📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion September 13, 2026 07:33 AM

“அய்யா கருப்பனே வாரும் ஐயா..!”

“அய்யா கருப்பனே வாரும் ஐயா..!”

“அய்யா கருப்பனே வாரும் ஐயா..!” - திருச்செந்தூர் கடலில் தரிசனம் கொடுத்த கருப்பன்!

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் என்பதே முருகன் பக்தர்களின் கூற்று. ஆனால் அந்த திருச்செந்தூர் கடலில் கருப்புசாமி தரிசனம் கொடுத்துள்ளது பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் கடற்கரையில் அமைந்துள்ள ஒரே திருத்தலம் திருச்செந்தூர். இதனால் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வதுடன், கடலில் புனித நீராடுவதும் வழக்கம்.

திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் அமாவாசை மற்றும் பௌர்ணமி காலங்களில் கடல் மட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு, கடல் உள்வாங்குவது வழக்கமான ஒன்றாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்ட நிலையில், கடற்கரை பகுதியில் கடல் அரிப்பும் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த வாரம் மீண்டும் கடல் உள்வாங்கிய நிலையில், நேற்று அதிகாலை கோவில் முன்பகுதியில் கடல் கணிசமாக பின்வாங்கியது. இன்றும் தொடர்ந்து இரண்டாவது நாளாக கடல் உள்வாங்கி காணப்படுகிறது.

80 அடி வரை பின்வாங்கிய கடல்

செல்வதீர்த்தம் முதல் அய்யா கோவில் வரையிலான சுமார் 500 மீட்டர் நீளமுள்ள கடற்கரை பகுதியில் கடல் சுமார் 80 அடி வரை உள்வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கடலுக்குள் இருந்த பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிகின்றன. பாறைகளில் பச்சை நிற பாசிகள் படர்ந்துள்ளதால், அந்தப் பகுதி வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. இதனை பார்க்கும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாறைகளின் அருகே சென்று புகைப்படங்கள், செல்ஃபி எடுத்து வருகின்றனர். ஆனால் பாசி படிந்த பாறைகள் வழுக்கக்கூடிய தன்மை கொண்டிருப்பதால், பக்தர்கள் ஆபத்தான பகுதிகளுக்குச் செல்லாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

“கருப்பனே... வாரும் ஐயா!”

இதற்கிடையே, கோவில் கடற்கரையில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் கடல் பின்வாங்கிய பகுதியில், பச்சை நிற பாசிகள் படிந்த நிலையில் சுமார் ஒரு அடி உயரமுள்ள கருப்பசாமி சிலை ஒன்று தென்பட்டுள்ளது.

கடல் உள்வாங்கியதால் சிலை வெளியில் தெரிந்ததாக கூறப்படும் நிலையில், அங்கு சென்ற பக்தர்கள் சிலையை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். சிலை கடலில் இருந்து வெளிப்பட்டிருப்பது அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.

திருச்செந்தூர் கடல் பகுதியில் இதற்கு முன்பும் பல்வேறு சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது தென்பட்டுள்ள கருப்பசாமி சிலையையும் பாதுகாப்பாக மீட்டு உரிய முறையில் வைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், கடலில் இருந்து மீட்கப்படும் சிலைகளை முறையாக பாதுகாத்து, அவற்றின் வரலாறு மற்றும் பின்னணி குறித்து ஆய்வு செய்து, பக்தர்கள் வழிபடும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்ந்து இரண்டாவது நாளாக கடல் உள்வாங்கியிருப்பதும், பாறைகளுக்கு இடையே கருப்பசாமி சிலை தென்பட்டிருப்பதும் திருச்செந்தூரில் பக்தர்கள் மத்தியில் தற்போது கவனம் பெற்றுள்ளது.