📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 19, 2026 03:31 AM

தமிழர் பேரவை: 75 ஆண்டுகால சமூக சேவையின் மைல்கல்

தமிழர் பேரவை: 75 ஆண்டுகால சமூக சேவையின் மைல்கல்

சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தை ஒரே குடையின்கீழ் ஒன்றிணைத்து, அவர்களின் கல்வி, பொருளியல், சமூகத் தகுதிகளை உயர்த்தும் நோக்குடன் 1951ஆம் ஆண்டு தமிழர் பிரதிநிதித்துவ சபை தொடங்கப்பட்டது.

நிறுவனர் தமிழவேள் கோ. சாரங்கபாணியால் அன்று விதைக்கப்பட்ட அந்தச் சிறுவிதை, 75 ஆண்டுகளில் ஆழமாக வேரூன்றி வளர்ந்துள்ளது.

இன்று 42 இணை அமைப்புகளையும் 1,500க்கும் மேற்பட்ட தனிநபர் உறுப்பினர்களையும் கொண்டுள்ள பேரவை, தனது 75வது ஆண்டு பவள விழாவைக் கொண்டாடுகிறது.

தி ரிட்ஸ் கார்ல்டன், மில்லேனியா சிங்கப்பூர் ஹோட்டலில் இன்று (செப்டம்பர் 19) மாலை நடைபெறவிருக்கும் பவள விழாக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் லாரன்ஸ் வோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

கடந்த கால அனுபவங்களை அடித்தளமாகக் கொண்டு, கால மாற்றங்களுக்கும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கும் ஏற்ப தன்னைத் தகவமைத்துக்கொண்டு எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது.

வரலாற்றுப் பயணமும் சமூகத் தொண்டின் பரிணாமமும்

தமிழவேள் கோ.சாரங்கபாணியும் தொலைநோக்குப் பார்வையுடைய தமிழ்ச் சமூகத் தலைவர்களும் இணைந்து 1951ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி ‘தமிழர் பிரதிநிதித்துவ சபை’யைத் தொடங்கினர். பின்னர் அது 1981ஆம் ஆண்டு ‘தமிழர் பேரவை’ எனப் பெயர்மாற்றம் கண்டது.

ஆயினும், ஆங்கிலத்தில் Tamils Representative Council எனும் பெயரிலேயே அது தொடர்கிறது.

சேவையை விரிவுபடுத்தி, புதிய பங்காளித்துவங்களை உருவாக்கும் வகையில், 1980களில் திரு கந்தசாமியின் தலைமையில் தமிழர் பேரவை மறுசீரமைக்கப்பட்டது. 1994ல் திரு பா.கேசவன் தலைமைப் பொறுப்பை ஏற்க, தமிழர் பேரவையின் சேவை மேலும் விரிவடைந்தது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

1984ஆம் ஆண்டு ராணுவச் சேவையில் இருந்தபோது தொண்டூழியராகப் பேரவையில் முதன்முதலில் இணைந்தவர் அதன் தற்போதைய தலைவர் வெ. பாண்டியன், 64. கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தலைவராகப் பேரவையை வழிநடத்திவரும் அவர், பேரவையின் தொடக்கக்கால நோக்கத்தை நினைவுகூர்ந்தார்.

காலத்தின் தேவைக்கு ஏற்ப அமைப்பின் சட்டதிட்டங்களும் அணுகுமுறைகளும் மாறினாலும், தமிழ்ச் சமூகத்தை மேம்படுத்துவதும் மாணவர்களைக் கல்வியில் உயர்த்துவதும் பேரவையின் அடிப்படை நோக்கங்களாகத் தொடர்ந்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து, தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்திற்காகத் தமிழர் பேரவை தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.

கல்வி மேம்பாடே சமூக உயர்வுக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையில், கடந்த 25 ஆண்டுகளில் 5,000க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு $500,000க்கும் அதிகமான கல்வி உதவிநிதியைப் பேரவை வழங்கியுள்ளது.

தேசிய அளவிலான சொற்போர் தமிழ் விவாதப் போட்டி, தாய்மொழி நாள் கொண்டாட்டங்கள், இளையர்களின் தொழில்வாய்ப்புகளை விரிவுபடுத்தும் ‘மனித நூலகம்’ கலந்துரையாடல்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைப் பேரவை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இன்றைய இளையர்களிடையே தமிழ்மொழியைப் பேணுவதில் உள்ள சவால்கள் குறித்து தமிழ் பேசுவதில் சிரமம் உள்ள இளையர்களுக்கும் பேரவையில் இடமளிப்பது அவசியம் என்றார் திரு பாண்டியன்.

“தமிழை இலக்கிய நயத்துடன் பேசினால் மட்டுமே பேரவையில் இணைய முடியும் என்று நிபந்தனை விதித்தால் இளையர்கள் விலகிச் சென்றுவிடுவார்கள்.

“தமிழ் பேசச் சிரமப்படும் இளையர்களுக்கும் வாய்ப்பளித்து, அவர்களை ஊக்கப்படுத்தும் சூழலை உருவாக்கும்போது அவர்களே தங்களின் உரையாடல் திறனை வளர்த்துக்கொள்ள ஊக்கம் பெறுவர்,” என்றார் அவர்.

மேலும், தமிழ் இளையர் அமைப்பான ‘தமிழா’ போன்ற பங்காளி அமைப்புகளுடன் இணைந்து, 11 முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களின் கல்வி, தலைமைத்துவப் பண்புகளை நாடகம், நடனம் போன்ற கலைகள் மூலம் ஈடுபாட்டுடன் வளர்க்கும் ‘புராஜெக்ட் தூண்’ (Project Thoon) எனும் திட்டத்திற்குப் பேரவை ஆதரவளித்து வருகிறது.

அத்துடன், முதியவர்கள் மின்னிலக்க மோசடிகளில் சிக்காமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘ஐஃபோக்ஸ்’ (iFolks) திட்டத்தையும் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது.

பேரவையின் வலிமை அதன் இணை அமைப்புகளில் இருப்பதாகக் கூறினார் அதன் நிர்வாகக் குழு உறுப்பினரும் சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவருமான முகமது பிலால்.

2018ஆம் ஆண்டு இந்திய முஸ்லிம் பேரவையின் பிரதிநிதியாகப் பேரவையில் இணைந்த அவர், தனித்தனி அமைப்புகளாகச் சிறிய அளவில் சேவையாற்றுவதைக் காட்டிலும், பேரவை எனும் கூட்டமைப்பின்கீழ் இணைந்து செயல்படும்போது சமூகத்தைச் சென்றடைவது பல மடங்கு அதிகரிப்பதாகக் குறிப்பிட்டார்.

பல்வேறு திட்டங்கள் சமூகத்தின் பலதரப்பினரையும் சென்றடைவதற்கு இணை அமைப்புகள் பாலமாகத் திகழ்வதாக அவர் கூறினார்.

ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் தேசிய தினக் கொண்டாட்டங்கள், பேரவையின் இணை அமைப்புகளின் ஒற்றுமையைப் பறைசாற்றுவதுடன், அதன் செயல்பாடுகளுக்கான முக்கிய நிதி திரட்டும் நிகழ்ச்சியாகவும் அமைந்துள்ளன.

இளையர் பிரிவின் பாய்ச்சல்

பேரவையின் அடுத்தகட்டப் பாய்ச்சலுக்கு மிக முக்கியக் காரணம், 2018ல் அதன் இளையர் பிரிவின் மறுமலர்ச்சியாகும்.

அப்போது இளையர் பிரிவை மறுசீரமைக்கும் பணியில் ஈடுபட்ட தற்போதைய நிர்வாகக் குழு உறுப்பினர் பா. தயாளன், 32, இளையர்களின் தேவைகளை அறிய ‘மாத்தி யோசி’ என்ற தலைப்பில் கள ஆய்வுகளை நடத்தியதாகக் கூறினார். முக்கியத் தரவுகள் சேகரிக்கப்பட்டு, அதற்கேற்ப புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டன.

இளையர்களுக்கு விழா ஏற்பாட்டுப் பணிகளை மட்டும் வழங்காமல் புதிய திட்டங்களைத் தாங்களாகவே யோசித்துச் செயல்படுத்துவதற்கான சுதந்திரத்தைப் பேரவை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொண்டூழியர்களின் மாறுபட்ட வாழ்வியல் சூழல்களுக்கு ஏற்ப நீக்குப்போக்கான செயல்முறைகளையும், திட்டங்களின் தொடர்ச்சியை உறுதிசெய்யும் ஆவண நடைமுறைகளையும் உருவாக்கியதாகவும் அவர் கூறினார். இந்த அணுகுமுறைதான் புதிய தலைமுறையினர் பேரவையில் தடையின்றிப் பங்களிக்க வழிவகுத்ததாக திரு தயாளன் தெரிவித்தார்.

“சிலரோடு தொடங்கப்பட்ட எங்கள் பயணம், இன்று நூற்றுக்கும் மேற்பட்ட இளையர் தொண்டூழியர்களைக் கொண்ட வலுவான படையாக மாறியுள்ளது.

“இளையர்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களாக மட்டும் பயன்படுத்தாமல், அமைப்பின் முக்கிய முடிவுகளை எடுக்கும் தலைமைத்துவப் பொறுப்புகளைப் பேரவை எங்களுக்கு முழுச் சுதந்திரத்துடன் வழங்கியுள்ளது,” என்று திரு தயாளன் குறிப்பிட்டார்.

தலைமைத்துவத்தில் இளையர்களின் பங்களிப்பு

பேரவையின் இளையர் அணி தனித்துச் செயல்படாமல், நிர்வாகச் செயற்குழுவின் முக்கிய அங்கமாகவே இணைந்து செயல்படுவதாக பேரவையின் துணைத் தலைவரும் இளையர் பிரிவு தலைவருமான 27 வயது ஷெரீன் பேகம் கூறினார்.

“இளையர்கள் அனைவரும் நிர்வாகச் செயற்குழுவின் அங்கமாகவே மாறிவிட்டனர். மூத்த தலைவர்கள் வழிகாட்டி ஆலோசனைகளை வழங்க, முன்னணித் திட்டங்களை இளையர்களே முன்னின்று நடத்துகின்றனர்,” என்று அவர் கூறினார்.

இன்றைய இளையர்களின் தேவைகளுக்கு ஏற்ப, ‘ஹௌ டு அடல்ட்’ (How to Adult) போன்ற வாழ்க்கைத் திறன் பயிலரங்குகளையும், டிக்டாக் போன்ற சமூக ஊடகங்களில் தமிழ் மொழியைக் கொண்டுசேர்க்கும் மின்னிலக்க முயற்சிகளையும் இளையர்களே முன்னின்று நடத்துகின்றனர்.

தமிழ் பேசச் சிரமப்படும் இளையர்களாக இருந்தாலும், அவர்களையும் அரவணைத்துத் தயக்கமின்றிப் பங்கேற்பதை ஊக்குவிக்கும் நீக்குப்போக்கான அணுகுமுறையைப் பேரவை பின்பற்றுவது இளையர்களின் ஈடுபாட்டை அதிகரித்துள்ளது.

மூத்த தலைவர்களின் ஆதரவும் வழிகாட்டலும் இளையர்களைத் தொடர்ந்து செயல்பட ஊக்குவிப்பதாக பேரவையின் பொதுச் செயலாளர் விக்னேஷ்வரன், 32, குறிப்பிட்டார்.

பேரவையில் கடுமையான செயல்திறன் இலக்குகள் அல்லது கட்டுப்பாடுகள் இல்லாமல், சமூகத் தேவைக்கு ஏற்ப திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான சுதந்திரம் இருப்பதாகத் தெரிவித்தார்.

“சமூகத்தில் ஒருவருக்குப் பயனளித்தாலும் அது உயரிய சேவையே என்ற நோக்கில் நிகழ்ச்சியை நடத்தினோம். இத்தகைய தெளிவான தொலைநோக்கும் குடும்பம் போன்ற ஆதரவுச் சூழலுமே எங்களைப் பேரவையுடன் தொடர்ந்து பயணிக்க வைக்கிறது,” என்றார்.

பவள விழா மைல்கற்கள்

தனது 75வது ஆண்டை முன்னிட்டு, சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் பேரவை முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

சிங்கப்பூர் இந்தியக் கல்வி அறக்கட்டளையுடனான ஒப்பந்தத்தின்மூலம் இதுவரை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவிநிதிகள் இனி உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி, பலதுறைத் தொழிற்கல்லூரி, தொழில்நுட்பக் கல்விக் கழக, பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர்க்கும் விரிவுபடுத்தப்படவுள்ளன.

லி‌‌‌ஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம், சிங்கப்பூர் இந்திய உணவகங்கள் சங்கம் ஆகியவற்றுடனான ஒப்பந்தங்கள்மூலம் செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ந்துவரும் சூழலில் இளையர்களுக்குத் தேவையான தொழிற்பயிற்சிகள், வேலைவாய்ப்பு வழிகாட்டல்கள், தொழில்முனைப்பிற்கு ஆயத்தப்படுத்துதல் ஆகியவற்றை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பேரவையின் 75 ஆண்டுகால வரலாறு, முக்கிய நிகழ்வுகள், புகைப்படங்கள், சமூகப் பங்களிப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சிறப்பு மின்னிலக்க வரலாற்று நூலும் வெளியிடப்படுகிறது.

பேரவையின் இணையத்தளமும் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் புத்தாக்கம் செய்யப்பட்டு, செப்டம்பர் 19ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

நூற்றாண்டை நோக்கிய பயணம்

அடுத்த 25 ஆண்டுகளில் தனது 100வது ஆண்டை நோக்கி நடைபோடும் பேரவை, தனது நிதிப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் அதிக அளவிலான சமூக ஆதரவைப் பெறவும் தொண்டு நிறுவன (Charity) பட்டத்தைப் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

காலத்தின் தேவைக்கு ஏற்ப அமைப்பின் சட்டத்திட்டங்களும் தொடர்ந்து மேம்படுத்தப்படுகின்றன. தலைமுறை மாற்றத்தின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய திரு பாண்டியன், சமூகச் சேவைக்கு பொறுமையும் காலத்துக்கு ஏற்ப மாறும் மனப்பக்குவமும் அவசியம் என்றார்.

“இளையர்களுக்கு முழுமையான வழிகாட்டலையும் சுதந்திரத்தையும் வழங்கி, பேரவையின் அடுத்தகட்டத் தலைமைத்துவப் பொறுப்புகளை ஏற்க அவர்களைத் தயார்ப்படுத்துவதே எங்களின் நோக்கம்,” என்று அவர் கூறினார்.

முக்கால் நூற்றாண்டாகத் தலைமுறைகளை இணைத்து வந்துள்ள தமிழர் பேரவை, கடந்த காலத்தின் அனுபவங்களைத் தக்கவைத்தபடி புதிய தலைமுறையின் கைகளில் தனது அடுத்தகட்ட பயணத்தை ஒப்படைக்கத் தயாராகி வருகிறது.