கண்ணீர் விட்ட மெஸ்ஸி.. அர்ஜென்டினாவை கதிகலங்க வைத்த எகிப்து.. ஆனால் 12 நிமிடத்தில் மாறிய மேட்ச்
கண்ணீர் விட்ட மெஸ்ஸி.. அர்ஜென்டினாவை கதிகலங்க வைத்த எகிப்து.. ஆனால் 12 நிமிடத்தில் மாறிய மேட்ச்
அட்லாண்டா: ஃபிஃபா உலகக்கோப்பை 2026 கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில், ஜாம்பவான் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணியை எகிப்து அணி கதிகலங்க வைத்தது. இந்தப் போட்டியில் ஆட்ட நேர முடிவின் 12 நிமிடங்களுக்கு முன்பு வரை 0-2 எனப் பின்தங்கியிருந்த அர்ஜென்டினா அணி, கடைசி நேரத்தில் அடுத்தடுத்து கோல்கள் அடித்து 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குத் தகுதி பெற்றது.
அட்லாண்டா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் 15-வது நிமிடத்தில் எகிப்தின் யாசர் இப்ராஹிம் தலையால் முட்டி முதல் கோல் அடித்து எகிப்து அணிக்கு முன்னிலை அளித்தார். அதன் பிறகு அர்ஜென்டினாவுக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கேப்டன் லியோனல் மெஸ்ஸி கோல் அடிக்க முயற்சித்தார். ஆனால், அதை எகிப்து கோல்கீப்பர் முஸ்தபா ஷோபீர் அபாரமாகத் தடுத்து நிறுத்தினார். மேலும் மெஸ்ஸியின் ஃபிரீ-கிக் பந்து கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியது. இதனால் முதல் பாதியில் எகிப்து 1-0 என முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 67-வது நிமிடத்தில் முகம்மது சாலா கொடுத்த பாஸைப் பெற்று முஸ்தபா ஜிகோ எகிப்து அணியின் இரண்டாவது கோலை அடித்தார். இதனால் எகிப்து 2-0 என முன்னிலை பெற்று வரலாற்று வெற்றியை நோக்கிச் சென்றது. அர்ஜென்டினா அதிர்ச்சித் தோல்வி அடையும் என்றே பலரும் எண்ணினர்.
ஆனால், ஆட்டத்தின் கடைசி 12 நிமிடங்களில் அர்ஜென்டினா அணி அசுர வேகத்தில் மீண்டெழுந்தது. 79-வது நிமிடத்தில் மெஸ்ஸி மேலே அனுப்பிய பந்தை கிறிஸ்டியன் ரொமேரோ தலையால் முட்டி அர்ஜென்டினாவின் முதல் கோலை அடித்தார். அதன் பிறகு 83-வது நிமிடத்தில் மெஸ்ஸி ஒரு துல்லியமான கோல் அடித்து ஆட்டத்தை 2-2 எனச் சமன் செய்தார்.
ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்ற போது (90+2 நிமிடத்தில்), லவுடாரோ மார்டினெஸ் கொடுத்த கிராஸ் பந்தை என்சோ பெர்னாண்டஸ் தலையால் முட்டி கோலாக மாற்றி அர்ஜென்டினாவின் 3-2 என்ற அசாத்திய வெற்றியை உறுதி செய்தார்.
உலகக்கோப்பை வரலாற்றில் 0-2 எனப் பின்தங்கிய பிறகு மீண்டெழுந்து அர்ஜென்டினா அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். அதிலும் கடைசி 12 நிமிடங்களில் 2 கோல் அடித்து, பின்னர் கூடுதல் நேரத்தில் ஒரு கோல் அடித்து அர்ஜென்டினா வெற்றி பெற்றது நம்ப முடியாத வெற்றியாக அமைந்தது.
இந்த வெற்றியின் மூலம் அர்ஜென்டினா காலிறுதிக்கு முன்னேறியது. இந்த போட்டிக்குப் பின் மெஸ்ஸி ஆனந்தக் கண்ணீர் விட்டது ரசிகர்களை நெகிழ வைத்தது. காலிறுதிச் சுற்றில் சுவிட்சர்லாந்து - கொலம்பியா போட்டியின் வெற்றியாளரை அர்ஜென்டினா எதிர்கொள்ளவுள்ளது.