📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 02, 2026 08:04 AM

‘ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு’ என்பதே வி.சி.க

‘ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு’ என்பதே வி.சி.க

‘ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு’ என்பதே வி.சி.க-வின் நிலைப்பாடு; மதுராந்தகத்தில் திருமாவளவன் உரைவீச்சு

பதவிக்காகவோ, அமைச்சர் பதவிக்காகவோ விசிக தவெகவுடன் இணையவில்லை என்றும், தமிழக அரசியலில் மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதியைப் பாதுகாக்க வேண்டும் என்பதே அடிப்படை நோக்கம் என்றும் திருமாவளவன் கூறினார்.

Published : October 2, 2026 at 7:43 AM IST

செங்கல்பட்டு: மக்கள் தீர்ப்பை மதித்து புதிய அரசியல் சூழலை ஏற்க வேண்டும் என்றும், ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு என்ற கொள்கையே எங்கள் நிலைப்பாடு என்றும் வி.சி.க தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.

மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தலில், அ.தி.மு.க-வில் வெற்றி பெற்று சில நாட்களிலேயே ராஜினாமா செய்த த.வெ.க-வில் இணைந்த மரகதம் குமரவேல் மீண்டும் போட்டியிருகிறார். இந்நிலையில், த.வெ.க வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியின் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது, “தமிழ்நாடு அரசியல் களத்தின் திசையை தீர்மானிக்கும் வகையில் புதிய கூட்டணி உருவாகியுள்ளது. மதச்சார்பின்மை, சமூக நீதி ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியில் வி.சி.க இணைந்துள்ளது.

வி.சி.க எந்தச் சூழலிலும் தனிநபரை முன்னிறுத்தியோ, பதவி அல்லது அதிகாரத்தை முன்னிறுத்தியோ அரசியல் முடிவுகளை எடுத்ததில்லை. கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டே முடிவுகளை எடுத்துள்ளது. த.வெ.க பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரை கொள்கை ஆசான்களாக முன்னிறுத்தியுள்ளது. இதனால், த.வெ.க-வுடன் இணைந்து செயல்படுவதில் விசிகவுக்கு கொள்கை முரண்பாடு இல்லை.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒரு அணியாகவும், தவெக தனியாகவும் போட்டியிட்ட நிலையில், அந்தக் கட்சிக்கு தமிழக மக்கள் 108 இடங்களை வழங்கியுள்ளனர். அந்தத் தீர்ப்பு நிறையப்பேருக்கு பிடிக்காமல் இருக்கலாம்; கசப்பாக இருக்கலாம். ஆனால், ஜனநாயகத்தில் மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்க வேண்டும்.

தமிழக அரசியலில், இரு துருவ நிலை மாறி மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளுக்கும் சவால் விடும் வகையில் புதிய அரசியல் சக்தியாக த.வெ.க உருவெடுத்துள்ளது. அந்தக் கட்சியை குறைத்து மதிப்பிடாமல், மக்கள் அளித்த தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு புதிய அரசியல் சூழலை அணுக வேண்டும்.

தேர்தலுக்கு முன்பே கூட்டணி ஆட்சி மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்து தவெக தலைவர் ஜோசப் விஜய் வெளிப்படையாக பேசியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் நீண்ட காலமாக ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வந்தது. அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாக முன்கூட்டியே அறிவித்திருந்த தவெகவுடன் இணைந்து செயல்படுவதற்கு இதுவும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

ஆனால் பதவிக்காகவோ, அமைச்சர் பதவிக்காகவோ வி.சி.க இந்த முடிவை எடுக்கவில்லை. தமிழக அரசியலில் மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதியைப் பாதுகாக்க வேண்டும் என்பதே அடிப்படை நோக்கம்.

மதுராந்தகம் இடைத்தேர்தலில் மரகதம் குமரவேல் வெற்றிபெற வேண்டும். விசில் சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டும். விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெறும் இந்தக் கூட்டணி வெற்றி பெற்றது என்ற வரலாற்றை மதுராந்தகம் தொகுதி மக்கள் பதிவு செய்ய வேண்டும்.

தேர்தல் பிரசாரத்தில் எதிர்மறையான விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றாமல், கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்காக முழுமையாகப் பணியாற்ற வேண்டும். மதச்சார்பின்மை, சமூக நீதி ஆகியவற்றை பாதுகாக்கும் வலுவான கூட்டணியாக இந்த அணி உருவாக வேண்டும்” என்று பேசினார்.