அனுமதியின்றிப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றவர்மீது குற்றச்சாட்டு
சாங்கிச் சிறைச்சாலைக்கு அருகேயும் அரசு நீதிமன்றங்களிலும் அனுமதியின்றிச் சட்டவிரோதக் கூட்டங்களில் பங்கேற்றதற்காக 32 வயது எஸ்.சுரேந்தர் குமார்மீது வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) குற்றஞ்சாட்டப்பட்டது.
பொது அமைதிச் சட்டத்தின்கீழ் அவர்மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
குமார், ‘ஹோம்’ எனப்படும் வெளிநாட்டு ஊழியர்களின் உரிமைகள், நல்வாழ்வுக்காகச் செயல்படும் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகக் குழுத் துணைத் தலைவர் என அவ்வமைப்பின் இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட மசூத் ரஹிமி மெஹர்சாத், சையத் சுஹைல் சையத் ஜின் எனும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவரின் தண்டனையை எதிர்த்து 2024 நவம்பர், 2025 ஜனவரியில் சாங்கிச் சிறைக்கு வெளியே மெழுகுவத்தி ஏந்தி நடத்தப்பட்ட நினைவஞ்சலிக் கூட்டங்களில் அவர் பங்கேற்றதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
2025 பிப்ரவரியில் சிங்கப்பூரில் மரண தண்டனையை ஒழிப்பதற்கு ஆதரவாக அரசு நீதிமன்றங்களின் வளாகத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திலும் அவர் கலந்துகொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அரசு நீதிமன்றங்கள் பொதுக் கூட்டங்களுக்குத் தடை செய்யப்பட்ட இடம் என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும் என்று ஆவணங்கள் கூறுகின்றன.
அண்மையில் திருமணமான குமார், தேன்நிலவுக்காக வெளிநாடு செல்ல நீதிமன்றத்தில் அனுமதி கோரினார். அவரின் கோரிக்கையை மாவட்ட நீதிபதி வோங் பெக் ஏற்றுக்கொண்டார்.
அனுமதியின்றி பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டிற்கு அதிகபட்சமாக $3,000 அபராதம் விதிக்கப்படலாம். தடைசெய்யப்பட்ட பகுதியில் கூட்டத்தில் பங்கேற்ற குற்றத்திற்கு $5,000 வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.