📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 04, 2026 06:04 AM

ஐகோர்ட்டில் தமிழை வழக்காடும் மொழியாக்க சட்டசபையில் தீர்மானம்: ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அறிவிப்பு

ஐகோர்ட்டில் தமிழை வழக்காடும் மொழியாக்க சட்டசபையில் தீர்மானம்: ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அறிவிப்பு

'சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழை வழக்காடும் மொழியாக அனுமதிக்க வேண்டும்' என, முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானம், சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழை, நாம் வெறும் மொழியாக மட்டும் கருதுவதில்லை. அது உணர்வோடும் உயிரோடும் ஒன்றிணைந்த அடையாளம். அதனால், சென்னை உயர் நீதிமன்றத்திலும் தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். உயர் நீதிமன்றத்தில் ஆங்கிலத்திற்கு சமமான வாய்ப்பை தமிழுக்கு வழங்க வேண்டும். இதுதொடர்பாக, 2006ல் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு நிராகரிக்கப்பட்டது.

ஒரு சாதாரண குடிமகன் தனது வாழ்க்கை, நிலம், குடும்பம், சொத்து, வேலை தொடர்புடைய வழக்கு நீதிமன்றத்தில் நடக்கும் போது, தாய்மொழியில் புரிந்துகொள்ள முடிந்தால், நீதி பெறுவது வலுப்பெறும். நீதி பரிபாலனத்தில் மக்களும் தங்களது தாய்மொழியில் பங்கெடுப்பதால், நீதி தேவதையின் கரம் வலுப்பெறும். எனவே நீதியின் மொழி மக்களுக்கு புரியும் மொழியாக இருப்பது, ஜனநாயகத்தின் அடிப்படை நோக்கம். தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்க வேண்டும்.

தமிழில், மனுக்கள், ஆவணங்கள், வாதங்களை சமர்ப்பிப்பதற்கு உரிய நடைமுறையை உருவாக்க வேண்டும். தீர்ப்புகள், உத்தரவுகளை அதிகாரப்பூர்வமாக தமிழில் வழங்க வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, மாநில கவர்னரால் அனுப்பப்படும் முன்மொழிவுகள் மீது, தேவையான சட்ட நடவடிக்கைகளை, மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

இது எந்த மொழிக்கும் எதிரான கோரிக்கையல்ல; இது, பன்மொழி தன்மையை மதிக்கும் கோரிக்கை. இது ஆங்கிலத்தை அகற்றும் கோரிக்கையல்ல; இது தமிழுக்கு உரிய அரசியலமைப்பு சட்ட வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை. தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் இந்த தீர்மானத்தை, மத்திய அரசும், ஜனாதிபதியும் விரைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய அரசியலமைப்பு சட்டம், கூட்டாட்சி தத்துவத்தை நிலைநிறுத்தி, நாட்டின் பன்மொழி மற்றும் பன்முக பண்பாட்டு தன்மையை அங்கீகரிக்கிறது. மாநிலங்கள் தங்களது அதிகாரப்பூர்வ மொழியை பயன்படுத்துவதற்கான சட்ட வாய்ப்புகளை வழங்கியுள்ளது. ஒரு மாநிலத்தின் ஆட்சி மொழி உரிமையை, உயர் நீதிமன்ற நடவடிக்கையில் பயன்படுத்துவதற்கு, அம்மாநில கவர்னர், ஜனாதிபதியின் முன் ஒப்புதலுடன் அதிகாரம் வழங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆங்கிலத்துடன் கூடுதலாக மாநிலத்தின் ஆட்சிமொழியை, ஒரு மாநில கவர்னர், ஜனாதிபதி முன் ஒப்புதலுடன், உயர் நீதிமன்ற தீர்ப்புகள், தீர்ப்பு ஆணைகள், உத்தரவுகள் ஆகியவற்றில் பயன்படுத்துவதற்கான அதிகாரம் வழங்கும் சட்ட வாய்ப்பையும் வழங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில், ஒரே நேரத்தில் தமிழில் பேசுவதை, ஆங்கிலத்தில் கேட்க முடியும். எனவே, உயர் நீதிமன்றத்தின் முதன்மை மொழியாக தமிழை அங்கீகரிக்க வேண்டும். தமிழில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள், ஆவணங்கள் மற்றும் வாதங்களுக்கு உரிய நடைமுறையை உருவாக்க வேண்டும். தீர்ப்புகள், தீர்ப்பு ஆணைகள், நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தையும் தமிழில் வழங்கும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஆட்சி மொழிகள் சட்டத்தின் கீழ், கவர்னரால் அனுப்பப்படும் முன்மொழிவுகளின் மீது, தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என, மத்திய அரசை சட்டசபை ஒருமனதாக வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த தீர்மானத்தை ஆதரித்து, அமைச்சர் ராஜ்மோகன், தி.மு.க., - ரகுபதி, அ.தி.மு.க., - தளவாய் சுந்தரம், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் பேசினர். இதையடுத்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டதாக, சபாநாயகர் பிரபாகர் அறிவித்தார்.