📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology October 16, 2026 10:04 PM

அன்றாடப் பயன்பாட்டுக்கும் வேலையிடத்திலும் ஏஐ பயன்படுத்த குடியிருப்பாளர்களுக்கு உதவி, சிங்க‌ப்பூர் செய்திகள்

அன்றாடப் பயன்பாட்டுக்கும் வேலையிடத்திலும் ஏஐ பயன்படுத்த குடியிருப்பாளர்களுக்கு உதவி, சிங்க‌ப்பூர் செய்திகள்

தென்மேற்கு வட்டார மக்கள் ‘ஏஐ ஏஜென்ட்’ குறித்துத் தெரியவில்லையே எனக் கவலை கொள்ளத் தேவையில்லை.

அவர்களுக்காகவே அவர்களின் வீடுகளுக்கு அருகில் அவற்றைப் பற்றிய நேரடி செய்முறை விளக்கம் நடைபெறவிருக்கிறது.

அதன் மூலம் குடியிருப்பாளர்கள் ஏஐ ஏஜென்ட்டை நம்பிக்கையோடு கற்றுக் கொள்ள முடியும்.

தென்மேற்கு சமூக மேம்பாட்டு மன்றம், சிங்கப்பூர் ஏஐ சங்கத்துடன் இணைந்து அடுத்த மூன்று ஆண்டுகளில் சமூக நிகழ்ச்சிகளிலும் அடித்தள அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் இந்த விளக்கக் காட்சிகளை நடத்த ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

ஜூரோங்கில் உள்ள வெஸ்ட்கேட்டில் வேலைவாய்ப்பு, நிபுணத்துவ மேம்பாட்டுக்கான ஆண்டு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) தொடங்கியது.

அதில் பேசிய தென்மேற்கு வட்டார மேயர் லோ யேன் லிங், “செயற்கை நுண்ணறிவு(ஏஐ) காரணமாக மக்களின் வாழ்க்கை, கற்றல், பணிபுரியும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப குடியிருப்பாளர்களும் அவற்றைக் கற்றுக் கொள்வதற்காகவே இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன,” என்றார்.

இரண்டு நாள் ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஃபெஸ்டிவல்@சவுத் வெஸ்ட்’ நிகழ்ச்சி சனிக்கிழமை (அக்டோபர் 17) நிறைவடைகிறது.

“மூவாண்டு கூட்டு ஒத்துழைப்பினால் பல்வேறு வயதுடைய 3,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, தொழிலுக்குத் தேவையான நடைமுறை ஏஐ திறன்களைப் பெறுவதையும் ஏஐயைப் பொறுப்பாகப் பயன்படுத்துவதையும் ஊக்குவிக்கும்,” என்று ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, ஐந்து சமூக மேம்பாட்டு மன்றங்களுக்கும் திறன், ஊழியர் அணி மேம்பாட்டு அமைப்புக்கும் (எஸ்டபிள்யூடிஏ) இடையிலான புதுப்பிக்கப்பட்ட பங்காளித்துவத்தின் கீழ், சிங்கப்பூர் முழுவதும் உள்ள மக்கள் தொடர்ந்து திறன், வேலை வாய்ப்புகளைப் பற்றிய ஆலோசனைகளைப் பெறலாம் என்று அறிவித்தார்.

வேலை வாய்ப்புகளை ஏஐ தொழில்நுட்பம் பாதிக்கலாம் என்ற கவலைகளுக்கு மத்தியில் வேலையிடங்களில் ஏஐயைப் பயன்படுத்தவும் வாழ்க்கைத் தொழிலை நிர்வகிக்கவும் அவற்றுக்கான பாடங்களையும் வளங்களையும் குடியிருப்பாளர்கள் தெரிந்துகொள்ளலாம்.

இந்த ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஆலோசனை முயற்சி இனி சமூகத்திற்கான வாழ்க்கைத் தொழில், திறன்கள் என அழைக்கப்படும்.

வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுதல், பயிற்சி, வேலைவாய்ப்பு ஆதரவு தேவைப்படும் மக்களுக்கு இது முதலில் தொடர்புகொள்ளும் இடமாக இருக்கும்.

நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய திரு டெஸ்மண்ட் லீ, 2025ஆம் ஆண்டில் சுமார் 60,000 பேர் ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் அட்வைஸ்’ ஆலோசனைகளில் கலந்துகொண்டதாகவும் அவர்களில் ஏறக்குறைய 15,000 பேர் பின்னர் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்ததாகவும் குறிப்பிட்டார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் ஏறக்குறைய 150,000 மக்களைச் சென்றடைவதே இதன் இலக்கு என்றும் அவர் சொன்னார்.

ஜூரோங், புக்கிட் பாத்தோக், சுவா சூ காங் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய தென்மேற்கு மாவட்டத்தில் ஏஐ தூதர்கள் என்ற தொண்டீழியத் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

இவர்கள், தங்களுடைய ஏஐ திறன்களை குடியிருப்பாளர்களுடன் பகிர்ந்துகொள்வதோடு இந்தத் தொழில்நுட்பத்தைப் பொறுப்போடு பயன்படுத்த அவர்களுக்கு உதவுவார்கள் என்று தென்மேற்கு சமூக மேம்பாட்டு மன்றம், எஸ்டபிள்யூடிஏ ஆகியவை கூட்டாகத் தெரிவித்துள்ளன.