வரி என்ற பெயரில் அதிகாரிகளின் லஞ்ச வேட்டை எனக் குற்றச்சாட்டு
சென்னை: தமிழக எல்லைகளில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ‘வரி வசூல்’ என்ற பெயரில் லஞ்ச வேட்டையில் ஈடுபட்டு வருவதாக நெடுந்தொலைவு செல்லும் அனைத்து தனியார் பேருந்து (ஆம்னி பேருந்து) உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜெயபாண்டியன் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து திரு ஜெயபாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்துப்பேசினார். அப்போது, “நீண்ட தூரம் செல்லும் தனியார் பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி, முறையான அபராதத் தொகையைப் பெறுவதற்குப் பதிலாக, பரிசோதனை என்ற பெயரில் பேருந்து உரிமையாளர்களிடம் அதிகாரிகள் மாமூல் வசூலித்து வருகின்றனர். ஒரு வாகனத்திற்கு வாரத்திற்கு ரூ40,000 வீதம் மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை வரி என்ற பெயரில் லஞ்சப் பணம் வசூலிக்கப்படுகிறது.
தமிழகத்திலிருந்து கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்குச் செல்லும் தமிழக வாகனங்கள் எவ்விதச் சிரமமுமின்றிச் சென்று வருகின்றன. ஆனால், அண்டை மாநில வாகனங்கள் தமிழகத்திற்குள் நுழையும்போது எல்லைச் சோதனைச் சாவடிகளில் அதிகாரிகள் வேண்டுமென்றே மறிப்பதால், பயண நேரம் குறைந்தது மூன்று மணி நேரம் வரை தாமதமாகிறது.
மாதந்தோறும் ரூ.10 கோடிக்கும் அதிகமாக அரசுக்கு வரி செலுத்தும் சூழலில், ஆம்னி பேருந்துகளுக்கு மூன்று முறை வரி வசூலிக்கக் கூடாது எனப் போக்குவரத்து அமைச்சரிடம் முறையிட்டோம். ஆனால், ‘அதிகாரிகள் தங்கள் பேச்சைக் கேட்பதில்லை; இடைத்தேர்தலுக்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று அமைச்சர் கூறுகிறார். எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இதனிடையே, தமிழக-ஆந்திர எல்லையான கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வரி நிலுவை இருப்பதாகக் கூறி 10க்கும் மேற்பட்ட தனியார் சொகுசுப் பேருந்துகளைத் தடுத்து நிறுத்தினர். மேலும், அதில் இருந்த பயணிகளை நடுவழியில் வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டு மாற்றுப் பேருந்துகளில் செல்ல அறிவுறுத்தினர்.
முன்னறிவிப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதேபோல, அதிகாரிகளின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து பேருந்து ஓட்டுநர்கள் தங்களது பேருந்துகளைச் சோதனைச் சாவடி அருகே சாலையின் குறுக்கே நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.