அ.தி.மு.க-வில் ‘அசுரன்’?
அ.தி.மு.க-வில் ‘அசுரன்’? - எடப்பாடியின் பிளான் ‘D’
பொதுத்தேர்தலுக்கு முன்னதாகவே த.வெ.க-வுடன் கூட்டணிக்குப் போயிருந்தால், இன்றைக்கு இவ்வளவு பிரச்னைகள் அ.தி.மு.க-வுக்கு வந்திருக்காது.
அ.தி.மு.க-வுக்குள் நடக்கும் பங்காளிச் சண்டை நாளுக்கு நாள் உக்கிரமாகிக்கொண்டே வருகிறது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்ற, தீவிரமான திட்டங்களைத் தீட்டிவருகிறது வேலுமணி, சி.வி.சண்முகம் டீம். பதிலடியாக, சண்முகத்தின் ஆதரவாளர்கள் சுமார் 100 பேரை கட்சியைவிட்டு நீக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த யுத்தத்துக்கு இடையே, தொண்டர்கள்தான் ரொம்பவும் சோர்ந்து போய்விட்டார்கள். ‘மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கும் அ.தி.மு.க-வுக்கு இனி எதிர்காலமே இல்லையா..?’ என்கிற கேள்வி கட்சிக்குள்ளேயே எழுந்திருக்கிறது.
‘அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’ என்று சசிகலா அறைகூவல் விடுத்தும்கூட, அதிகாரத்தை விட்டுக்கொடுக்க விருப்பமில்லாமல், ஒரு மிகப்பெரிய திட்டத்தோடு தயாராகிறார் எடப்பாடி பழனிசாமி. பொதுவாக, மாற்றுத் திட்டங்களை பிளான் ‘பி’ என்று சொல்வதுண்டு. ஆனால், எடப்பாடி பழனிசாமியின் கையில் இருப்பது பிளான் ‘டி’ என ட்விஸ்ட் வைக்கிறார்கள் இலைக் கட்சி வட்டாரத்தில். அ.தி.மு.க-வுக்குள் என்னதான் நடக்கிறது?
இடைத்தேர்தல் தோல்வி... போர்க்கொடி தூக்கும் சீனியர்கள்!
2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சி.வி.சண்முகம், வேலுமணி தலைமையில் அமைச்சரவைக் கனவோடு ஒரு கிளர்ச்சி அணி உருவானது. மூன்றில், இரண்டு பங்குஎம்.எல்.ஏ-க்களை அவர்களால் திரட்ட முடியாததால், எம்.எல்.ஏ பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள மீண்டும் எடப்பாடி பழனிசாமியிடமே தஞ்சமடைந்தனர். ஆனால், சரண்டரானவர்களிடமிருந்து பறித்த கட்சிப் பதவிகளை இப்போது வரை திருப்பியளிக்கவில்லை எடப்பாடி. அதுவே ஒரு புகைச்சலாகக் கட்சிக்குள் பலரது மூச்சையும் முட்டியது.
இந்தச் சூழலில் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மீண்டும் கிளர்ச்சி அணி போர்க்கொடி தூக்கியிருக்கிறது. அ.தி.மு.க தொடங்கப்பட்ட 55-வது ஆண்டு விழா நிகழ்வில் எடப்பாடியுடன் பங்கேற்கக்கூட அவர்கள் தயாராக இல்லை. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அவர்களுக்கு ‘சப்போர்ட்’ கிடைக்கவில்லை என்பதுதான் நமக்குக் கிடைக்கும் தகவல்.
‘வேலுமணியை நம்பிச் சென்றால் உள்ளதும் போய்விடும். போன முறை அவரை நம்பி நாம் சென்றபோதே, நம்முடைய அழைப்புகளைக்கூட அவர் ஏற்கவில்லை’ என்று பலரும் தயங்குகிறார்கள். அணி தாவ ஒரு சிலஎம்.எல்.ஏ-க்கள் 20 ஸ்வீட் பாக்ஸுகளுக்கு மேல் எதிர்பார்க்கிறார்கள். ‘அதற்கான பொறுப்பை யார் ஏற்பது...’ என்கிற குழப்பம் வேலுமணி டீமுக்குள் நிலவுகிறது. சட்டரீதியாகக் கட்சியைக் கைப்பற்றும் ஆலோசனை நடைபெறுகிறது என்றாலும், அதற்கான எம்.எல்.ஏ ஆதரவு பலம் கிடைக்கவில்லை. டெல்லியும் இதுவரை பாசிட்டிவ் சிக்னல் காட்டவில்லை” என்றனர்.
கட்சிக்குள் வரும் `அசுரன்’? - எடப்பாடியின் பிளான் தனுஷ்!
‘`கட்சியை அடுத்தகட்டத்துக்கு நகர்த்த எந்தத் திட்டமும் எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை’ என நினைக்கிறது வேலுமணி தரப்பு. ஆனால், அவர் மிகப்பெரிய திட்டத்தோடுதான் இருக்கிறார். அதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகளும் முடிந்துவிட்டன என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
அது குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க அமைப்புச் செயலாளர்கள் சிலர், “தி.மு.க-வின் ஓட்டுகளை த.வெ.க பிரித்து, அ.தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடும் எனக் கடைசிவரை நம்பினார் எங்கள் பொதுச்செயலாளர். ஆனால், அவர் எதிர்பார்க்காத முடிவுகள் வந்துவிட்டன. த.வெ.க-வுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்தபோது, ‘விஜய்க்குக் கீழே துணை முதல்வராக நம்மால் இருக்க முடியாது. வேலுமணியும் சண்முகமும் அமைச்சராகிவிட்டால், நம்மை மதிப்பார்களா... அவர்களுக்கு அதிகாரம் கிடைத்துவிட்டால், அடுத்து கட்சியைத்தானே குறிவைப்பார்கள்?’ என்று கணக்கு போட்டு, ஆதரவு கொடுக்கச் சம்மதிக்கவில்லை எடப்பாடி.
இப்போது, அ.தி.மு.க-விலிருந்து பலரும் விலகி த.வெ.க-வில் இணைந்துவருவதாலும், தொடர் தோல்விகள் தந்த சோர்வினாலும், ஏதாவது ஒரு முடிவை எடுத்தாகவேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். அப்போதுதான், அ.தி.மு.க-வுக்குள் நடிகர் தனுஷைக் கொண்டுவரும் யோசனையைச் சிலர் சொல்ல, அந்த முடிவுக்கு வந்திருக்கிறார் எடப்பாடி. தனுஷுக்கும்கூட, அப்படியொரு விருப்பம் இருப்பதாகத் தெரியவந்ததை அடுத்து, முதற்கட்டமாக சிலர் தனுஷிடம் பேசியிருக்கின்றனர். தமிழ்நாட்டுக்கு வெளியே மூன்று முறை தனுஷும், எடப்பாடியின் மகன் மிதுனும் பேசியிருக்கின்றனர்.
அ.தி.மு.க-வில், இணைப் பொதுச்செயலாளர் அல்லது இளைஞரணிச் செயலாளர் பொறுப்பு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. த.வெ.க-வுடன் போட்டி போடவும், இளைஞர்களைக் கழகத்துக்குள் இழுத்து கரையும் கட்சியைக் காப்பாற்றவும், தனுஷை ஒரு அஸ்திரமாகப் பயன்படுத்தும் திட்டத்துக்கு வந்திருக்கிறார் எடப்பாடி. அது மட்டுமல்ல, எதிர்காலத்தில் தன் மகன் மிதுனைக் கட்சிக்குள் கொண்டுவரவும், தனுஷின் என்ட்ரி சரியான சாய்ஸாக இருக்குமெனவும் நம்புகிறார். சமூகரீதியாக தனுஷுக்கு இருக்கும் ஆதரவு, அ.தி.மு.க-வுக்குக் கைகொடுக்கும் எனவும் கணக்கு போடப்பட்டிருக்கிறது. எல்லாமே திட்டமிட்டபடி நடந்தால், விரைவிலேயே தனுஷை அ.தி.மு.க கரைவேட்டியோடு பார்க்கலாம்’’ என்கிறார்கள்.
தனுஷின் திட்டம் என்ன?
இந்தச் சூழலில்தான் தன் ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றியிருக்கிறார் நடிகர் தனுஷ். மன்றத்தில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட கொடியிலும், சில மாற்றங்களைச் செய்திருக்கிறார். அரசியலுக்கு வருவதற்கான பணிகளில் அசுர வேகமெடுத்திருக்கிறார்.
தனுஷின் திட்டம் குறித்து, அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசினோம். “தனுஷ் மனதில் அரசியல் ஆசைக்கான விதை விழுந்துவிட்டது. 2026 தேர்தல் முடிவுகள் அவருக்கு மிகப்பெரிய உத்வேகத்தைக் கொடுத்திருக்கின்றன. ஆனால், விஜய்யிடம் இருப்பதுபோல பெண்கள், குழந்தைகள் ரசிகர்களாக தனுஷுக்கு இல்லை. இதனால், தனக்கென ஒரு ‘மாஸ்’ வாக்குவங்கியை தனுஷால் உருவாக்க முடியாது.
தவிர, தனுஷுக்குப் பெரிய அளவில் மன்றக் கட்டமைப்பும் தற்போது இல்லை. ‘அரசியலுக்கு வருகிறேன்’ எனச் சொல்லிவிட்டு ரஜினி ஒதுங்கியதற்கு, தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டி அமைக்க முடியாததுதான் காரணம். நற்பணி மன்றத்தின் மூலமாகக் கட்டமைப்பை உருவாக்கினாலும், அதைக் கட்டுக்கோப்பாக அடுத்த தேர்தல் வரை கொண்டு செல்வது கடினம். அதற்கான நிதிப் பின்புலம் தனுஷிடம் இல்லை. அதனால்தான், கட்டமைப்பு வலுவாக இருக்கும் அ.தி.மு.க-வில் சேர்ந்து, தன் அரசியல் எதிர்காலத்துக்கு அடித்தளமிடும் ஆலோசனைக்குத் தலையாட்டியிருக்கிறார் தனுஷ்.
அ.தி.மு.க-வுக்கு நெருக்கமான ஒரு தொழிலதிபர், தனுஷுக்கும் நலம் விரும்பியாக இருக்கிறார். அந்தத் தொழிலதிபர் மூலமாகவே இணைப்பு உருவாகி, பேச்சுவார்த்தைகளும் நடந்து முடிந்திருக்கின்றன. தனுஷுக்குப் பின்னால் மிகப்பெரிய இளைஞர் பட்டாளம் இருக்கிறது. அ.தி.மு.க-வுக்கு வாக்குவங்கி இல்லாத தென்மாவட்டங்களில், அவரை முன்னிறுத்தி சில சமூக ஓட்டுகளை அணிதிரட்ட முடியும். இப்படியெல்லாம் யோசித்துத்தான், இருவருமே கைகோக்கத் தயாராகிறார்கள்’’ என்றனர்.
பின்னணியில் பா.ஜ.க?
இது ஒருபுறமிருக்க, ‘`தனுஷைஅ.தி.மு.க-வுக்குள் கொண்டுவரும் திட்டத்துக்குப் பின்னால் பா.ஜ.க இருக்கிறது. விஜய் Vs தனுஷ் என்கிற அரசியலை உருவாக்கி, எதிர்காலத்தில் தங்களுக்கான திட்டங்களை நிறைவேற்றப் பார்க்கிறார்கள். வெறுமனே தனுஷை முன்னிறுத்துவதைவிட, அ.தி.மு.க வழியாகக் கொண்டுவரலாம் எனவும் திட்டம் தீட்டுகிறார்கள்’’ என்கிற கருத்துகளையும் ஒரு சிலர் முன்வைக்கின்றனர்.
எது எப்படியோ... “70 படங்களில் நடித்தும் ஒரு தேசிய விருதுகூட வாங்க முடியவில்லை” என்று முதல்வர் விஜய்யை, எடப்பாடி பழனிசாமி விமர்சித்ததற்குப் பின்னால் எதிர்கால அரசியல் கணக்குகள் இருந்திருக்கின்றன. இதுவரை ஆறு தேசிய விருதுகளைப் பெற்ற தனுஷைத் தன் கட்சிக்கு கொண்டு வந்து, சினிமா பிரபலத்தால் அரசியலில் இழந்த இடத்தைப் பிடிக்கத் திட்டமிடுகிறார் எடப்பாடி பழனிசாமி. திட்டமிடுவதுபோல நடந்தால், கட்சியிலிருந்து சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள் எனவும் அவர் நம்புகிறார்.
55-வது ஆண்டில் அடியெடுத்துவைக்கும் அ.தி.மு.க-வுக்கு, இந்தப் புதிய அஸ்திரம் கைகொடுக்கும் என்பது பழனிசாமியின் எண்ணம். ஆனால், திட்டமிடுவதுபோல் எல்லாமே நடக்குமா?