விண்ணைத்தொடும் விலைவாசி உயர்வு; தவெகவை கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி
விண்ணைத்தொடும் விலைவாசி உயர்வு; தவெகவை கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் விரைவில் கூட்டப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Published : October 16, 2026 at 8:46 PM IST
திருச்சி: விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தவெக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடப்பு அரசியல் சூழ்நிலை தொடர்பாக பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
இதுதொடர்பாக பேசிய அவர், "தமிழகத்தில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. அரிசி, சர்க்கரை, புளி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலை சுமார் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விலைவாசி உயர்வு தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடமும் உரிய பதில் இல்லை.
விலைவாசி உயர்வால் ஏழை, எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வைத் தடுக்கவும் குறைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்வதற்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் விஜய் தண்ணீர் திறந்து வைத்தார். 45 நாட்களுக்குத் தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்றுடன் 45 நாட்கள் நிறைவடைந்ததால் தற்போது தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
சம்பா சாகுபடியை முழுமையாக மேற்கொள்ள வேண்டுமானால் ஜனவரி மாதம் வரை தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால், 45 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளால் முறையாக நடவு செய்ய முடியவில்லை. குறிப்பாக, கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் சென்றடையவில்லை.
சம்பா சாகுபடியை மேற்கொள்வதற்காகத் தண்ணீர் திறக்கப்பட்டும், அந்த நோக்கம் நிறைவேறவில்லை. ஏற்கெனவே குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சம்பா சாகுபடியும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 58 அடியாக மட்டுமே உள்ளது. இந்த நீர் இருப்பு குடிநீர்த் தேவைக்கே போதுமானதாக இருக்காது. தமிழகத்தில் 20 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் குடிநீருக்காகக் காவிரி ஆற்றை நம்பியுள்ளனர்.
திட்டமிடாமல் தண்ணீர் திறந்துவிட்டதால் சம்பா சாகுபடியை முழுமையாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு மே, ஜூன் மாதங்கள் வரையிலான குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு அணையில் தண்ணீர் இருக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படியும், காவிரி மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளபடியும் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீரைப் பெறுவதற்கு, கர்நாடக அரசை முதலமைச்சர் விஜய் அணுகியிருக்க வேண்டும். ஆனால், அதற்கான உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக தற்போது விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் குடிநீர் பிரச்சினையும் ஏற்படும் அபாயம் உள்ளது.
தமிழக மக்களின் நலனில் முதலமைச்சர் விஜய்க்குக் கவலை இல்லை. திட்டமிட்டுச் செயல்படும் அரசாக இந்த அரசு இல்லை. கர்நாடக அரசிடமிருந்து தமிழகத்துக்குத் தேவையான காவிரி நீரைப் பெறுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.
பிரதமர் தமிழகம் வந்தபோதுகூட, காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் ஒரு கோரிக்கையைக்கூட முன்வைக்கவில்லை. தமிழகத்துக்குத் தேவையான நீரைப் பெறுவதில் அரசு உரிய கவனம் செலுத்தாததால், விவசாயிகளும் பொதுமக்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு மிகப்பெரிய பிரச்சினையை சந்திக்க நேரிடும்" எனத் தெரிவித்தார்.
உட்கட்சி விவகாரம் தொடர்பாக பேசிய அவர், "அதிமுக பொதுக்குழுக் கூட்டம் விரைவில் கூட்டப்படும்" என்றார்.