📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 03, 2026 08:03 AM

158

158

சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில், காந்தியடிகளின் உருவப்படத்துக்கு சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், அமைச்சர்கள் என்.ஆனந்த், வெங்கட்ரமணன், ராம்குமார் எம்எல்ஏ உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். | படம்: எல்.சீனிவாசன் |

சென்னை: ‘தேசத்தந்தை’ மகாத்மா காந்தியடிகளின் 158-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக அரசு சார்பில் சட்டப் பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், அமைச்சர்கள் என்.ஆனந்த், ப.வெங்கட்ரமணன் ஆகியோர் எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்தும், உருவப்படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஏ.அருண் தம்புராஜ், மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள காந்தியின் சிலைக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் மாலை அணிவித்தும், உருவப்படத்துக்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காந்தியின் உருவப்படத்துக்கு முதல்வர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆ.விஜய் தமிழன் பார்த்திபன், அரசு தலைமை கொறடா சபரிநாதன், தலைமைச் செயலர் எம்.சாய்குமார், போக்குவரத்துத் துறை செயலர் இல.நிர்மல்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், உயர்கல்வி அமைச்சர் பி.விஸ்வநாதன் மற்றும் சு.திருநாவுக்கரசர், கே.வீ.தங்கபாலு உள்ளிட்டோர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

அமமுக துணை பொதுச் செயலாளர் ஜி.செந்தமிழன், பொருளாளர் கரிகாலன் ஆகியோர் கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகத்தில் காந்தியின் உருவப்படத்துக்கு மாநில துணைச் செயலாளர் நா.பெரியசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் காந்தியின் உருவப்படத்துக்கு துணை செயலாளர் சந்திரன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் சிலைக்கு தமாக தலைவர் ஜி.கே.வாசன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். ஆளுநர் - முதல்வர் புகழாரம் காந்தியின் பிறந்தநாளையொட்டி ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘2047-ம் ஆண்டு ‘வளர்ந்த இந்தியா’ என்ற இலக்கை நோக்கி நமது நாடு பயணித்து வரும் இன்றைய சூழல், வலிமையான, தன்னிறைவு அடைந்த, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய இந்தியா என்று காந்தி கண்ட தொலை நோக்கு சிந்தனைக்கு பொருத்தமாக உள்ளது’’ என கூறியுள்ளார்.

முதல்வர் விஜய் வெளியிட்ட பதிவில், ‘‘மகாத்மா காந்தியின் கனவுகளை நனவாக்கி, அமைதியும், நல்லிணக்கமும், சகோதரத்துவமும் தழைத்திடும் சமூகத்தை உருவாக்கி, நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாத்து, அவர் காட்டிய அறவழியில் நமது வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்’’ என குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்திகள் வருமாறு:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: மகாத்மா காந்தியின் பெருமையைப் போற்றும் வகையில், திமுக ஆட்சியில் எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் அவரது திருவுருவச் சிலையைத் திறந்து வைத்தேன்.

உத்தமர் காந்தி கிராம ஊராட்சி விருதுகளை மீண்டும் வழங்கத் தொடங்கினோம். காந்தியடிகளின் வாழ்வைப் படிப்போம்! மதநல்லிணக்கம் போற்றும் இந்தியாவைக் காப்போம்.

அதிமுக பொதுச்செயலாலர் பழனிசாமி: எளிய வாழ்வை ஏற்று, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய், கிராமங்களின் உயிர்ப்பாய், இந்தியாவின் பெயரை உலக அரங்கில் உயர்த்தியவர் மகாத்மா காந்தியடிகள். இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

மேலும், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், தமிழக பாஜக தலைவர் நயினார்நாகேந்திரன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட் டோரும் மகாத்மா காந்திக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.