ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டண வசூல் அமைச்சரின் மெத்தனம் தான் காரணம்: உரிமையாளர் சங்கத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டு
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டண வசூல் அமைச்சரின் மெத்தனம் தான் காரணம்: உரிமையாளர் சங்கத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டு
கோவை: ஆம்னி பஸ் கட்டணம் மற்றும் பர்மிட் பிரச்னைகளில் போக்குவரத்துத்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்படுவதாகவும், அவரது மெத்தனபோக்கு தான் பஸ் கட்டண உயர்வுக்கு காரணம் எனவும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து சங்கத்தின் நிறுவனர் பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: ஆம்னி பஸ் கட்டணத்தை நாங்கள் உயர்த்தவில்லை. கடந்த 2024ம் ஆண்டு தீபாவளி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட விழாக்காலங்களில் வசூலித்த அதே கட்டணத்தையே தற்போது வசூலித்து வருகிறோம்.
இதற்கான கட்டண பட்டியலை தமிழ்நாட்டில் செயல்படும் 3 முக்கிய ஆம்னி பஸ் சங்கங்களும் இணைந்து அதிகாரிகளிடம் வழங்கி இருக்கிறோம். எங்களது சங்கத்தில் உள்ள சுமார் 250 பஸ்களிலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்படுகிறது. ஆனால், சங்கங்களில் சேராத சில பஸ்கள் ரூ.5,000, ரூ.6,000 என அதிக கட்டணம் வசூலிப்பது உண்மை. இதனால் ஒட்டுமொத்த ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. இது போன்ற பஸ்களை கண்டறிந்து பர்மிட்டை ரத்து செய்ய வேண்டும்.
மேலும், பயணிகளை நடுவழியில் இறக்கிவிடாமல், அவர்கள் செல்ல வேண்டிய இடத்தில் பத்திரமாக இறக்கிவிட்ட பின்னர் சம்பந்தப்பட்ட பஸ்சை சிறைப்பிடிக்க வேண்டும். சில கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் முன்பதிவு நிறுவனங்கள் சாதாரண நாட்களில் குறைந்த கட்டணத்தில் டிக்கெட் வழங்குகின்றன. ரூ.1, ரூ.500, ரூ.600 போன்ற சலுகை கட்டணங்களில் பயணிகளை அழைத்து செல்கின்றனர். ஆனால் விழாக்காலங்களில் திடீரென கட்டணம் அதிகரிக்கும் போது பொதுமக்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது.
அரசு பஸ்களுக்கு இருப்பதை போல அனைத்து ஆம்னி பஸ்களுக்கும் ஒரே மாதிரியான நிர்ணயிக்கப்பட்ட கட்டண முறையை கொண்டு வர வேண்டும். ஆம்னி பஸ்களுக்கான பர்மிட் வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பணம் செலுத்திய சுமார் 250 பர்மிட்களில் 150-க்கும் மேற்பட்டவை இதுவரை வழங்கப்படவில்லை. மேலும், சுமார் 80 புதிய பஸ்களுக்கு பர்மிட் வழங்கப்பட்டிருந்தாலும், அவற்றை இயக்குவதற்கான ‘எபெக்ட்’ வழங்கப்படாததால் பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்னைகளில் அமைச்சர் நேரடியாக தலையிட்டு அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்திருந்தால் 80 புதிய பஸ்களும் இயக்கத்திற்கு வந்திருக்கும். இதனால் பஸ் பற்றாக்குறை, அதிக கட்டணம் போன்ற பிரச்னைகளும் ஏற்பட்டிருக்காது. இந்த பிரச்னை குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் முன்கூட்டியே ஆம்னி பஸ் சங்கங்களை அழைத்து ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை அமைச்சர் எந்த சங்கத்தின் பிரதிநிதிகளையும் அழைத்து பேசவில்லை.
போக்குவரத்துத்துறை அமைச்சர் பொறுப்பற்ற அமைச்சராக இருக்கிறார். ஆக்டிவாக இல்லை. அமைச்சரின் நடவடிக்கைகள் மெத்தனமாக இருக்கிறது. போக்குவரத்துத்துறை என்பது பொதுமக்கள் நலனுடன் தொடர்புடைய துறை. எனவே, போக்குவரத்துத்துறை அமைச்சர் இனியும் காலம் தாழ்த்தாமல் ஆம்னி பஸ் சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தில் பஸ்களை இயக்க நாங்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு கூறினார்.