அதிரடிச் சோதனையில் பதிவு நீக்கப்பட்ட 91 வாகனங்கள் பறிமுதல்
நிலப் போக்குவரத்து ஆணையமும் காவல்துறையும் இணைந்து செப்டம்பர் மாதம் நடத்திய நாடு தழுவிய சோதனையில் பதிவு நீக்கப்பட்ட 91 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வாகன உரிமைச் சான்றிதழ் (சிஒஇ) அல்லது சாலை வரி செலுத்தாமல் இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்ததாகத் திங்கட்கிழமை (அக்டோபர் 5) கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் இரு அமைப்புகளின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“பதிவு நீக்கப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்துவது சாலைப் பாதுகாப்புக்கு அபாயத்தை ஏற்படுத்துகிறது. காரணம், அவை சாலையில் இயக்குவதற்கானத் தகுதியும் காப்புறுதியும் இல்லை,” என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
பதிவு செய்யாத, பதிவு நீக்கப்பட்ட வாகனங்களை வைத்திருப்பது அல்லது பயன்படுத்துவதற்கான தண்டனை கடந்த பிப்ரவரி மாதம் அதிகரிக்கப்பட்டது.
முதல்முறை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு $20,000 வெள்ளி வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மீண்டும் இதே குற்றத்தைச் செய்பவர்களுக்கு இந்தத் தண்டனைகள் இரட்டிப்பாகும்.
ஒரு வாகனத்தின் பதிவை நீக்கும்போது அனைத்து நிர்வாக நடைமுறைகளை பூர்த்தி செய்வதை உரிமையாளர்கள் உறுதிசெய்ய வேண்டும்.
இதில் பதிவை நீக்குவதற்கு முன் உரிமையை மாற்றுவது, வாங்குவோர் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ‘ஒன்மோட்டரிங்’ இணையத்தளத்தில் அந்தப் பரிவர்த்தனையை உறுதிப்படுத்துவது ஆகியவையும் அடங்கும்.
ஏற்றுமதிக்காக விற்பனையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் வாகனங்களுக்கு, உரிமையாளர்கள் ஆணையத்திடம் சமர்ப்பிப்பதற்கான வாகன அகற்றல் ஆவணங்களைப் பெற்றிருப்பது அவசியம்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
இத்தகைய வாகனங்கள் பின்னர் தவறாகப் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டால், கடைசியாகப் பதிவு செய்யப்பட்ட உரிமையாளரிடமே ஆணையம் விசாரணை நடத்தும்.
பதிவு நீக்கப்பட்ட வாகனங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவோ அல்லது பயன்படுத்தப்படுவதாகவோ சந்தேகம் ஏற்பட்டால் பொதுமக்கள் ‘ஒன்மோட்டரிங்’ அல்லது ‘ஒன்சர்விஸ்’ செயலி வழியாகப் புகாரளிக்கலாம் என்று ஆணையமும் காவல்துறையும் தெரிவித்துள்ளன.
கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி இத்தகைய வாகனங்கள் சரியான நேரத்தில் முறையில் அகற்றப்படுவதை உறுதி செய்வதற்காக மசோதா ஒன்று நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்பிற்காகத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா ‘அங்கீகரிக்கப்பட்ட ஏற்றுமதியாளர் திட்டத்தை’ அறிமுகப்படுத்த வழிவகுக்கும். இதன் மூலம் பதிவு நீக்கப்பட்ட வாகனங்கள் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்கள் மூலமாக மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும்.