தமிழ் பாடத்தில் 40,000 மாணவர்கள் தோல்வி: உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் கவலை
சென்னை: “தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டதாக சர்ச்சை கிளம்பியது. ஆனால், கடந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டும், பள்ளி மாணவர்கள் 40,000 பேர், தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. தற்போது, இந்த அளவில் தான் தமிழகத்தில் தமிழ் மொழிக் கல்வியறிவு உள்ளது,” என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் பேசினார்.டாக்டர் உ.வே.சாமிநாதையர் நுால் நிலையம் மற்றும் சென்னை சிவாலயம் இணைந்து நடத்தும், 'சுவடிப் பதிப்புகளும் உரையாசிரியர்களும்' எனும் இரண்டு நாள் பயிலரங்கம், சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நேற்று துவங்கியது.வி.ஐ.டி., பல்கலை வேந்தரும், உ.வே.சா., நுால் நிலைய தலைவருமான கோ.விஸ்வநாதன் தலைமை வகித்தார். நிகழ்வில், தாமல் கோ.சரவணன் எழுதியுள்ள, 'சிலம்பின் பாத்திரப் பரல்கள்' நுால் வெளியிடப்பட்டது.சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், நுாலை வெளியிட்டார். முதல் பிரதியை, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜெகதீசன் பெற்றுக் கொண்டார். நுாலை வெளியிட்டு, நீதிபதி சுரேஷ்குமார் பேசியதாவது:நாட்டின் எந்த பகுதிக்கு சென்றாலும், தமிழர் என்பதையே நாம் அடையாளமாக கொண்டிருக்கிறோம். சமஸ்கிருதம் ஒரு பழமையான மொழி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அம்மொழி பேச்சு வழக்கில் இல்லை.உலகில் எந்த பகுதிகளில் எல்லாம் தமிழன் இருக்கிறானோ, அங்கு எல்லாம் தமிழ் பேசப்படுகிறது. திருவள்ளுவருக்கும், தமிழ் பற்றாளர்களுக்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. இந்த பெருமைக்கெல்லாம் தமிழ்த் தாத்தா உ.வே.சா., தான் காரணம்.உ.வே.சா., நுால் நிலையத்தில், பெரியபுராணம், பக்தி இலக்கியம் உட்பட அனைத்து ஓலைச்சுவடிகளும், ஒரே இடத்தில், ஒருசேர குவிக்கப்பட்டு உள்ளன. இதை எத்தனை பேர் சென்று பார்த்துள்ளோம்.தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டதாக, அரசியல் கட்சியினர் சர்ச்சை எழுப்பினர். அதற்குள் நான் செல்லவில்லை. அதை அவர்களே தீர்த்துக் கொள்ளட்டும். ஆனால், கடந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டும் நடந்த 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், 40,000 மாணவர்கள், தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை.அதற்கு இணையாக, 40,000 மாணவர்கள், தமிழ் மொழி பாடத்தேர்வுக்கு பயந்து, தேர்வு எழுதாமல் ஓடிவிட்டனர். இது, அரசுக்கு தெரியுமா, தெரியாதா? தற்போது, இந்த அளவில் தான் தமிழகத்தில் தமிழ் மொழிக் கல்வியறிவு உள்ளது.மதுரை, தஞ்சை நுாலகங்களில், பல ஓலைச்சுவடிகள் இன்னும் அச்சுக்கு வராமல் உள்ளன. அவற்றை அச்சுக்கு கொண்டு வந்து, தமிழர்களின் கைகளிலே கொண்டு சேர்ப்பது, அரசின் கடமை. அந்தக் கடமையை இது வரை தமிழக அரசு ஏன் செய்யவில்லை?பண்டைய தமிழ் இலக்கிய பொக்கிஷங்களை, அரசு செலவில் அச்சுக்கு கொண்டு வர வேண்டும். இந்த பணிகளை, புதிய அரசு மேற்கொள்ள வேண்டும். பல பேருக்கு ஓலைச்சுவடிகளை படிப்பதில் சிரமம் உள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைகளில், அவற்றை படிக்கும் பயிற்சிகளை அளிக்க வேண்டும். உ.வே.சா., நுாலகத்தில் உள்ள சட்டப் பிரச்னைகள் தீர வேண்டும். நுால் நிலைய கட்டடமும், அந்த இடமும் அந்த அமைப்புக்கு வர வேண்டும்.நம் வாழ்வின் ஒரு பகுதியை தமிழுக்காக செலவிட்டால், தமிழ் வாழும்; தமிழ் வளரும். தமிழ் நம்மையும் வாழ வைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.