ஆட்சித் தலைமைப் பொறுப்பில் மோடியின் 25 ஆண்டுகள்: 'கர்மயோகி'யின் சேவைப் பயணம்!
புதுடில்லி: தொடர்ந்து 25 ஆண்டுகள் ஒரு அரசின் தலைவராக (முதல்வர் முதல் பிரதமர் வரை) மக்கள் பணியாற்றி, வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை, பிரதமர் நரேந்திர மோடி எட்டியுள்ளார்.
அவரது சேவை மற்றும் தலைமைப் பண்புகள் குறித்து பாராட்டி, ஸ்ரீ ராமச்சந்திர மிஷன் தலைவர் கமலேஷ் படேல் கூறியதாவது: பிரதமர் மோடி வெறும் அரசியல் தலைவர் மட்டுமல்ல. ஆன்மிகப் பக்குவமும், தீர்க்கமான தலைமைத்துவமும் ஒருங்கே அமையப் பெற்றவர். 17 வயதிலேயே வீட்டைத் துறந்து இமயமலை பயணம் மேற்கொண்டவர். சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, சேவையையே தனது வாழ்நாள் இலக்காக மாற்றிக் கொண்டவர். தொண்டர், அமைப்பாளர், குஜராத் முதல்வர், தற்போது நாட்டின் பிரதமர் எனப் பொறுப்புகள் மாறினாலும், அவரிடம் உள்ள சேவை மனப்பான்மை துளியும் மாறவில்லை.
1979ல் மோர்பி அணை உடைந்தபோது, களத்தில் இறங்கி மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். அதன் தாக்கமே, சமீபத்தில் கேரளாவின் வயநாடு நிலச்சரிவின் போது பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை அவரால் ஆழமாக உணர வைத்தது.
1990ல் டில்லியில் இருந்து ஆமதாபாத் சென்ற ரயிலில், இருக்கை கிடைக்காமல் தவித்த இரு பெண் ரயில்வே அதிகாரிகளுக்காக, மோடியும், சங்கர்சிங் வகேலாவும் தங்களின் முதல் வகுப்பு படுக்கைகளை விட்டுக் கொடுத்துவிட்டு, தரையில் துணியை விரித்துப் படுத்து தூங்கினர். வெளிச்சம் படாத நேரத்திலும் அடுத்தவர் துயர் துடைக்கும் இத்தகைய குணமே ஒரு உண்மையான தலைவரை அடையாளம் காட்டுகிறது.
2001ல் கடுமையான நிலநடுக்கத்தால் குஜராத் நிலைகுலைந்திருந்த நேரத்தில், தேர்தல் அரசியலே அறியாத 51 வயது மோடியிடம் முதல்வர் பதவி ஒப்படைக்கப்பட்டது. எத்தனையோ சந்தேகங்கள், விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அச்சம் என்பது என்னவென்றே அறியாமல் களப்பணியாற்றி வெற்றிகரமான நிர்வாகியாக மாறினார்.
அதேபோல், 2014ல் பிரதமராகப் பொறுப்பேற்றபோதும், உலக அரங்கில் இந்தியாவின் நிலைப்பாடு, தேசப் பாதுகாப்பு என மிகப்பெரிய பொறுப்புகள் அவர் முன் நின்றன. தொடர்ந்து வந்த கோவிட் பெருந்தொற்று, உக்ரைன் போர், மேற்கு ஆசியப் பதற்றங்கள் என உலகமே தத்தளித்த காலகட்டங்களில் கூட, 140 கோடி மக்களின் நம்பிக்கையைச் சுமந்து நாட்டைத் திறம்பட வழிநடத்தினார்.
மனதில் எந்தவித பயமோ, சுயலாபமோ இன்றி, உறுதியான நம்பிக்கையுடன் மக்கள் பணியாற்றுவதே மோடியின் வெற்றி ரகசியம். பொதுவாழ்வில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அவரது இந்த 25 ஆண்டு சேவைப் பயணம் ஒரு மிகச்சிறந்த பாடமாகும். தேசத்தை மேலும் பல புதிய சிகரங்களுக்கு எடுத்துச் செல்ல பிரதமர் மோடிக்கு நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும் இறைவன் அருள வேண்டும். இவ்வாறு அவர் வாழ்த்தியுள்ளார்.