வேலுமணி தலைமையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆலோசனை: கட்சியை கைப்பற்றி தவெக அரசுக்கு ஆதரவளிக்க ரகசிய திட்டம்?
சென்னை: அதிமுக, பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் தொடர் தோல்விகளை சந்தித்து வருவதாக குற்றஞ்சாட்டி வரும் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பினர் பழனிசாமியை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, தவெக அரசுக்கு ஆதரவளிக்க ரகசியத் திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 2026 தேர்தலுக்குப் பிறகு, தவெக அரசுக்கு ஆதரவளிப்பதா, வேண்டாமா என்ற நிலைப்பாட்டில் இருவேறு கருத்துகள் உருவானது. பழனிசாமி ஆதரவளிக்கவில்லை. எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான அணி தவெக அரசுக்கு ஆதவளித்தது.
அன்று முதலே அதிமுக இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது. அப்போது எழுந்த உள்கட்சி பூசல் தற்போது வரை நீடித்து வருகிறது. பொதுத் தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க பொதுக்குழுவை கூட்டுமாறு அதிருப்தி அணியினர் வலியுறுத்தினர்.
இதற்கிடையே, அதிமுகவைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர். இவர்களில் 2 பேர் இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றனர்.
கடந்த தேர்தலில் வென்ற அதிமுக இந்த இரு தொகுதிகளிலும், இம்முறை 3-ம் இடத்தை பிடித்தது. இதன்தொடர்ச்சியாக அதிமுகவில் உட்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ளது. இதற்கு மேல் பழனிசாமி அதிமுக தலைமை பொறுப்பை வகிக்கக் கூடாது என்பதில் வேலுமணி தரப்பு உறுதியாக உள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், கடந்த இரு நாட்களாக வேலுமணி, சண்முகம் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்தனர். இதில் நாமும் ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்து இடைத்தேர்தலை எதிர்கொள்ளலாமா என ஆலோசிக்கப்பட்டது.
அதன்பிறகு, பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளர் பதவியிலிருந்து பழனிசாமியை நீக்கிவிட்டு, கட்சியைக் கைப்பற்றி தவெக அரசுக்கு அதிமுக சார்பில் ஆதரவளிப்பது தொடர்பாக ரகசியத் திட்டம் தீட்டி வருவதாகவும் பல்வேறு மாவட்ட செயலாளர்களை தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது, “அதிமுகவுக்கு எதிராக செயல்படும் அவர்கள் செல்வச்செழிப்பில் உள்ளனர். அதை அதிமுக என்ற கட்சிதான் அவர்களுக்கு அளித்தது.
அதை அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும். அவர்களின் முயற்சி தோற்கும். ஒரு மாவட்ட செயலாளர் கூட அவர்கள் பக்கம் செல்லமாட்டார்கள். அனைவரும் பழனிசாமி பக்கமே உறுதியாக இருப்பார்கள்” என்றார்.