தருமபுரி அருகே அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த கணித ஆசிரியர் போக்சோவில் கைது!!
தருமபுரி அருகே அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த கணித ஆசிரியர் போக்சோவில் கைது!!
தருமபுரி: தருமபுரி அருகே அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தருமபுரி மாவட்டம் அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வரும் தங்கவேல், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அங்கே பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், தொலைபேசி வாயிலாக ஆபாச குறுஞ்செய்திகளையும் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதை கண்டித்த பெற்றோர்கள், பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியரிடம் முறையிட்டனர். தொடர்ந்து, மாவட்டக் கல்வி அலுவலர் பள்ளியில் நேரில் விசாரணை நடத்தினார். மேலும், பாப்பாரப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆசிரியர் தங்கவேலுவை அழைத்து சென்றனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், செல்போனுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதும் உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் ஆசிரியர் தங்கவேலுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனிடையே, இந்த ஆசிரியர் மீது ஏற்கனவே போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதும், பல்வேறு பள்ளிகளில் இதுபோன்று தொடர்ந்து நடந்து வந்ததன் காரணமாகவே அவர் இதற்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.