📅 Monday, 05 October 2026 IST | புரட்டாசி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 05, 2026 02:04 PM

சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ்.. ப்ளூ சட்டை மாறன் யாரையும் விடல.. நாசமா போய்டுவீங்கனு எச்சரிக்கை

சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ்.. ப்ளூ சட்டை மாறன் யாரையும் விடல.. நாசமா போய்டுவீங்கனு எச்சரிக்கை

சென்னை: விஜய் அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றதிலிருந்து; திரைத்துறையில் இருக்கும் மற்ற சில நடிகர்களுக்கும் அரசியல் ஆசை துளிர் விட்டிருப்பதாக கருத்துக்கள் எழுந்திருக்கின்றன. அதற்கேற்றபடி சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் தங்களது ரசிகர்களையும் சந்தித்தார்கள். இந்நிலையில் அதை வைத்து ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

தமிழ்நாட்டுக்கு இந்த வருடம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டுமொத்த இந்தியாவும் மறக்காது. ஏனெனில் திமுகதான் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கணிப்புகள் வெளியாகின. ஆனால் விஜய்யின் கட்சியோ 108 தொகுதிகளில் வென்று கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை பிடித்திருக்கிறது. முதலமைச்சரான விஜய் தன்னால் முடிந்த அளவுக்கு செயலாற்றிவருகிறார். அது வரவேற்பையும், விமர்சனத்தையும் ஒரேநேரத்தில் பெற்றுவருகின்றன.

நடிகர்களுக்கு ஆசை: விஜய்யின் வெற்றி அனைவருக்குமே ஆச்சரியத்தைத்தான் கொடுத்தது. மேலும் மற்ற சில நடிகர்களுக்கும் அரசியல் ஆசையை துளிர் விட செய்திருக்கிறது. நடன அமைப்பாளரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் கூடிய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் தங்களது ரசிகர்களை அழைத்து சந்திப்பையும் நிகழ்த்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலுக்கு வருவார்களா?: தனுஷ் சில மாதங்களுக்கு முன்பு திருவள்ளூரில் வைத்து ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நமக்கென்று ஒரு நோக்கம் இருக்கிறது" என பொடி வைத்து பேசினார். அந்த நோக்கம் இறுதியாக அரசியல் என்ட்ரியில்தான் இருக்கும் என்பது பலரது நம்பிக்கை. விரைவில் அவர் கட்சி தொடங்குவார் என்றும் பலத்த நம்பிக்கை அவரது ரசிகர்களிடம் உருவாகியிருக்கிறது. அவரைத் தொடர்ந்து சூர்யாவும் தனது ரசிகர்களை சந்தித்தார்.

சிவகார்த்திகேயன் பேச்சு: அவர் அந்த சந்திப்பில் அரசியல் ரீதியான கருத்தை பெரிதாக பேசாவிட்டாலும்; ஏற்கனவே அவர் செய்துகொண்டிருக்கும் அகரம் உள்ளிட்ட நல்ல விஷயங்களின் துணையோடு அரசியலுக்கு வந்தால்; ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று பேச்சுக்கள் கேட்கின்றன. தனுஷ், சூர்யாவைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனும் நேற்று தனது ரசிகர்களை சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாடினார். இப்படி நடிகர்கள் தொடர்ந்து தங்களது ரசிகர்களுடனான சந்திப்பை நிகழ்த்துவதால்; வரும் காலங்களில் திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புகளும் இருக்கின்றன.

ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: இந்நிலையில் பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், "சுள்ளான், கங்குவான், திடீர் தளபதிகளின் ரசிகர் மன்ற ஷூட்டிங் எல்லாம் cringe cum comedy entertainer ஆ இருக்கு. ஆனா இவங்க படங்கள்தான் சூர மொக்கைகளா இருக்கு. நல்ல படத்தை மட்டும் பாத்துட்டு வேலையை பாருங்க. இவனுங்களுக்கும் விசிலடிச்சி.. நாசமா போகாதீங்க" என எச்சரித்திருக்கிறார்.

நடிகர்களின் லைன் அப்: சூர்யாவை பொறுத்தவரை அடுத்ததாக சீன் படம் வருகிறது. தனுஷுக்கு ஓம் படமும், சிவகார்த்திகேயனுக்கு சேயோன் படமும் வருகின்றன. இந்த மூன்று படங்களின் மீதும் அவரவர் ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கை வைத்து காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.