📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 24, 2026 10:03 AM

ஆப்கானிஸ்தானை அலறவிட்ட ஜப்பான்.. பந்துவீச்சில் கெத்து ஆனால் பேட்டிங்கில் சொதப்பி தோல்வி

ஆப்கானிஸ்தானை அலறவிட்ட ஜப்பான்.. பந்துவீச்சில் கெத்து ஆனால் பேட்டிங்கில் சொதப்பி தோல்வி

ஆப்கானிஸ்தானை அலறவிட்ட ஜப்பான்.. பந்துவீச்சில் கெத்து ஆனால் பேட்டிங்கில் சொதப்பி தோல்வி

நிஷின்: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டு ஆடவர் கிரிக்கெட் போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில், தன்னைவிட பலம் வாய்ந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு ஜப்பான் கடும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. பந்துவீச்சில் ஆப்கானை திணறடித்த ஜப்பான் அணி, பேட்டிங்கில் செய்த தவறுகளால் 48 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

நிஷின் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜப்பான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் பேட்டர்களுக்குத் தொடக்கம் முதலே நெருக்கடி கொடுத்த ஜப்பான் பந்துவீச்சாளர்கள், அவர்களை எளிதாக ரன் குவிக்க விடாமல் கட்டுப்படுத்தினர். ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது அக்ரம் 34 ரன்களும், கேப்டன் தர்விஷ் ரசூலி 29 ரன்களும், முகமது இஷாக் ஆட்டமிழக்காமல் 25 ரன்களும் எடுத்தனர். ஜப்பான் வீரர்கள் இப்ராஹிம் தகாஹாஷி, ஷோமா சுகாயா தலா 2 விக்கெட்டுகளைச் சாய்க்க, ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதை அடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஜப்பான் அணி, தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானுக்கு பயம் காட்டியது. பெஞ்சமின் இடோ-டேவிஸ் 8 பந்துகளில் 17 ரன்களும், சகுரானோ-தாமஸ் 23 ரன்களும் விளாசினர். இதனால் ஜப்பான் அணி 7.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் என்ற வலுவான நிலையில் வெற்றியை நோக்கி நகர்ந்தது.

ஆனால், ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அரப் குல் பந்துவீச வந்ததும் ஆட்டம் தலைகீழாக மாறியது. அவர் 4 ஓவர்களில் 2 மெய்டன்களுடன் வெறும் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளி மிரட்டினார். இதனால் ஜப்பான் அணி அடுத்த 10 ரன்களுக்குள் அடுத்தடுத்து 6 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 63 ரன்களுக்கு 8 விக்கெட்கள் இழப்பு என படுமோசமாக சரிந்தது.

இறுதியில் ஜப்பான் அணி 19.3 ஓவர்களில் 81 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மற்றொரு சுழற் பந்துவீச்சாளரான நங்கேயாலியா கரோட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆப்கானிஸ்தான் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், முழுநேர சர்வதேச அணியான ஆப்கானிஸ்தானை ஜப்பான் பந்துவீச்சாளர்கள் மிரட்டிய விதம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.