📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology October 16, 2026 06:01 AM

மொபைல் போனில் அழைப்பவர் பெயர்; திரையில் தோன்றுவது நவ. 1 முதல் கட்டாயம்

மொபைல் போனில் அழைப்பவர் பெயர்; திரையில் தோன்றுவது நவ. 1 முதல் கட்டாயம்

புதுடில்லி: மொபைல் போனுக்கு வரும் அழைப்புகளில், அழைப்பவரின் பெயரையும் கட்டாயம் காட்டும் வசதியை நவம்பர் 1 முதல் கட்டாயம் அமல்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செயல்பாட்டை, 'டிராய்' எனப்படும், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கட்டுப்படுத்துகிறது. இந்த அமைப்பு, மோசடி அழைப்புகளால் மக்கள் ஏமாறாமல் இருக்க, மொபைல் போனில் அழைப்பவரின் பெயரை காட்டும் வசதியை அறிமுகப்படுத்த 2024 பிப்ரவரியில் பரிந்துரைத்தது.

அதை ஏற்று சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அழைப்பவரின் பெயர் மொபைல் போனில் சேமிக்கப்படாமல் இருந்தாலும் திரையில் காட்டும் வசதியை அமல்படுத்தின. இந்த வசதியை அனைத்து நிறுவனங்களும் செயல்படுத்த வேண்டும் என்ற யோசனையை மத்திய தொலைதொடர்பு துறை முன் வைத்தது. அதற்கு டிராய் ஒப்புதல் வழங்கியது.

இதையடுத்து நவம்பர் 1 முதல் 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க்குகளை பயன்படுத்தும் மொபைல் போன்களில் அழைப்பவரின் பெயரை காட்டுவதை தொலைத்தொடர்பு துறை கட்டாயமாக்கி உள்ளது.

அதன்படி, மொபைல் போனில் சேமிக்கப்படாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தால், அந்த எண்ணுடன் தொடர்புடைய பெயர் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தரவுத்தளத்தில் இருந்து காட்டப்படும். வெளிநாட்டு அழைப்பு எனில் 'சர்வதேச அழைப்பு' எனத் திரையில் தெரியும்.

'வணிக நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான பெயரைக் காட்ட கோரலாம், அதற்கு ஜி.எஸ்.டி., பதிவில் அந்தப் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆவணங்களைச் சரிபார்த்த பிறகே அனுமதி வழங்கும்' என தொலைத்தொடர்பு துறை கூறியுள்ளது.