ஆசிய விளையாட்டு போட்டி: பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார் மீராபாய் சானு
மீராபாய் சானு
2 முறை உலக சாம்பியனான வட கொரியாவின் ரி சாங் கம் 215 கிலோ எடையை தூக்கி (94+121) தொடர்ச்சியாக 3-வது முறையாக தங்கப் பதக்கம் வென்றார். அவர், ஸ்நாட்ச் மற்றும் கிளீன் அன்ட் ஜெர்க்கில் உலக சாதனையையும் படைத்தார். இந்தோனேஷியாவின் லுலுக் டயானா திரி விஜயனா 191 கிலோ எடையை தூக்கி (88 கிலோ + 103 கிலோ). வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
12 ஆண்டு போராட்டம்
மகளிர் ஹாக்கியில் இந்திய அணி அபாரம்: ஆசிய விளையாட்டு மகளிர் ஹாக்கியில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது 3-வது லீக் ஆட்டத்தில் நேற்று தாய்லாந்துடன் மோதியது. இதில் இந்திய அணி 20-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தீபிகா ஷெராவத் 9 கோல்கள் அடித்து (2, 8, 9, 24, 33, 36, 39, 51 மற்றும் 57-வது நிமிடங்கள்) சாதனை படைத்தார்.
அதேவேளையில் நவ்னீத் கவுர் 4 கோல்களும் (4, 29, 35 மற்றும் 51-வது நிமிடம்), ருதுஜா 3 கோல்களும் (10, 11, 47-வது நிமிடங்கள்) அடித்தனர். நேகா கோயல் (19-வது நிமிடம்), லால்ரெமிசியாமி (26-வது நிமிடம்), சாக் ஷி ராணா (29-வது நிமிடம்), சலிமா டேட்டே (45-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். இது இந்திய மகளிர் அணிக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. இந்திய அணி முதல் ஆட்டத்தில் 19-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானையும், 2-வது ஆட்டத்தில் 17-1 என்ற கணக்கில் இந்தோனேஷியாவையும் வீழ்த்தியது. தற்போதைய வெற்றியின் மூலம் தனது பிரிவில் முதலிடம் வகிக்கும் இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் ஜப்பானுடன் மோதுகிறது.
சாஃப்ட் டென்னிஸில் ஜெய் மீனாவுக்கு வெண்கலம்: ஆசிய விளையாட்டு போட்டியில் சாஃப்ட் டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் ஜெய் மீனா, ஜப்பானின் டகுயா குரோசகாவுடன் மோதினார். 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜெய் மீனா 2-4 (3-5, 1-4, 1-4, 4-1, 6-4, 1-4) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
அரை இறுதியில் தோல்வி அடைந்த ஜெய் மீனாவுக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்படும். ஆசிய விளையாட்டில் கடந்த 2018 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் பங்கேற்ற போதிலும் தற்போதுதான் முறையாக பதக்கம் கைப்பற்றுகிறார் ஜெய் மீனா. மேலும் ஆசிய விளையாட்டில் சாஃப்ட் டென்னிஸில் இந்தியா கைப்பற்றும் முதல் பதக்கம் இதுவாகும்.
கபடியில் இந்திய அணிகள் அசத்தல் வெற்றி: ஆசிய விளையாட்டில் மகளிருக்கான கபடியில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் நேற்று ஈரானுடன் மோதியது. இதில் இந்திய மகளிர் அணி 37-23 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.
அதேவேளையில் ஆடவர் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 48-25 என்ற புள்ளிகள் கணக்கில் வங்கதேசத்தை தோற்கடித்தது. இந்திய மகளிர், ஆடவர் அணிகளுக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. இந்திய மகளிர் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று ஜப்பானுடன் மோதுகிறது. அதேவேளையில் ஆடவர் அணி, சீன தைபேவை சந்திக்கிறது.
ஸ்குவாஷில் அபய் சிங், தன்வி கன்னா வெற்றி: ஆடவருக்கான ஸ்குவாஷ் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் அபய் சிங் 11-1, 11-0, 11-2 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் அர்காரடெட் அர்காரஹிரன்யாவை வீழ்த்தினார். மற்றொரு இந்திய வீரரான வீர் சோட்ரானி 11-8, 11-3, 11-3 என்ற செட் கணக்கில் இலங்கையின் ஷமிர் வாகீலை தோற்கடித்தார். மகளிர் பிரிவில் இந்தியாவின் தன்வி கன்னா 11-5, 11-7, 11-5 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் தாமி கிம்மை வீழ்த்தினார்.
நீச்சலில் தமிழகத்தின் பெனடிக்டன் 13-வது இடம்: ஆடவருக்கான நீச்சலில் 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவு தகுதி சுற்றில் இந்தியாவின் ரோஹித் பெனடிக்டன் பந்தய தூரத்தை 53.08 விநாடிகளில் கடந்து 13-வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெறத் தவறினார். பெனடிக்டன் தமிழக வீரர் ஆவார்.
ஆசிய விளையாட்டில் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையரில் இந்தியாவின் தியா சித்தலே, மனுஷ் ஷா ஜோடி 11-0, 11-7, 11-6 என்ற செட் கணக்கில் மாலத்தீவுகளின் மூசா அகமது, ஆயிஷாத் நசீம் ஜோடியை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதேபோன்று யஷஸ்வினி கோர்படே, ஹர்மீத் தேசாய் ஜோடியும் கால் இறுதியில் நுழைந்தது.
மனுபாகர் 5-வது இடம் பிடித்து ஏமாற்றம்: துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற இந்தியாவின் மனுபாகர் 181.1 புள்ளிகளுடன் 5-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்திய மகளிர் அணி 4-வது இடம் பிடித்தது. வியட்நாமும், இந்திய அணியும் தலா 1,719 புள்ளிகளை பெற்றிருந்தன. ஆனால் உள்வட்டத்தில் குறைவான புள்ளிகளை இந்தியா பெற்றிருந்ததால் பதக்க வாய்ப்பை இழந்தது.
ஆடவருக்கான வாள்வீச்சில் கிஷோ நிதி தோல்வி: வாள்வீச்சில் ஆடவருக்கான தனிநபர் சேபர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் கிஷோ நிதி, கஜகஸ்தானின் ஆர்டியோம் சர்கிஸ்யானுடன் மோதினார். இதில் கிஷோ நிதி 11-15 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். முன்னதாக நடைபெற்ற லீக் போட்டியில் கிஷோ நிதி 5 ஆட்டங்களில் 3-ல் வெற்றி கண்டிருந்தார். கிஷோ நிதி தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
மகளிருக்கான ஃபாயில் தனிநபர் பிரிவில் இந்தியாவின் மினா தேவி நவுரம் 3-15 என்ற கணக்கில் தென் கொரியாவின் பார்க் ஜிஹீயிடமும், அஷ்மிதா ஸ்டாலின்ராஜ் 14-15 என்ற கணக்கில் கஜகஸ்தானின் அல்யோனா க்னோயேவாவிடமும் தோல்வி அடைந்தனர்.
பாட்மிண்டனில் வெண்கலம்: பாட்மிண்டனில் ஆடவருக்கான அணிகள் பிரிவில் இந்தியா 1-3 என்ற கணக்கில் சீனாவிடம் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றது. ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் லக் ஷயா சென் 16-21, 18-21 என்ற செட் கணக்கில் தரவரிசையில் ஷி யு கி-யிடம் தோல்வி அடைந்தார்.
இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 21-11, 22-20 என்ற செட் கணக்கில் லியாங் வெய் கெங், வாங் சாங் ஜோடியை வீழ்த்தியது. இதனால் இந்த மோதல் 1-1 என சம நிலையை எட்டியது.
தொடர்ந்து ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 19-21, 13-21 என்ற செட் கணக்கில் லி ஷி பெங்கிடம் வீழ்ந்தார். இதன்பின்னர் இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் ஹரிகரண் அம்சகருணன், எம்.ஆர்.அர்ஜூன் ஜோடி 16-21, 21-17, 9-21 என்ற செட் கணக்கில் ஹீ ஜி டிங், லியு யி ஜோடியிடம் தோல்வி அடைந்தது. இதில் ஹரிகரண் தமிழகத்தை சேர்ந்தவர்.
கால் இறுதியில் அங்குஷ் பங்கால்: ஆடவருக்கான குத்துச் சண்டையில் 80 கிலோ எடைப் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அங்குஷ் பங்கால், பக்ரைனின் ஹம்சா வோகலுடன் மோதினார். இதில் அங்குஷ் பங்கால் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். கால் இறுதி சுற்றில் தஜகிஸ்தானின் நெக்ரூஸ் சலிமோவுடன் மோது கிறார் அங்குஷ் பங்கால்.
இறுதிப் போட்டியில் ரோஷிபினா தேவி: வுஷு போட்டியில் மகளிருக்கான 60 கிலோ எடைப் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் ரோஷிபினா தேவி நவுரம், இந்தோனேஷியாவின் தானியா குசுமானிங்டியாஸுடன் மோதினார்.
இதில் ரோஷிபினா தேவி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் சீனாவின் சியாவு ஜாங்குடன் பலப்பரீட்சை நடத்துகிறார் ரோஷிபினா தேவி.