தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் மறியல்
தஞ்சாவூர்: மேட்டூர் அணையில், தண்ணீர் திறந்து, 40 நாட்களை கடந்தும், உய்யக்கொண்டான் கால்வாய் நீட்டிப்பு, புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில், தண்ணீர் வராததால், நீர்வளத்துறை அதிகாரிகளிடம், தஞ்சை மாவட்ட விவசாயிகள் மனு அளித்தனர். நடவடிக்கை எடுக்காததால், கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் அறிவித்தனர்.
இதையடுத்து, தாசில்தார், ஆர்.டி.ஓ., கலெக்டர் ஆகியோர் நடத்திய பேச்சு தோல்வியடைந்தது.
தொடர்ந்து, நேற்று செங்கிப்பட்டியில், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலர் கண்ணன் தலைமையில், விவசாயிகள் திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். பின், தனியார் மண்டபத்தில், நீர்வளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி, ஒரு வாரத்துக்குள் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.