வலிந்து நுழைக்கப்பட்ட இடைத்தேர்தல்... உணர்ந்து மக்கள் வாக்களிப்பார்களா?
வலிந்து நுழைக்கப்பட்ட இடைத்தேர்தல்... உணர்ந்து மக்கள் வாக்களிப்பார்களா?
தொகுதி மக்களின் குரலாக சட்டமன்றத்துக்குள்ளேயும் வெளியேயும் ஒலித்து, மக்களுக்கு தேவையானதைச் செய்து கொடுக்கவேண்டிய மிக உன்னதமான பணியைச் செய்ய வேண்டியவர்கள்தான் எம்.எல்.ஏ., எம்.பி-க்கள்.
பொதுத்தேர்தல் வாயிலாக இப்படி ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் தேர்வாகும் மக்கள் பிரதிநிதிகள், ஐந்தாண்டுக்காலத்துக்குள் இறந்துவிட்டாலோ அல்லது பதவியை ராஜினாமா செய்துவிட்டாலோ, தொகுதியின் மக்கள் பிரதிநிதிக்கான இடம் காலியாக இருந்து, அவர் ஆற்றக்கூடிய பணி மக்களுக்குக் கிடைக்காமல் போய்விடும். அப்படியொரு சூழலை தவிர்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இடைத்தேர்தல். இது ஜனநாயகரீதியில் சிந்தித்து வடிவமைக்கப்பட்ட நேர்மையான நடைமுறை..
இந்தச் சூழலில்தான், தமிழகத்தில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6-ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. வழக்கம்போல அனைத்துக் கட்சிகளும் வரிந்துகட்டி, தேர்தல் பணிகளில் களமிறங்கியிருக்கின்றன. வழக்கமான தேர்தல் ‘கவனிப்பு’கள் வாக்காளர்களை குஷிப்படுத்திவருகின்றன.
வழக்கமான ‘கவனிப்பு’ நடைமுறைகளில் நியாயமான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற குரல் வேகமாக ஒலித்துக்கொண்டிருக்கும் வேளையில், `இரு தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் வலிந்து நுழைக்கப்பட்ட தேவையில்லாத தேர்தல்’ எனப் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
‘ஆளுங்கட்சியில் இருந்தால்தான், தொகுதி மக்களுக்குத் தேவையானதைச் செய்து கொடுக்க முடியும். அதனால்தான் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தோம்’ என்று மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்ததற்குக் காரணம் கூறினர். ஆனால், அந்தக் காரணத்தை யாரும் ஏற்கவில்லை.
ஆக, இந்த இடைத்தேர்தல் வலிந்து வரவழைக்கப்பட்ட ஒன்று என்பதை அனைவரும் உணர்ந்திருக்கின்றனர். அதனால், ஓட்டளிக்கச் செல்லும் முன்பாக, இதை ஒவ்வொரு வாக்காளரும் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைகொண்ட ஒவ்வொருவரும் இதைத்தான் எதிர்பார்க்கின்றனர்.
ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடத்தப்படும் தேர்தலால், அரசுக்கு 4 கோடி ரூபாய்க்கும் கூடுதலாகத் தேர்தல் கமிஷன் வாயிலாக அரசுக்குச் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், அரசியல் ஆதாயங்களுக்காக வலிந்து நுழைக்கப்பட்டிருக்கும் இடைத்தேர்தல் வாயிலாக 8 கோடி ரூபாய்க்கும் அதிகமாக அரசுக்குத் தேவையில்லாத செலவு ஏற்படும் என்பதையும் எல்லோரும் கவனத்தில்கொள்ள வேண்டியிருக்கிறது.
கட்சிகளே, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளே... உங்கள் அரசியல் கணக்குகளுக்காக மக்கள் வரிப்பணத்தை வீணாக்குவது அரச குற்றம் என்று உணருங்கள். அரசு கல்விக்கு, அரசு மருத்துவமனைக்கு, சாலைப் பணிகளுக்கு என்றெல்லாம் செலவுசெய்யப்பட்டிருக்க வேண்டிய கோடிகள், உங்களால் இப்படி இடைத் தேர்தலுக்கு இறைக்கப்படுகிறது. மக்களது தீர்ப்பை அவமதித்து மீண்டும் தேர்தலைத் திணிக்கும் ஜனநாயகப் படுகொலையைச் செய்யாதீர்கள்.
பதவியை ராஜினாமா செய்யும் மக்கள் பிரதிநிதிகளே இடைத்தேர்தல் செலவை ஏற்க வேண்டும் என்ற சட்டம் வர காத்திருப்போம்!