📅 Thursday, 09 July 2026 IST | ஆனி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu May 27, 2026 06:30 PM

வானிலை முன்னறிவிப்பு: தருமபுரி, சேலம், வேலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

வானிலை முன்னறிவிப்பு: தருமபுரி, சேலம், வேலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

கோப்புப் படம்: வெங்கடாசலபதி

சென்னை: தமிழகத்தில் தருமபுரி, சேலம், வேலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை (மே 28) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 5.8 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 3.1 கிமீ முதல் 7.6 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் சுமார் 3.1 கிமீ முதல் 7.6 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக நாளை (மே 28) ஒரு சில இடங்களிலும், 29, 30 தேதிகளில் ஓரிரு இடங்களிலும், மே 31 முதல் ஜூன் 2-ம் தேதி வரை ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலும், 29-ம் தேதி வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

நாளையும், நாளை மறுதினமும் வட தமிழகத்தின் உள் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். இதர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வழக்கமான அளவிலேயே இருக்கக்கூடும்.

30, 31 தேதிகளில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கமான அளவிலேயே இருக்கும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 105 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் மே 31-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர், ஆதமங்கலத்தில் தலா 8 செமீ, கிருஷ்ணகிரி மாவட்டம் நாட்றம்பாளையத்தில் 7 செமீ, திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் கேஆர்பி அணையில் தலா 6 தெமீ, திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.