தங்கம் வென்ற இந்திய சிங்கப்பெண்கள்: ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்டில்...
நிஸ்ஸின்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்தது. நேற்று நடந்த பெண்கள் கிரிக்கெட் பைனலில் இந்திய அணி, இலங்கையை 147 ரன்னில் வீழ்த்தியது.
ஜப்பானில் ஆசிய விளையாட்டு 20வது சீசன் நடக்கிறது. பெண்கள் கிரிக்கெட் பைனலில் நேற்று, நடப்பு சாம்பியன் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. நகோயா அருகில் உள்ள நிஸ்ஸின் என்ற இடத்தில் (கரோகி தடகள பார்க்) நடந்த இப்போட்டியில் 'டாஸ்' வென்ற இந்தியா, 'பேட்டிங்' செய்தது.
ஸ்மிருதி அபாரம்
இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இலங்கை அணிக்கு எதிராக வழக்கம் போல சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஸ்மிருதி, தொடர்ந்து மூன்றாவது முறையாக அரைசதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 99 ரன் சேர்த்த போது, ஷபாலி (48 ரன், 29 பந்து ) அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து திரும்பினார்.
பந்துகளை வீணடித்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 19 ரன் (17 பந்து) எடுத்தார். 45 பந்தில் 79 ரன் எடுத்த ஸ்மிருதி, சுகந்திகா பந்தில் வீழ்ந்தார். கடைசி நேரத்தில் மிரட்டிய ரிச்சா, 3 சிக்சர், 6 பவுண்டரி அடித்தார்.
இந்திய அணி 20 ஓவரில் 216/3 ரன் குவித்தது. ஆசிய விளையாட்டில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இது ஆனது. ரிச்சா (49 ரன், 22 பந்து), பார்தி (7) அவுட்டாகாமல் இருந்தனர்.
தீப்தி கலக்கல்
இலங்கை அணிக்கு இமேஷா (3), கேப்டன் சமாரி அத்தபத்து ஜோடி துவக்கம் தந்தது. ஹாசினி (3) ஏமாற்றினார். மறுபக்கம் வேகமாக ரன் சேர்த்த சமாரி (29), தீப்தி சர்மா சுழலில் சிக்கினார். 'டி-20' அரங்கில் 8வது முறையாக இவரிடம் அவுட்டானார் சமாரி.
பின் வந்த கவிஷா (11), கவுஷினி (14) தவிர, வேறு யாரும் ஒற்றை இலக்க ரன்களை தாண்டவில்லை. இலங்கை அணி 15.4 ஓவரில் 69 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் தீப்தி 3, ஷபாலி, ஷ்ரேயான்கா, ஸ்ரீ சரணி தலா 2 விக்கெட் சாய்த்தனர். இதையடுத்து இந்திய பெண்கள் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கப்பதக்கம் கைப்பற்றியது. நடப்பு ஆசிய விளையாட்டில் இந்தியா வென்ற முதல் தங்கம் இது ஆனது.
மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் அணி (145/8), வங்கதேசத்தை (114/7) 31 ரன்னில் வென்று, வெண்கலம் வசப்படுத்தியது.
நேற்று இந்தியா 147 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெண்கள் 'டி-20'ல் ரன் அடிப்படையில் இந்தியா பெற்ற மிகப்பெரிய வெற்றி இது ஆனது. முன்னதாக 2018 ஆசிய கோப்பையில் மலேசியாவுக்கு எதிராக 142 ரன்னில் வென்றிருந்தது.
'டி-20' அரங்கில் இந்திய பெண்கள் அணி (8 முறை) தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன் 7 போட்டியில் (2018) வென்றது.
* இலங்கை அணிக்கு எதிராக, தொடர்ந்து 8வது வெற்றி பெற்றது இந்திய பெண்கள் அணி.
'நம்பர்-1' இடம்
'பெஸ்ட் பார்னர்ஷிப்'
பெண்கள் 'டி-20'ல் எந்த ஒரு விக்கெட்டுக்கும் இணைந்து, 4000 ரன்னுக்கும் மேல் சேர்த்த முதல் ஜோடி என இந்தியாவின் ஸ்மிருதி, ஷபாலி பெருமை பெற்றனர். அடுத்த இடத்தில் ஈஷா, தீர்த்தா ஜோடி (2949, எமிரேட்ஸ்) உள்ளது.
நேற்று 13 ரன் எடுத்த போது, மூன்றுவித கிரிக்கெட்டில் 11,000 ரன் என்ற மைல்கல்லை எட்டிய முதல் வீராங்கனை ஆனார் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா. இவர் 9 டெஸ்ட் (788 ரன்), 120 ஒருநாள் (5411), 179 'டி-20'ல் (4867) என மொத்தம் 11,066 ரன் எடுத்துள்ளார். இந்தியாவின் மிதாலி ராஜ் (10,868) அடுத்து உள்ளார்.
கமலினி எப்படி
தமிழகத்தின் மதுரையை சேர்ந்தவர் விக்கெட் கீப்பர்- பேட்டர் கமலினி 18. ஆசிய விளையாட்டுக்கான இந்திய அணியில் இடம் பெற்ற இவர், 3 போட்டியில் 3 ரன் (வங்கதேசம்) எடுத்தார். 2 'கேட்ச்' பிடித்தார்.