📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 15, 2026 08:01 AM

விலைவாசி உயர்வில் தமிழ்நாடுதான் முதலிடம்

விலைவாசி உயர்வில் தமிழ்நாடுதான் முதலிடம்

ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை 5.25 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக கடந்த வாரம் உயர்த்தியது. இதனால் வங்கிகளில் வாங்கிய வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் போன்றவற்றுக்கான வட்டி விகிதம் உயரும் அபாயம் இருக்கிறது. நாட்டின் வளர்ச்சி விகிதம் சீராக இருந்தாலும், ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதற்கான காரணமாக பணவீக்கத்தை ரிசர்வ் வங்கி குறிப்பிட்டிருந்தது.

பணவீக்கம் என்றால் அனைவருக்கும் புரியும் வகையில் விலைவாசி உயர்வு என்று எளிமையாகக் குறிப்பிடவேண்டும் என்று 75 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் கற்றுக்கொடுத்திருக்கிறார். ஒரு நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை தொடர்ந்து உயர்வதையே பணவீக்கம் என்கிறார்கள். இதனால் பணத்தின் வாங்கும் திறன் குறைகிறது. அதாவது, முன்பு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வாங்கிய பொருட்களை இப்போது வாங்குவதற்கு அதிகப் பணம் தேவைப்படுகிறது. இதைத்தான் ரத்தினச் சுருக்கமாகத் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 'விலைவாசி உயர்வு' என்று குறிப்பிட்டார்.

நாட்டின் விலைவாசி நிலவரத்தை மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகம் அவ்வப்போது ஆய்வு செய்து அறிவித்து வருகிறது. இதற்காகப் பல்வேறு பொருட்களின் விலைகளை ஆய்வு செய்து, நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை வெளியிடுகிறது. அதன்படி, கடந்த செப்டம்பர் மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் 5.54 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வாகும்.

இது அகில இந்திய சராசரி என்றாலும் தமிழ்நாட்டில்தான் மிக அதிகமாக 6.81 சதவீதமாக பதிவாகியுள்ளது. ஆக இந்தியாவிலேயே மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் விலைவாசி உயர்வு அதிகமாகும். யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரியில் 6.86 ஆக பணவீக்கம் இருக்கிறது. பணவீக்கம் 2 சதவீதத்தில் இருந்து 6 சதவீதத்துக்குள் இருக்கவேண்டும். அந்த அளவை தமிழகமும், புதுச்சேரியும் தாண்டிவிட்டன.

உணவுப் பணவீக்கம்

விலைவாசி உயர்வால் தமிழக மக்கள் தவித்துவருகின்றனர். அடுத்து தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வருவதால் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள். ராக்கெட் வேகத்தில் எகிறிய இந்த விலைவாசி உயர்வுக்கு உணவுப் பொருட்களின் விலை அதிகரித்திருப்பதுதான் முக்கியக் காரணமாகும்.

அரிசி, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களை மக்கள் வாங்காமல் தவிர்க்கவும் முடியாது. இவற்றின் விலை உயர்வுடன் காய்கறிகளின் விலை உயர்வும் சேரும்போது, குடும்பங்களின் மாதாந்திரச் செலவுகள் வரம்பை மீறிச் செல்கின்றன. இதனால் நடுத்தரக் குடும்பங்கள் தங்கள் வருமானத்துக்குள் குடும்பச் செலவுகளை அடக்கமுடியாமல் சிரமப்படுகின்றன.

விலைவாசி உயர்வுக்கு சுட்டி பையன் எல் நினோவின் ஆட்டத்தால் பருவமழை பொய்த்தது முக்கியக் காரணமாகும். விலைவாசி உயர்வு அனைவரையும் கடுமையாக பாதித்துள்ளது. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இல்லத்தரசி ஒருவர், "மாதந்தோறும் வாங்கும் மளிகைப் பொருட்களுக்கான செலவு மட்டும் ரூ.2 ஆயிரம் அதிகரித்துள்ளது. காய்கறி விலை உயர்வையும் சேர்த்தால், இந்த மாதம் பற்றாக்குறை பட்ஜெட்தான். அடுத்து தீபாவளிச் செலவும் இருக்கிறது. எப்படித்தான் சமாளிக்கப்போகிறோமோ?" என்று வேதனையுடன் தெரிவித்தார்.