📅 Tuesday, 07 July 2026 IST | ஆனி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu June 22, 2026 11:30 PM

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க எம்.எல்.ஏ.,க்களுக்கு அழைப்பு: சபாநாயகர் உத்தரவு

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க எம்.எல்.ஏ.,க்களுக்கு அழைப்பு: சபாநாயகர் உத்தரவு

சென்னை: ''அரசு நிகழ்ச்சிகளுக்கு எம்.எல்.ஏ.,க்களை அழைக்க, உள்ளாட்சி அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும்,'' என, தலைமை செயலருக்கு சபாநாயகர் பிரபாகர் உத்தரவிட்டார்.

சென்னை, திரு.வி.க., நகர் தொகுதியில், மாநகராட்சி பள்ளி கட்டடம் திறப்பு விழாவில், சென்னை மேயர் பிரியா, திரு.வி.க., நகர் தொகுதி எம்.எல்.ஏ., பல்லவி இடையே குத்துவிளக்கு ஏற்றுவது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, சபாநாயகர் பிரபாகரிடம், எம்.எல்.ஏ., பல்லவி புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக, சட்டசபையில் சபாநாயகர் பிரபாகர் கூறியதாவது: திரு.வி.க., நகர் தொகுதியில் பள்ளி கட்டடம் திறப்பு விழாவில், மரபு நெறிமுறை குறித்து புரிதல் இல்லாமல், தெரிந்தோ, தெரியாமலோ அல்லது அறிந்தோ, அறியாமலோ நடந்த சம்பவங்கள் இனிவரும் காலங்களில் தொடரக் கூடாது. இது தொடர்பாக எம்.எல்.ஏ., பல்லவி அளித்த புகார் மனுவின் மீது, மேல் நடவடிக்கை தேவையில்லை என கருதுகிறேன். அதை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவதோ, வேறு வகையில் நடவடிக்கை எடுப்பதோ தேவையில்லை என்று கருதுகிறேன்.

ஒவ்வொரு மாவட்டத்திலும், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மாவட்டத்தில் நடக்கும் அனைத்து அரசு நிகழ்வுகளிலும், தொகுதி எம்.எல்.ஏ.,க்களுக்கு முறையாக அழைப்பு விடுக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்களின் சிறப்புரிமை மற்றும் மரபு நெறிமுறைகளை கடைபிடிக்க, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளைச் சார்ந்த அலுவலர்களுக்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை, தலைமை செயலர் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.