📅 Tuesday, 29 September 2026 IST | புரட்டாசி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 28, 2026 11:03 PM

அப்பாவுக்கு ஏமாற்றம்தான்.. சிவகார்த்திகேயனுடன் மனக்கசப்பு இல்லை.. வெங்கட் பிரபு ஓபன்

அப்பாவுக்கு ஏமாற்றம்தான்.. சிவகார்த்திகேயனுடன் மனக்கசப்பு இல்லை.. வெங்கட் பிரபு ஓபன்

சென்னை: சிவகார்த்திகேயனை வைத்து வெங்கட் பிரபு இயக்கவிருந்த படம் சில காரணங்களால் ட்ராப்பாகியிருக்கிறது. இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு கங்கை அமரன் பேசிய விஷயம் சர்ச்சையான நிலையில்; வெங்கட் பிரபு விளக்கமளித்திருக்கிறார். இதன் மூலம் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டிருக்கிறது.

விஜய்யை வைத்து கோட் படம் இயக்குவதற்கு முன்பாகவே சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்குவதாக இருந்தார் வெங்கட் பிரபு. ஆனால் அந்த சமயத்தில் கிடைத்த கோட் வாய்ப்பை இழக்கக்கூடாது என்பதற்காக இந்தப் படம் தள்ளி வைக்கப்பட்டது. கோட்டை முடித்துவிட்டு இந்தப் படம் தொடங்கும் பிளானில் இருந்தார் வெங்கட். சிவாவோ தாய் கிழவி இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் படத்தில் நடிக்க சென்றுவிட்டார்.

கங்கை அமரன் கருத்து: இதன் காரணமாக எஸ்கே - வெங்கட் பிரபு படம் ட்ராப்பாகிவிட்டதாக கருதப்பட்டது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. சூழல் இப்படி இருக்க வெங்கட் பிரபுவின் தந்தையான கங்கை அமரன் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில், "வெங்கட் பிரபு வேறு ஒரு படத்தை நம்பியிருந்தார். அதனால்தான் அவருடைய அடுத்த படம் லேட் ஆகிறது. அந்த நடிகர் யார் என்று சொல்லமாட்டேன்.

குறை சொல்ல வேண்டாம்: அவரை குறை சொல்ல வேண்டாம். அவர் வாழட்டும். வெங்கட் கதையை எல்லாம் ரெடி செய்துவிட்டார். அந்த நடிகரும் கால்ஷீட் கொடுத்தார். ஆனால் ஒரு படம் ஹிட்டானவுடன் இன்னொரு இயக்குநரின் அடுத்த படத்தில் நடித்து முடித்துவிட்டுத்தான் செய்வேன் என்று சொன்னார். உடனே நான் வெங்கட் பிரபுவிடம், 'இது உனக்கு தேவையா? எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் இதற்கு மேலும் அவன் காலில் விழுந்து நடிக்க வைக்க வேண்டுமா? அது நமது குடும்பத்துக்கு அவமானம் இல்லையா? அவன் உன்னை உதாசீனப்படுத்துகிறான். நீயும் அப்படியே செய். அவனை வைத்து படம் செய்யாதே என சொன்னேன்" என கூறியிருந்தார்.

வெங்கட் பிரபு விளக்கம்: கங்கை அமரன் தனது பேட்டியில் எஸ்கேவைத்தான் மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார். அது சர்ச்சையை கிளப்பிய சூழலில்; வெங்கட் பிரபு விளக்கமளித்திருக்கிறார். அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "சிவகார்த்திகேயன் எப்போதும் எனக்கு அன்பான சகோதரர் மற்றும் நண்பர்தான். பலவிதமான வதந்திகளும் சர்ச்சைகளும் போகின்றன. ஒரு தகப்பனாக சொந்த மகனின் படம் தாமதமாகும்போது ஆதங்கமும், ஏமாற்றமும் வருவது இயல்புதான். அவருக்கு முழு பின்னணியும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. எனவே அப்பா மீது தவறு இல்லை.

அமைதியான நபர்: நான் எப்போதும் வேலை விஷயத்தில் அதிகம் பேசாத அமைதியான நபர். எனது தொழில் சார்ந்த விஷயங்களை வேறு யாரிடமும், என் தந்தையிடம்கூட விரிவாக பேசமாட்டேன். சில பல காரணங்களால் அந்தப் படம் தொடங்கப்படவில்லை. அவ்வளவுதான். இதில் எந்த மனக்கசப்பும் இல்லை. நேரமும், நல்ல கதையும் கூடி வந்தால் மீண்டும் எஸ்கேவுடன் பணியாற்றுவேன். தயவு செய்து இந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்" என குறிப்பிட்டிருக்கிறார்.