📅 Friday, 09 October 2026 IST | புரட்டாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 09, 2026 03:03 PM

சாலை உள்வாங்கி 10 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது இருவர் உயிர் தப்பினர்; ஓ.எம்.ஆரில் வாகன நெரிசல்

சாலை உள்வாங்கி 10 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது இருவர் உயிர் தப்பினர்; ஓ.எம்.ஆரில் வாகன நெரிசல்

திருவான்மியூர்: திருவான்மியூர் ரயில் நிலையம் அருகே, சாலை உள்வாங்கி 10 அடி ஆழத்திற்கு நேற்று ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. காரில் பயணித்த பெண் ஐ.டி., ஊழியர் மற்றும் ஓட்டுநர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணியால் ஏற்பட்ட இப்பள்ளத்தால், ஓ.எம்.ஆரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஓ.எம்.ஆர்., இந்திரா நகர் முதல் சிறுசேரி வரை, 20 கி.மீ., நீளத்திற்கு மெட்ரோ ரயில் பாதை பணி நடந்து வருகிறது. இதில், இந்திரா நகர் முதல் எஸ்.ஆர்.பி.டூல்ஸ் வரை, 2 கி.மீட்டருக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

இதில் டைடல் பார்க் சந்திப்பு பகுதியில், கடந்தாண்டு சாலை உள்வாங்கி, ராட்சத பள்ளம் ஏற்பட்டது. அப்போது, அவ்வழியே வந்த ஒரு கார், பள்ளத்தில் சிக்கி ஐந்து பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்து, 150 மீட்டர் நீளத்தில் நேற்று, அதேபோல் மற்றொரு சம்பவம் நடந்தது.

அடையாறு, இந்திரா நகரைச் சேர்ந்தவர் வீணா, 52; சிறுசேரியில் ஒரு ஐ.டி., நிறுவன ஊழியர். நேற்று காலை, வீட்டில் இருந்து 'ஹூண்டாய் - எக்ஸ்டர்' காரில், வேலைக்கு சென்று கொண்டிருந்தார். ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த பிரவீன், 27, என்பவர் கார் ஓட்டினார்.

திருவான்மியூர் ரயில் நிலையம் அருகே, ரயில் சுரங்கப்பாதை பணி நடந்துவரும் இடத்தில் திடீரென சாலை உள்வாங்கி, 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது.

அப்போது அவர்கள் வந்த காரின் முன்பகுதி சிக்கி, கவிழ்ந்து விழும் நிலைக்கு சென்றது. ஆபத்தை உணர்ந்த, பின்னால் வந்த வாகன ஓட்டிகள், இருவரையும் காரில் இருந்து பத்திரமாக மீட்டனர். அடுத்த சில நொடிகளில், உள்வாங்கிய பள்ளத்தில், கார் தலைகீழாக கவிழ்ந்தது.

இதையடுத்து, மத்திய கைலாஷ் சந்திப்பில் இருந்து ஓ.எம்.ஆர்., -- இ.சி.ஆர்., நோக்கி புறப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டன. பின், இந்திரா நகர் வழியாக, வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

மெட்ரோ ரயில் நிறுவன ஊழியர்கள், கிரேன் இயந்திரத்தை ஓட்டி வந்து, பள்ளத்தில் கிடந்த காரை மீட்டனர். இதனால், போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் மூன்று மணி நேரம் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது.

வாகன ஓட்டிகள் கூறியதாவது:

இந்திரா நகர் -- -டைடல் பார்க் இடையே மெட்ரோ ரயில் பாதை பணிக்காக, அதன் மேலே தடிமனான இரும்பு தகரத்தால் மூடப்பட்ட சாலையில், வாகனங்கள் சென்று வருகின்றன.

இதன் அருகில் தான், இரண்டு முறை சாலை உள்வாங்கி, விபத்து நடந்தது. இந்த இடத்தை தினமும், பதற்றத்துடன் கடந்து செல்கிறோம்.

கனரக வாகனங்கள் செல்லும் சாலை என்பதால், சாலை உள்வாங்காத வகையில் பணி மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.