📅 Monday, 14 September 2026 IST | ஆவணி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 01, 2026 06:03 PM

“விஜய் பிரதமராக வேண்டும் என்று கூறுவதில் எந்த சர்ச்சையும் இல்லை”

“விஜய் பிரதமராக வேண்டும் என்று கூறுவதில் எந்த சர்ச்சையும் இல்லை”

தென்காசி மாவட்டம், நெல்கட்டும்செவலில் விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் சிலைக்கு அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜீவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

தென்காசி: “தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமராக வேண்டும் என்று எல்லோரும் ஆசைப்படுவது இயல்புதான். அந்தந்த காலகட்டத்தில் இயற்கையே ஒரு விசயத்தை தானாகவே உருவாக்கும். இதனால் கூட்டணியில் எந்த முரணும் இல்லை” என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவனின் 311-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, தென்காசி மாவட்டம், நெல்கட்டும்செவலில் பூலித்தேவன் நினைவு மாளிகையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் வி.கே.ராஜீவ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இவ்விழாவில், தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார், சங்கரன்கோவில் வருவாய் கோட்டாச்சியர் அனிதா, சிவகிரி வட்டாச்சியர் ராம் வெங்கடசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “இதற்கு முன்பு கனிமவளங்கள் 10 சதவீதம் பில் போட்டும், 90 சதவீதம் பில் போடாமலும் எடுத்துச் செல்லப்பட்டது. 99 சதவீத குவாரிகள் சட்டவிரோதமாக செயல்பட்டன. அதை முறைப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். முன்பு குறுநில மன்னர்கள் போல் செயல்பட்ட அமைச்சர்கள், ஆள் போட்டு வசூல் செய்தனர். இயற்கை வளங்களை கொள்ளையடித்து, வேறு மாநிலங்களில் விற்பனை செய்வதை தமிழக முதல்வர் அனுமதிக்க மாட்டார்.

மேட்டூர் அணைக்கு கர்நாடக அரசு தேவையான தண்ணீரை தரவில்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருக்கும் நீர், விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க திறந்து விடப்படுகிறது. விஜய் பிரதமராக வேண்டும் என்று கூறுவதில் எந்த சர்ச்சையும் இல்லை. தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமராக வேண்டும் என்று எல்லோரும் ஆசைப்படுவது இயல்புதான். அந்தந்த காலகட்டத்தில் இயற்கையே ஒரு விசயத்தை தானாகவே உருவாக்கும். இதை விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் கூட்டணியில் எந்த முரணும் இல்லை.

கடந்த ஆட்சியில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டது. இதனால் 5 ஆயிரம் கோடி ஊழல் செய்யப்பட்டுள்ளது. இதை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். கடந்த ஆட்சியில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து முறையாக விசாரணை நடைபெற்று வருகிறது. யாரையும் நாங்கள் மிரட்டவில்லை. ஒவ்வொரு துறையிலும் நடந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மின் உற்பத்திக்கு முதலீடு செய்வதற்கான நிதி ஆதாரம் அரசிடம் இல்லை. எனவே தனியார் பங்களிப்பை அனுமதிப்பது அவசியம்” என்று கூறினார்.