சென்னை துறைமுக சல்பர் கிடங்கில் தீ! தலைமை செயலகத்தை சுற்றி பரவிய கரும்புகை
சென்னை: கோடை வெயில் வறுத்தெடுக்கும் நிலையில், சென்னை துறைமுகத்தில் உள்ள 'சல்பர்' எனப்படும் கந்தகத்தை சேமிக்கும் கிடங்கில் நேற்று, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நெடியுடன் கூடிய கரும்புகை வெளியேறி, எதிரே உள்ள தலைமை செயலகம் வரை பரவியது. இதனால், மனு கொடுக்க வந்த பொதுமக்கள், அரசு ஊழியர்கள், போலீசார் ஆகியோர், கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர்.
இந்தியாவின் மிகப் பழமையான துறைமுகங்களில் ஒன்றான சென்னை துறைமுகம், 1881ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகிறது.
இந்த துறைமுகத்தில் இருந்து பல்வேறு சரக்குகள், ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. உலகம் முழுதும், 50க்கும் மேற்பட்ட துறைமுகங்களுடன், நேரடி இணைப்பை கொண்டுள்ளது.
பேரல்கள் வெடிப்பு இந்த துறைமுகத்தின் ஏழாவது நுழைவாயிலில், 'சல்பர்' எனப்படும் கந்தகத்தை சேமித்து வைக்கும் கிடங்கு உள்ளது. உரம், ரசாயனப் பொருட்கள் தயாரிப்பின் மூலப்பொருளான கந்தகம் எளிதில் தீப்பற்றக்கூடியது. ஆவியாகி எரியும் தன்மை கொண்டது என்பதால், அதில் தண்ணீர் ஊற்றி பாதுகாக்கப்படும்.
பொக்லைன், இயந்திரம் வாயிலாக கப்பலில் ஏற்றப்படும் சல்பர், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதுடன், 'பேக்கிங்' செய்து பல்வேறு உள்நாட்டு நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று பகல் 12:00 மணியளவில், அதிக வெயிலின் தாக்கத்தால், கிடங்கில் இருந்த கந்தகத்தில் திடீரென புகை வெளியேறியது. அதற்குள் மளமளவென தீ பரவியது. அருகில் இருந்த பேரல்கள் வெடித்து சிதறின.
கந்தகம் எளிதில் பற்றக் கூடியது என்பதால், தீ பரவி, விண்ணை நோக்கி கரும்புகை கிளம்பியது.
துறைமுகம் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். உடனடியாக, தீ அணைக்கப்பட்டதால், யாருக்கும் காயமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை. ஆனால், இந்த கிடங்கிற்கு எதிரே தமிழக அரசின் தலைமைச் செயலகம் உள்ளது. கடும் நெடியுடன் பரவிய கரும்புகை, தலைமைச் செயலகத்தை சூழ்ந்தது.
அங்கு, முதல்வர் தனிப்பிரிவில் புகார் கொடுக்க வந்த பொதுமக்கள், பணியில் இருந்த அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் என பலரும், கண் எரிச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்பு களால் அவதிப்பட்டனர்.
புகையால் கைக் குட்டையை முகத்தில் கட்டிக் கொண்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஐந்துக்கும் மேற்பட்ட, அவசர கால '108 ஆம்புலன்ஸ்கள்' வரவழைக்கப்பட்டு, தலைமை செயலகம் எதிரே நிறுத்தப்பட்டன.
இதன்பின், 12:45 மணிக்கு கரும்புகை பரவியது குறைந்து, நிலைமை சீரானது. பின், வழக்கம்போல் ஊழியர்கள் பணிகளில் ஈடுபட்டனர்.
சரியான பாதுகாப்பு இன்றி கந்தகம் சேமிக்கப்படுவதே விபத்துக்கு காரணம் எனவும், துறைமுக நிர்வாகம் பாதுகாப்பாக கந்தகத்தை கையாள சிறப்புக் கவனம் செலுத்த வேண் டும் எனவும், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில், துறைமுகத்தில் உள்ள கந்தக கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து, தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை துறைமுக அதிகாரிகள் கூறியதாவது: துறைமுக வளாகத்தில் உள்ள கந்தக சேமிப்பு பகுதியில், திடீரென புகை வெளியேறியது. உடனே, தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு, அந்த புகையை அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், யாருக்கும் பாதிப்பு இல்லை. பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. பாதுகாப்பு விஷயங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.