📅 Sunday, 06 September 2026 IST | ஆவணி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 06, 2026 11:03 AM

உக்ரைன் மீதான தாக்குதலை 3 நாட்களுக்கு நிறுத்தி வைக்க ரஷ்ய அதிபர் புடின் உத்தரவு; காரணம் என்ன?

உக்ரைன் மீதான தாக்குதலை 3 நாட்களுக்கு நிறுத்தி வைக்க ரஷ்ய அதிபர் புடின் உத்தரவு; காரணம் என்ன?

உக்ரைன் மீதான தாக்குதலை 3 நாட்களுக்கு நிறுத்தி வைக்க ரஷ்ய அதிபர் புடின் உத்தரவு; காரணம் என்ன?

உக்ரைன் தலைநகர் கீவ் மீதான வான்வழித் தாக்குதல்களை மூன்று நாட்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க அதிபரின் சிறப்புத் தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிற்கு வருகை தந்துள்ள நிலையில் இந்த முக்கியமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நான்கரை ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முக்கியப் பேச்சுவார்த்தைகளை ரஷ்ய அதிபருடன் இந்த தூதுக்குழுவினர் நடத்தவுள்ளனர்.

அமெரிக்கத் தூதர்களின் வருகையை முன்னிட்டு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முன்வைத்த தற்காலிகப் போர் நிறுத்தக் கோரிக்கையைத் தொடர்ந்தே புதின் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அமெரிக்கத் தூதுக்குழுவினர் பாதுகாப்பாக வந்து செல்வதற்கு ஏதுவாகத் தங்கள் தரப்பில் இருந்து எவ்வித வான்வழித் தாக்குதல்களும் நடத்தப்படாது என ஜெலென்ஸ்கி உறுதியளித்திருந்தார்.

அதேபோல ரஷ்ய தரப்பும் வான்வழி அமைதியை உறுதி செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது ரஷ்யாவும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.

தூதர்கள் வருகை

அமெரிக்கத் தூதர்கள் முதலில் மாஸ்கோவிலும், அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் தலைநகர் கெய்விலும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் மிகவும் பயனுள்ளதாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அமைய வேண்டும் என்பதே உக்ரைனின் முதன்மை இலக்காகும் என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தூதர்கள் கொண்டு வரும் முன்மொழிவுகள் மற்றும் அதற்கு ரஷ்யா அளிக்கும் பதில்களின் அடிப்படையில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.

அமைதி முயற்சி

உக்ரைனின் உளவுத்துறை தலைமையகத்தைக் குறிவைத்து ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களிலேயே இந்தத் தற்காலிகப் போர் நிறுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தகது.

உக்ரைன் உளவுத்துறை தலைவரின் அலுவலகத்தையே இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியிருந்தார்.

இருப்பினும், அமெரிக்காவின் தீவிர ராஜதந்திர முயற்சிகள் காரணமாக இரு நாடுகளும் தற்காலிகப் போர் நிறுத்தத்திற்கு சம்மதித்துள்ளதால் இந்தப் பேச்சுவார்த்தை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.