📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 25, 2026 06:03 PM

‘டோரதி’ திரைப்படம் உலகளவில் பேசப்படும்: கீர்த்தி சுரேஷ்

‘டோரதி’ திரைப்படம் உலகளவில் பேசப்படும்: கீர்த்தி சுரேஷ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தை நடிகர்கள் தனுஷ், ரிஷிகாந்த், நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

மதுரையைப் பின்னணியாகக் கொண்டு 1990களின் காலக்கட்டத்தில் நடக்கும் கதையாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

நட்பையும் காதலையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் விளம்பர நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

அப்போது பேசிய கீர்த்தி, “பணம், புகழைத் தாண்டி பிரபலங்களுக்குக் கிடைக்கும் ரசிகர்களின் அன்பு என்பது விலையில்லாப் பொக்கிஷம்.

“ரசிகர்களின் பேரன்பை அனுபவித்து வரும் நான் எப்போதுமே என்னை ஒரு அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். இத்திரையுலகில் எனது பங்களிப்பும் இருப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன்,” என்று கூறினார்.

தனக்கு மதுரை நகரத்தை மிகவும் பிடிக்கும் என்று குறிப்பிட்ட அவர், ‘டோரதி’ படத்தின் படப்பிடிப்பும் மதுரை சுற்றுவட்டாரத்தில் நடைபெற்றதாகத் தெரிவித்தார்.

இசைஞானி இளையராஜாவின் இசைக்குத் தாம் மிகப்பெரிய ரசிகை என்றும் அவரது இசையமைப்பில் நடனமாடியது குறித்து பெருமிதப்படுகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

“இளையராஜா இசையில் நடிக்கும் வாய்ப்பு கிட்டும் என்று என் கனவில் கூட நினைக்கவில்லை,” என நெகிழ்ச்சியுடன் கூறியவர், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடமிருந்து தாம் பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

இத்திரைப்படத்தில் தாம் ஒரு மலையாளப் பெண்ணாக நடித்துள்ளதாகவும் இந்தியா மட்டுமன்றி உலகளவிலும் இத்திரைப்படம் பேசப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மீண்டும் தேசிய விருது கிடைக்குமா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, இம்முறை ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் தேசிய விருதைப் பெறட்டும் என்று கீர்த்தி புன்முறுவலுடன் கூறினார்.

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) வெளியீடான இத்திரைப்படம் குறித்து நடிகர் ரிஷிகாந்த் பேசுகையில், “என்னை நம்பி வாய்ப்பளித்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிற்கு மனமார்ந்த நன்றி. இப்படத்திற்காக மதுரையில் இரண்டு மாதங்கள் தங்கி சிறப்புப் பயிற்சி பெற்றேன்,” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

ரிஷிகாந்தின் உடல் மொழி, தோற்றம், பேச்சு வழக்கில் ரஜினிகாந்தின் சாயல் இருப்பதாக சமூக ஊடகங்களிலும் சினிமா வட்டாரங்களிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பேசிய ரிஷிகாந்த், ரஜினிகாந்த் சாருடன் என்னை ஒப்பிட்டுப் பேசுவது பற்றித் தொடர்ச்சியாக என் கவனத்திற்கு வந்துகொண்டே இருக்கிறது. இருப்பினும், எவருடைய சாயலாகவும் அறியப்படாமல், எனக்கென்று ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கவே விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

10வது படத்தில் புதிய கூட்டணி

‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘பேட்ட’, ‘மகான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ரெட்ரோ’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், தற்போது தனது 10வது திரைப்படமாக ‘டோரதி’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘டோரதி’ படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இது அவரது திரையுலகப் பயணத்தில் 1540வது படமாகும்.

‘டோரதி’ படத்தில் இளையராஜாவின் பின்னணி இசை உங்களை மிரளவைக்கும் என்று நடிகர் தனுசும் பாராட்டியுள்ளார்.