் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால், அமர்ந்திருந்த 17 வயது சிறுமிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, கொலையாளிகள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பினர்.
நள்ளிரவில் நடைபெற்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து கோயம்பேடு பேருந்து நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த சிறுமியையும் அதே மருத்துவமனையில் சேர்த்தனர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களைச் சேகரித்தனர்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், உயிரிழந்த பெண் யான்சி (18) என்பதும், விழுப்புரம் மாவட்டம் அனிச்சம் குப்பத்தில் (இலங்கைத் தமிழர்மறுவாழ்வு முகாம்) வசித்ததும், கடந்த 19-ம்தேதி, திருவள்ளூர் மாவட்டம் கொண்டஞ்சேரியைச் சேர்ந்த தோழி தம்பிதா என்பவர் மூலம் அறிமுகமான, சென்னை ராமாபுரத்தில் வசிக்கும் மற்றொரு தோழியான பவுசி தீபிகாவை (17) பார்க்க வந்ததும் தெரிந்தது.
பின்னர், கடந்த 10 நாட்களாக அவரது வீட்டிலேயே யான்சி தங்கியுள்ளார். இந்நிலையில் தான் 28-ம் தேதி மாலை சினிமாவுக்கு செல்வதாகக் கூறி வெளியே சென்று மறுநாள் காலைவீட்டுக்கு வந்தவர்களைச் சிறுமியின் தாய் கண்டித்துள்ளார். இதனால், கோபித்துக் கொண்டு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.
பின்னர், தங்களது இன்ஸ்டாகிராம் நண்பர்கள் உள்பட 6 பேர் சம்பவத்தன்று மதுபாருக்கு சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் யான்சி கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்டுள்ளார். யான்சி இலங்கை தமிழர் எனவும், பல ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு பிரச்சினையால் அவரது குடும்பத்தினர் தமிழகத்தில் தஞ்சம் அடைந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
4 பேரிடம் விசாரணை: சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர். யான்சியை கார்ஏற்றி கொலை செய்தது தொடர்பாக அரும்பாக்கத்தைச் சேர்ந்த பாலகுரு (21), சூளைமேட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஜோஷ்வா (19), பி.இ. மாணவர் நெற்குன்றம் கிஷோர்குமார் (19) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
விருகம்பாக்கத்தைச் சேர்ந்தபி.டெக். மாணவர் சுமந்த் சக்திவேல் (21), ராமாபுரத்தைச் சேர்ந்த பி.காம். மாணவர் மோகன சுந்தரம் (19), அண்ணா நகரைச் சேர்ந்தடிப்ளமோ மாணவர் ராகுல் (20), சூளைமேட்டைச் சேர்ந்த விமல் (19) ஆகிய மேலும் 4 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்கள் திமுக ஆதரவாளரான சுமன் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான திமுக கொடி கட்டிய காரில் மதுபாருக்கு சென்றதும் தெரியவந்தது.
தாய் கதறல்: யான்சி கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த தாய் மேரி ஸ்டெல்லா கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கண்ணீருடன் கூறும்போது, ‘‘ என் மகள் கொலைக்கு நீதி வேண்டும். என் பிள்ளையைக் கொலை செய்தவனை முதல்வர் விஜய் தூக்கிலிட வேண்டும். இல்லை என்றால் துப்பாக்கி கொடுங்கள். கொலையாளியை நானே கொன்றுவிட்டு சிறைக்குச் செல்கிறேன்’’ என்று கூறினார்.