வெள்ளி வென்றார் மீராபாய் சானு: ஆசிய விளையாட்டு பளுதூக்குதலில்...
நகோயா: ஆசிய விளையாட்டு பளுதுாக்குதலில் இந்தியாவின் மீராபாய் சானு, வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஜப்பானின் அய்ச்சி - நகோயாவில், ஆசிய விளையாட்டு 20வது சீசன் நடக்கிறது. நேற்று பெண்களுக்கான பளுதுாக்குதல் போட்டி நடந்தது. 49 கிலோ பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு 32, களமிறங்கினார். முதலில் 'ஸ்னாட்ச்' முறையில், மூன்றாவது வாய்ப்பில் அதிகபட்சம் 87 கிலோ துாக்கினார்.
அடுத்து கிளீன் அண்டு ஜெர்க்' முறையில், இரண்டாவது வாய்ப்பில் 111 கிலோ துாக்கினார். இரண்டாவது இடம் உறுதியானதை அடுத்து, மூன்றாவது வாய்ப்பை பயன்படுத்தவில்லை. ஒட்டுமொத்தம் மீராபாய் சானு 198 கிலோ துாக்கி, வெள்ளிப் பதக்கம் வசப்படுத்தினார். ஆசிய விளையாட்டில் மீராபாய் சானு வென்ற முதல் பதக்கம் இது ஆனது. வட கொரியாவின் கம் சாங் ரி (215) தங்கம், இந்தோனேஷியாவின் தியானா (191) வெண்கலப் பதக்கம் பெற்றனர்.
ஞானேஸ்வரி ஏமாற்றம்
53 கிலோ பிரிவில் இந்தியாவின் ஞானேஸ்வரி பங்கேற்றார். முதலில் 'ஸ்னாட்ச்' முறையில் 87 கிலோ துாக்கினார். அடுத்து 'கிளீன் அண்டு ஜெர்க்' முறையில் 108 கிலோ துாக்கினார். ஒட்டுமொத்தமாக 195 கிலோ மட்டும் துாக்கிய ஞானேஸ்வரிக்கு, 8வது இடம் தான் கிடைத்தது. வடகொரியாவின் கியாங் காங் (223), சீனாவின் ஜின்லன் (218), தாய்லாந்தின் சுரோத்சனா (214) முதல் மூன்று பதக்கம் வென்றனர்.
12 ஆண்டு ஏக்கம்
மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானு கூறுகையில்,'' ஆசிய விளையாட்டில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது எனது கனவு. இதற்காக 12 ஆண்டு முயற்சித்தேன். ஒருவழியாக பதக்கம் வென்றதால், மனது 'ரிலாக்ஸ்' ஆக உள்ளது,'' என்றார்.
ஒரே நாளில் 5 பதக்கம்
ஆசிய விளையாட்டில் நேற்று பளுதுாக்குதல் (1 வெள்ளி), துப்பாக்கிசுடுதல் (2 வெண்கலம்), சாப்ட் டென்னிஸ் (1 வெண்கலம்), பாட்மின்டன் (1 வெண்கலம்) என, ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 பதக்கம் கிடைத்தன.
28 ஆண்டுக்குப் பின்...
ஆசிய விளையாட்டு பெண்களுக்கான பளுதுாக்குதலில் கடைசியாக 1998ல் இந்தியாவின் கர்ணம் மல்லேஸ்வரி, வெள்ளி வென்றார். தற்போது, 28 ஆண்டுக்குப் பின் மீராபாய் சானு, பதக்கம் (வெள்ளி) வென்றுள்ளார்.
* தவிர, கர்ணம் மல்லேஸ்வரிக்கு அடுத்து, ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப், காமன்வெல்த், ஆசிய விளையாட்டு என நான்கு முக்கிய போட்டிகளிலும் பதக்கம் வென்ற இரண்டாவது பளுதுாக்குதல் வீராங்கனை என பெருமை பெற்றார் மீராபாய் சானு.